ஜி.எஸ்.டி, வரி கேட்டு நோட்டீஸ்: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மனு தள்ளுபடி

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-10-10 16:45 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழ் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் பல திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இந்த சூழலில் அவரது பணியை சேவை என்றும் அதற்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) ஏன் செலுத்தவில்லை என்று விளக்கம் கேட்டு ஜி.எஸ்.டி., இணை இயக்குனர் கடந்த 2018-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த விளக்க நோட்டீசை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை ஐகோர்ட்டில், கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதில், ''இசை மெட்டுகள் எல்லாம் படைப்புகள். அந்த படைப்புகள் அனைத்தையும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தர பதிப்புரிமையாக வழங்கப்படுகிறது. அப்படிப்பட்ட படைப்புகளுக்கு இதுபோல ஜி.எஸ்.டி., வரி விதிக்க முடியாது. அதனால், இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யவேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், சி.சரவணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், "இதுபோல வரி கேட்டு அனுப்பும் விளக்க நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. அதற்கு பதில் விளக்கம் கேட்கும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முறையிட்டு நிவாரணம் பெறலாம் என்று வேந்தர் மூவிஸ், வண்டர்பார் பிலிம்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளில் இந்த ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது.

எனவே, மனுதாரரும், ஜி.எஸ்.டி. இணை இயக்குனரிடம் தன் விளக்கத்தை முன்வைத்து நிவாரணம் பெறலாம். அவ்வாறு ஹாரிஸ் ஜெயராஜ் அளிக்கும் விளக்கத்தை பரிசீலித்து 4 வாரத்துக்குள் தகுந்த முடிவை எடுத்து இணை இயக்குனர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இயக்குனர் அனுப்பிய நோட்டீசுக்கு ஹாரிஷ் ஜெயராஜ் பதிலளிக்கலாம் என்றும், அதில் ஆட்சேபனைகளை முன்வைக்கலாம் என்றும் அறிவுறுத்தி வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்