இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பழமைக்குள் தள்ளும் முயற்சி மேலோங்கி வருகிறது - இயக்குனர் பா.ரஞ்சித்
எந்த மக்களுக்குச் சமத்துவமும் ஜனநாயகமும் இன்றளவும் மறுக்கப்படுகிறதோ, அம் மக்கள்தான் அரசியலமைப்புச் சட்டத்தைத் தங்களின் ஒரே நம்பிக்கையாகக் கொள்கிறவர்களாக இருக்கிறார்கள் என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.;
சென்னை,
நமது நாட்டின் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 75 வருடங்கள் ஆகிறது. மேலும் அரசிலயமைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட நாளான ஜனவரி 26-ம் நாளைத் நாம் குடியரசு தின நாளாகக் கொண்டாடுகிறோம். இந்தியாவின் உயர்ந்த பட்ச சட்டமாக விளங்கும் நமது அரசியலமைப்புச் சட்டம் உலகின் மிக நீளமான அரசியலமைப்பு ஆகும். இதில் மொத்தம் 25 பிரிவுகளும், 12 அட்டவணைகளும், 106 திருத்தங்களும், 448 உட்பிரிவுகளும்,மேலும் 117369 சொற்களும் கொண்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக 2015-ம் ஆண்டு முதல் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய மதிப்புகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
இயக்குநர் பா. ரஞ்சித் அரசியலமைப்புச் சட்டம் உருவான தினத்தையொட்டி தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், " இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றி, அது நடைமுறைக்கு வந்தபோது 'நாம் ஒரு முரண்பாடான வாழ்க்கை முறைக்குள் நுழையப் போகிறோம்' என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். சட்ட ரீதியாக ஒரு சமூகமாகவும், யதார்த்தத்தில் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதற்கு இடையே நிலவப்போகும் வேற்றுமையைத் தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பின்னாலான இந்தியாவில் நிகழப் போகும் அனைத்திற்கும், நாமே பொறுப்பு என பாபாசாகேப் எச்சரித்ததை இந்நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். எந்த மக்களுக்குச் சமத்துவமும் ஜனநாயகமும் இன்றளவும் மறுக்கப்படுகிறதோ, அம் மக்கள்தான் அரசியலமைப்புச் சட்டத்தைத் தங்களின் ஒரே நம்பிக்கையாகக் கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். யார் இங்கு சமூகச் சலுகைகள் பெற்றவர்களாக இருக்கிறார்களோ; அவர்கள் அதை மீறுபவர்களாக இருக்கிறார்கள்.
எல்லா நிலைகளிலும் சமத்துவத்தையும், சகோதரத்துவதையும் கோருகிறது என்கிற ஒரே காரணத்திற்காக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பழமைக்குள் தள்ளும் முயற்சி மேலோங்கி வரும் காலத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை நாம் ஒவ்வொருவரும் முன்மொழிந்து, அதனை நெஞ்சில் ஏந்துவோம்.
இவ்வாறு அந்தப் பதிவில் பா.ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.