யோகி ஆதித்யநாத் பயோபிக் மோஷன் போஸ்டர் வெளியீடு

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து பயோபிக் படமொன்று உருவாகி வரும் நிலையில், அதன் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.;

Update:2025-03-27 16:57 IST
யோகி ஆதித்யநாத் பயோபிக் மோஷன் போஸ்டர் வெளியீடு

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை கதை படமாகிறது. அவரது பயோபிக் 'அஜய்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் யோகி' என்கிற பெயரில் உருவாகி உள்ளது. இப்படத்தில்யோகி ஆதித்யநாத் ஆன்மீக குருவாக இருந்து எப்படி முதல்வர் ஆனார் என்பதை காட்சிப்படுத்தி உள்ளார்களாம். சாந்தனு குப்தாவின் 'தி மாங்க் ஹூ பிகேம் சீப் மினிஸ்டர்' என்கிற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. 

படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாம்ராட் சினிமாட்டிக்ஸ், "அவர் எல்லாவற்றையும் துறந்தார், ஆனால் மக்கள் அவரை தங்களுடையவராக ஆக்கிக் கொண்டனர்" என்று குறிப்பிட்டு பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரைப் பகிர்ந்துள்ளது. மோஷன் போஸ்டரில் யோகி ஆதித்யநாத் வேடத்தில் அனந்த் ஜோஷி இருக்கிறார். பின்னணியில் அனந்த் மற்றும் பரேஷ் ராவலின் குரல் ஒலிக்கிறது. அந்த வீடியோவில் பரேஷ் ராவல், 'என்னிடம் என்ன வேண்டும்?' என்று கேட்கிறார். அதற்கு அனந்த், 'வாழ்க்கையின் நோக்கம்' என்கிறார். 'பாதை கடினமானது' என்கிறார் பரேஷ். 'நானும் பிடிவாதக்காரன்' என்று அனந்த் பதிலளிக்கிறார். 'எல்லாவற்றையும் துறக்க வேண்டும்' என்கிறார் பரேஷ். 'எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்... ஒரே நோக்கம் மக்களின் சேவை' என்கிறார் அனந்த். 'அவர் எதையும் விரும்பவில்லை, ஆனால் எல்லோரும் அவரை விரும்பினார்கள். அவர் சீடனாக வந்தார், ஆனால் மக்கள் அவரை முதல்வராக்கினார்கள்' என்று பரேஷின் குரல் ஒலிக்கிறது.

'அஜய்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் யோகி' படத்தில் அனந்த் ஜோஷியுடன் பரேஷ் ராவல், தினேஷ் லால் யாதவ் நிராஹுவா, அஜய் மெங்கி, பவன் மல்ஹோத்ரா, ராஜேஷ் கட்டர், கரிமா விக்ராந்த் சிங் மற்றும் சர்வார் அஹுஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராணி முகர்ஜி நடித்த 'மர்தானி 2' போன்ற படங்களை இயக்கிய ரவீந்திர கௌதம் இப்படத்தை இயக்குகிறார். யோகி ஆதித்யநாத்தின் பயோபிக் 'அஜய்  தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் யோகி' என்று பெயரிடப்பட்டுள்ளது, ஏனெனில் அவர் பிறந்தபோது அவரது பெற்றோர் அவருக்கு அஜய் சிங் பிஷ்ட் என்று பெயரிட்டனர். ரிது மெங்கி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்