'புஷ்பா 2' டிக்கெட் விலை உயர்வுக்கு ஒப்புதல்: தெலுங்கானா அரசுக்கு அல்லு அர்ஜுன் நன்றி

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'புஷ்பா 2' வருகிற 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;

Update:2024-12-03 16:02 IST

கடந்த 2021-ம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கதில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2' படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் மைம் கோபி, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, அஜய் கோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் 'டான்சிங் குயின்' நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படம் வருகிற 5-ந் தேதி உலகளவில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் வெளியாக உள்ளது. ஆனால் தெலுங்கானாவில் ஒரு சில குறிப்பிட்ட திரைகளில் மட்டும் 4-ந் தேதி இரவு திரையிடப்பட உள்ளது. தெலுங்கானாவில் முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி விட்டதாக கூறப்படுகின்றது. சிறப்பு காட்சிக்காக அதிகபட்சமாக ரூ.1,200 முதல் ரூ.3,000 வரை டிக்கெட் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், தெலுங்கானா அரசுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "டிக்கெட் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்த தெலுங்கானா அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முற்போக்கான முடிவு, தெலுங்குத் திரையுலகின் வளர்ச்சி மற்றும் செழுமைக்கான உங்கள் உறுதியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது". மேலும் தெலுங்கு திரையுலகத்தை தொடர்ந்து ஆதரித்து வரும் ரேவந்த் ரெட்டி மற்றும் கோமதிரெட்டி கே.வி.ஆர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்