சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்த நடிகர் நகுல்

ராணுவத்தின் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று "தி டார்க் ஹெவன்" படத்தின் நிகழ்ச்சியில் நடிகர் நகுல் கூறியுள்ளார்.;

Update:2024-11-10 18:21 IST

சென்னை,

நடிகை தேவயானியின் இளைய சகோதரர் நகுல், சங்கர் இயக்கிய 'பாய்ஸ் 'படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். நகுல் நடப்பில் கடந்த 2008 -ம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த 'வாஸ்கோடகாமா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் நகுல் நடிக்கும் படம் 'தி டார்க் ஹெவன்'. டீம் பி புரொடக்சன் ஹவுஸ் தயாரிக்கும் இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகிறது. இந்தப் படத்தில் புலனாய்வு செய்யும் காவல் அதிகாரியாக நகுல் நடிக்கிறார். ரேணு சௌந்தர் நாயகியாக நடிக்கிறார். சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், ஆண்டனி பிரகன், டேனி தயால், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்தின் நிகழ்ச்சியில் நடிகர் நகுல் பேசும் போது "இதில் நான் போலீசாக நடித்திருக்கிறேன். நான் சினிமாவிற்கு வந்து இப்போது தான் முதல் முறையாக இப்படி நடிக்கிறேன். எனவே முதலில் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. எனக்குச் சின்ன வயதில் இருந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசை. காக்கி யூனிபார்ம் மீது எனக்கு ஒரு காதல் உண்டு. நான் நடிக்க வந்து 20 ஆண்டு ஆகிவிட்டது என்று இங்கே கூறினார்கள். நன்றி. ஆனால் நான் எதையுமே செய்யாதது போல் இருக்கிறது. இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. நான் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் தான் நடிக்க வந்தேன்.இப்படி நடிக்க வேண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு அப்போது இல்லை. படிப்படியாக இப்போது 20 ஆண்டு கடந்து விட்டேன்.என்னை வளர்த்து ஆளாக்கி விட்டவர்கள் நீங்கள் தான்

இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறேன். சினிமா எனது வாழ்க்கை ,நான் கடந்த காலத்தை பற்றிக் கவலைப்படுவதில்லை. அதை நினைத்துப் பார்ப்பதில்லை. இன்றைய இந்தத் தருணத்தை மட்டுமே இனிமையாக்க வேண்டும் என்று தான் நினைப்பேன். எதிர்காலத்தைப் பற்றி நான் நினைப்பதில்லை. ஒவ்வொரு நாளும் சிறு சிறு முன்னேற்றத்தைக் காண்கிறேன். ஒவ்வொரு நாளும் கேமரா முன் நிற்கும்போது நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. சிறுவயதில் யூனிபார்ம் மீது எனக்கு ஒரு ஆசை ஒரு கிரேஸ் இருந்தது. ராணுவம் போலீஸ் மூவி செய்ய ஆசை. 

என் மீது நம்பிக்கை வைத்து பாலாஜி அழைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் பட்ஜெட்டை விட ஸ்கிரிப்டை முக்கியமாகப் பார்ப்பேன். நல்ல கதைதான் படத்திற்கு முக்கியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. நான் முடிந்த அளவிற்கு அனைவரையும் கவரும்படி இதில் நடித்துள்ளேன் என்று நம்புகிறேன். நான் இயக்குநர் பாலாஜியிடம் நிறைய கேள்வி கேட்பேன். எனக்குத் தெளிவாகும் வரை,விடமாட்டேன் கேட்டுக் கொண்டே இருப்பேன். திரைக்கதை நடிப்பு எல்லாமும் நன்றாக வந்திருக்கிறது. இது மாஸ் ஆக்சன் படம் போல் இல்லாவிட்டாலும் பாபநாசம் படத்தைப் பார்த்த அந்த உணர்வு ஏற்படும்.

நான் முன்பே சொன்னேன் ராணுவத்தின் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று. அப்படிச் சாதாரணமாக நினைத்து விட முடியாது. அதற்கு ஒரு தைரியம் இருக்க வேண்டும், லட்சியம் இருக்க வேண்டும், தேசப்பற்று இருக்க வேண்டும். உடல் தகுதி வேண்டும். இப்படிப்பட்ட பாத்திரத்தில் நடிக்க, யூனிபார்ம் போட்டால் மட்டும் போதாது .ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் ஆக இருந்தால் கூட அந்த யூனிபார்முக்கு ஒரு மரியாதை, சக்தி இருக்கிறது. அதை அணிந்த பிறகு வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும்.அதை நடித்த போது உணர்ந்தேன். நம்மைப் பார்த்து ஒருவர் சல்யூட் அடிக்கும் போது நாம் உணர்வது வேறு வகையிலானது. நான் இந்தப் பாத்திரத்தில் நடிக்கும் போது சிரித்ததே கிடையாது. யூனிபார்ம் அணிந்தவர்களின் குறிப்பாக போலீஸ் காவல்துறையின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்கள் எப்படி வேலையே வாழ்க்கையாக இருக்கிறார்கள். அது சுலபமானதல்ல .அவர்களுக்கு விடுமுறையே கிடையாது எங்கும் எப்போதும் இருப்பார்கள். ஸ்காட்லாந்து யார்டுக்குப் பிறகு தமிழ்நாடு போலீஸ் தான் என்பார்கள். அப்படி நான் இந்த இளம்பாரி கதாபாத்திரத்தில் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். " என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்