'டாக்டர்', 'டான்' படங்களை சாய்பல்லவிக்கு நினைவுப்படுத்திய ரசிகர்கள் - ஏன் தெரியுமா?
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் இதுவரை ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.;

சென்னை,
இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி தீபாவளியன்று வெளியான படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்தில் முகுந்தாக சிவகார்த்திகேயனும், மனைவி இந்து ரெபேக்காவாக சாய்பல்லவியும் நடித்தனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் இதுவரை ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தெலுங்கில் அமரனின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஐதராபாத்தில் படக்குழு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
அந்த நிகழ்சியில் பேசிய சாய்பல்லவி, தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். ' நீங்கள் மொழி வேறுபாடின்றி நல்ல படங்களுக்கு எப்போதும் ஆதரவு கொடுக்குறீர்கள். சிவகார்த்திகேயன் இப்போது இங்கேயும் ஒரு ஹீரோவாகிவிட்டார். யாரோ ஒருவர் என்னிடம், எனக்கு தமிழில் இது பெரிய பிளாக்பஸ்டர் படம் என்று கூறினார். அதேபோல், தெலுங்கில் சிவகார்த்திகேயன் நடித்த முதல் பிளாக்பஸ்டர் என்னுடன் வந்ததில் மகிழ்ச்சி. அவரது அடுத்த படங்களும் அத்தகைய வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன். தனது கதாபாத்திரத்தை சிறப்பாக எழுதியதற்காக இயக்குனர் ராஜ்குமாருக்கு நன்றி' என்றார்.
'அமரன்' தெலுங்கில் சிவகார்த்திகேயனின் முதல் பிளாக் பஸ்டர் என்று சாய்பல்லவி பேசியதற்கு ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து ஏற்கனவே ஹிட் அடித்த சிவகார்த்திகேயனின் படங்களை சாய்பல்லவிக்கு நினைவுப்படுத்தும் விதமாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, 'டாக்டரும்' 'டானும்' ஏற்கனவே இங்கு வெற்றி பெற்றன என்று யாராவது அவரிடம் சொல்லுங்கள்' என்றும், சிவாவுக்கு ஏற்கனவே இங்கு 3 ஹிட் படங்கள் உள்ளன என்றும், 2016-ம் ஆண்டு வெளியான 'ரெமோ' திரைப்படம் தெலுங்கிலும் வெற்றி பெற்றது' என்றும் தெரிவித்து வருகின்றனர்.