'ஐடென்டிட்டி' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

திரிஷா, டோவினோ தாமஸ் இணைந்து நடித்துள்ள 'ஐடென்டிட்டி' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;

Update:2025-01-09 06:29 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை திரிஷாவும், மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸும் இணைந்து நடித்துள்ள படம் 'ஐடென்டிட்டி'. இப்படம் கடந்த 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் வினய் ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை அகில் பால், அனஸ்கான் இயக்கியுள்ளனர். இப்படத்தினை ராகம் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த நிலையில், திரிஷா நடித்துள்ள 'ஐடென்டிட்டி' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

பெண்கள் ஆடை மாற்றும் அறையில் செல்போனை மறைத்து வைத்து ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பவனை மர்ம நபர் எரித்து கொலை செய்கிறார். கொலையை திரிஷா நேரில் பார்க்கிறார். போலீஸ் அதிகாரி வினய் குற்றவாளியின் அடையாளங்களை வைத்து உருவத்தை அப்படியே வரையும் டோவினோ தாமஸ் மூலம் திரிஷா சொல்லும் கொலையாளி உருவத்தை வரைகிறார்.

அந்த உருவம் அனைவரையும் அதிர்ச்சியாக்குகிறது. கொலையாளி யார்? போலீசாரால் அவனை கண்டுபிடிக்க முடிந்ததா என்பது மீதி கதை.

டோவினோ தாமஸ் ஸ்டைலிசாக வந்து படம் முழுக்க அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டை ஹாலிவுட் தரம். திரிஷா கொலைகளை பார்த்து மிரட்சி. கொலையாளியை அடையாளம் காட்டுவதில் தடுமாற்றம் என உணர்வுகளை முகத்தில் நேர்த்தியாக கடத்தி இருப்பது சிறப்பு. 

போலீஸ் அதிகாரியாக வரும் வினய் கதாபாத்திரம் திருப்பங்கள் ஏற்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை அவரும் புரிந்து தேவையான நடிப்பை வழங்கி மிரள வைக்கிறார். அஜு வர்க்கீஸ், மந்திரா பெடி, அர்ச்சனா கவி, அர்ஜுன் ராதாகிருஷ்ணன், ஷம்மி திலகன் உள்ளிட்ட அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு செய்துள்ளனர். சில காட்சிகளை எளிமையாக சொல்லி இருக்கலாம்.

அகில் ஜார்ஜ் கேமரா, சண்டை சேசிங் காட்சிகளை பிரமாண்டமாக படம் பிடித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை பலம்.

ஒரு கொலையின் பின்னணி கதையை சீட் நுனிக்கு இழுக்கும் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகத்தி உள்ளனர் இயக்குனர்கள் அகில் பால், அனஸ் கான்.

Tags:    

மேலும் செய்திகள்