உலகில் நிம்மதியாக வாழ சிறந்த நாடு இந்தியா - '12த் பெயில்' பட நடிகர்
முஸ்லிம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் யாரும் ஆபத்தில் இல்லை. எல்லாமே இங்கு சரியாக தான் இருக்கிறது என பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்துள்ளார்.
மும்பை,
கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி சபர்மதி ரிப்போர்ட்'. இந்தப் படம் வரும் நவம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் விக்ராந்த் மாஸ்ஸி நாயகனாக நடித்துள்ளார். இவர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற '12த் பெயில்' படத்தின் மூலம் பரவலான ரசிகர்களைப் பெற்றவர்.
இந்நிலையில், 'தி சபர்மதி ரிப்போர்ட்' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுப்பட்டுள்ள விக்ராந்த் அளித்த பேட்டியில், "மோசமாக இருக்கும் என கருதும் விஷயங்கள் உண்மையில் மோசமாக இருப்பதில்லை. எனது கண்ணோட்டம் தொடர்ந்து பரிணாமம் அடைந்து வருகிறது. முஸ்லிம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்; இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் யாரும் ஆபத்தில் இல்லை. எல்லாமே இங்கு சரியாக தான் இருக்கிறது. உலகில் நிம்மதியாக வாழ சிறந்த நாடு இந்தியா தான்.
நீங்கள் ஐரோப்பா, பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சென்று பாருங்கள். உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்பது அப்போதுதான் உங்களுக்குத் தெரியும். தற்போதைய சூழலை பொறுத்தவரை வாழ்வதற்கு ஏற்ற நாடு இந்தியாதான். மேலும் நம் நாடுதான் உலகில் எதிர்காலத்திலும் வாழ்வதற்கு தகுதியாக நாடாக இருக்கும். நம் நாடு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
நான் நடித்த '12த் பெயில்' படத்தை அரசு பள்ளிக்கூடங்களில் திரையிடுகிறார்கள். இதன் மூலம் மாணவர்கள் ஊக்கம் பெறுவார்கள். இது போன்ற விஷயங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கும். எனவே, நல்ல விஷயங்கள் தான் நடந்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
விக்ராந்த் மாஸ்ஸின் தந்தை - கிறிஸ்துவர், தாய் - சீக்கியர், அவரது சகோதரர் 17 வயதில் இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர். இப்படிப் பல மதங்களைப் பின்பற்றும் தனது குடும்பத்தினர் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், "எனது அம்மா சீக்கியர். என் தந்தை கிறிஸ்துவர், வாரம் இருமுறை தேவாலயம் செல்லுபவர். வீட்டில் லஷ்மி பூஜையும் செய்பவர். எனது சகோதரர் பெயர் மோயின், 17 வயதில் இஸ்லாம் மார்க்கத்திற்கு மதம் மாறியவர். இப்படி எங்கள் குடும்பத்தினர் பல மதங்களைப் பின்பற்றுகின்றனர். என் சகோதரர் இஸ்லாம் மார்க்கத்திற்குச் செல்லும்போது எங்கள் வீட்டில் இருப்பவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. 'உனக்கு அது மனநிம்மதியைத் தருமென்றால், அதில் செல்வதில் தவறில்லை' என்று சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். சிறுவயதில் நானும் மதங்கள் குறித்து என் குடும்பத்தினரிடம் நிறைய உரையாடியிருக்கிறேன். இதையெல்லாம் பார்த்து வளர்ந்த எனக்கு, 'மதம் என்பது மனிதர்கள் உருவாக்கியது' என்றுதான் தோன்றும். என் குழந்தைகளைப் பகுத்தறிவுடன் வளர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதேசமயம் மதங்களில் இருக்கும் நம் இந்திய கலாசாரத்தையும் மதிக்க வேண்டும் என்றும் கற்றுக்கொடுப்பேன்" என்று மனம் திறந்து பேசியுள்ளார்.