'இந்திய சினிமா துறையே வாயை பிளந்து பார்க்கப் போகிறது' - கங்குவா படம் குறித்து நடிகர் சூர்யா
கங்குவா படத்தை இந்திய சினிமா துறையே வாயை பிளந்து பார்க்கப் போகிறது என நடிகர் சூர்யா தெரிவித்தார்.
சென்னை,
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் 14-ந்தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில், கங்குவா திரைப்படத்தின் 3டி டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, இந்த படத்தை வெறும் கடமைக்காக உருவாக்கவில்லை என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பேசியதாவது;-
"இந்த படத்திற்காக சுமார் 2 வருடங்கள் உழைத்திருப்போம். ஆனால் யாருமே காசுக்காகவோ, கடமைக்காகவோ இதை உருவாக்கவில்லை. எல்லோரும் எங்கள் வேலையை ரசித்து, சந்தோஷமாக செய்தோம். இந்த படத்தை இந்திய சினிமா துறையே வாயை பிளந்து பார்க்கப் போகிறது என்பதை தாழ்மையுடனும், பணிவுடனும் கூறிக் கொள்கிறேன்.
இந்த படம் நம்மை 700 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்லும். வழிபடும் கடவுள் தீயாகவோ, நீராகவோ, ரத்தமாகவோ இருந்தால், அவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? என்பதை சொல்லக்கூடிய கதை. கங்குவா என்பவன் வெளியிலும், மனதுக்குள்ளும் போரை எதிர்கொள்பவன். மன்னிப்பு, வாக்கு தவறாமை ஆகியவை பற்றி இந்த படம் மிக உயர்வாக பேசும்."
இவ்வாறு சூர்யா தெரிவித்தார்.