'எல் 2 எம்புரான்' படத்திற்காக டிக்கெட்டுடன் விடுமுறை அளித்த கல்லூரி
மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.;
பெங்களூரு,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் 'எல் 2 எம்புரான்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் மோகன்லாலுடன், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் மோகன்லால் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மோகன்லால் படத்திலேயே மிக அதிக பட்ஜெட் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் 'கேம் ஆப் த்ரோன்ஸ்' மூலம் உலகப் புகழ் பெற்ற ஜெரோம் பிளின் நடித்துள்ளார். இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது. டிக்கெட் முன்பதிவில் மட்டுமே இப்படம் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஒன்று எல் 2 எம்புரான் படத்தின் ரிலீஸ் தேதியன்று விடுமுறை அளித்துள்ளது. அதாவது, அந்த கல்லூரியின் முதல்வர், நடிகர் மோகன்லாலின் தீவிர ரசிகர் என்பதால் மார்ச் 27-ந் தேதி கல்லூரிக்கு விடுமுறை அளித்துள்ளார். அது மட்டுமல்லாமல், அந்த கல்லூரி நிர்வாகம் ரூ.14 லட்சம் செலவில் மொத்தம் 2 காட்சிகளுக்கு 430 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொடுத்துள்ளது.