கனிமொழியுடனான 20 வருட நட்பு குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தி.மு.க எம்.பி கனிமொழியுடன் நெருக்கமானது பற்றி பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார்.;
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழில் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து வை ராஜா வை மற்றும் லால் சலாம் ஆகிய படங்களை இயக்கினார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த நடிகர் தனுஷை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என இருமகன்கள் உள்ள நிலையில், சுமார் 18 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்தனர்.
தனியார் ஊடகம் ஒன்றில் சார்பில் நடந்த நேர்காணலில் தி.மு.க எம்.பி கனிமொழி, இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினர். அதில் தங்கள் இருவருக்கும் இடையிலான நீண்டகால நட்பு குறித்து இருவரும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியதாவது: "எனக்கும் கனிமொழிக்குமான உறவு மிகவும் அழகானது. 20 வருட நட்பு அது. அது எங்கு தொடங்கியது, எப்படி பழகினோம் என எதையும் விவரிக்க முடியாது ஒரு உறவு. எப்போதெல்லாம் நான் சோகமாக உணர்கிறேனோ, யாரிடமாவது பேசவேண்டும் என்று தோன்றுகிறதோ, உடனே நான் என்னுடைய போனை எடுத்து கனிமொழிக்கு தான் போன் செய்வேன்.
நாங்கள் குடும்ப உறுப்பினர்களை போல பேசிக் கொள்வோம். ஒருவருக்காக நான் கிளம்பி வருகிறேன் என்றால் அது அக்காவுக்காக மட்டும்தான். யாருக்காகவும் நான் எங்கும் செல்லமாட்டேன். ஆனால் கனிமொழி அக்காவுக்காக என்றால் எங்கிருந்தாலும் சென்றுவிடுவேன். எங்களுடைய நட்பு குறித்து நாங்கள் எங்கும் சொன்னதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அவர் பிறந்ததில் இருந்தே அரசியல் வாதிதான். அரசியலைத் தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் எனது கோயில் வழிகாட்டி அவர்தான். நான் எந்த ஊருக்கு போனாலும் கனிமொழி அக்கா அனுப்பும் ஆட்கள் தான் என்னை அழைத்துச் செல்வார்கள்" இவ்வாறு ஐஸ்வர்யா தெரிவித்தார்.
கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் அரசியல் பயணத்தை கொண்டாடும் வகையில் யூடியூப் சேனல் ஒன்று நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கனிமொழி உடனான தனது நட்பு பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.