தனுஷ் இயக்கத்தில் அஜித்.. வெளியான புதிய தகவல்
தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படம் பிரம்மாண்டமாக உருவாகும் என தகவல் வெளியாகி உள்ளது.;

சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பது மட்டுமில்லாமல் சில படங்களை இயக்கியும் இருக்கிறார். அதன்படி, அவர் இயக்கிய முதல் படம் 'பவர் பாண்டி'. இப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. 2-வதாக தனுஷ் இயக்கிய படம் 'ராயன்'. இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து 'இட்லி கடை' என்ற படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், தனுஷ் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது, அஜித், தனுஷ் காம்போவில் புதிய படம் உருவாக உள்ள தகவல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை ஆரம்பக்கட்டத்தில் உள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரண் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இவர்களின் காம்போ தொடர்பான புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், படம் பிரம்மாண்டமாக உருவாகும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், 'குட் பேட் அக்லி' படத்தை நடித்து முடித்த அஜித் தற்போது கார் ரேஸிஸ் தீவிரமாக இறங்கியுள்ளார். அதனையெல்லாம் முடித்து விட்டது அஜித் சென்னை திரும்பியதும் அஜித் – தனுஷ் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.