கடலோர மக்கள் விழிப்புணர்வோட இருக்கணும்... ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ
சிஐஎஸ்எப் வீரர்கள் கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரி வரை நாடு தழுவிய சைக்கிள் பேரணி நடத்துகின்றனர்.;

கடலோர பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரி வரை நாடு தழுவிய சைக்கிள் பேரணி நடத்துகின்றனர். கடந்த 7-ம் தேதி மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் தொடங்கிய இந்த பேரணி வருகிற 31-ந்தேதி கன்னியாகுமரியில் நிறைவடைகிறது.
கொல்கத்தாவிலிருந்து 50 சிஐஎஸ்எப் வீரர்களும், குஜராத்தில் உள்ள லக்பத் துறைமுகத்திலிருந்து 50 வீரர்களும் சைக்கிளில் பேரணியாக வருகின்றனர். இரு திசைகளிலிருந்தும் வந்து இவர்கள் அனைவரும் கன்னியாகுமரியில் ஒன்றுகூடுகிறார்கள்.
இந்த நிலையில் சிஐஎஸ்எப் வீரர்கள் தமிழகத்திற்கு வரும்போது தமிழக கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் அவர்களை வரவேற்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்திருப்பதாவது:-
அனைவருக்கும் வணக்கம். நம் நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷம் அதைக் கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டுக்குள் புகுந்து கோர சம்பவங்கள் செய்வார்கள். அதற்கு உதாரணம் மும்பையில் 26-11-ல் நடந்த கோர சம்பவம். கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை வாங்கிடுச்சு. கடலோர பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வோட இருந்து சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரும் நடமாடினால் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.
இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 100 சிஐஎஸ்எப் வீரர்கள் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோமீட்டர் மேற்குவங்காளத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பேரணி செல்கின்றனர். அவர்கள் உங்க ஏரியா வரும்போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவர்களுடன் கொஞ்சம் தூரம் சென்று அவர்களை உற்சாகப்படுத்துங்கள். நன்றி. வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.