நடிகை சிம்ரன் பிறந்தநாள்... 'டூரிஸ்ட் பேமிலி' படக்குழு வாழ்த்து
சசிகுமார், சிம்ரன் நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் வரும் மே 1ம் தேதி வெளியாக இருக்கிறது.;
சென்னை,
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அயோத்தி, கருடன், நந்தன்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.
அதனை தொடர்ந்து தற்போது சசிகுமார் 'டூரிஸ்ட் பேமலி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 'குட் நைட்' படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமாருடன் நடிகை சிம்ரன் நடிக்கிறார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த படத்தின் டீசரில் சசிகுமார் - சிம்ரன் பேசும் இலங்கை தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன்.1995ம் ஆண்டு வெளியான சனம் ஹர்ஜாய் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். விஐபி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவருக்கு முதல் படமே செம ஹிட். அடுத்து விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடித்தார்.இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு நேருக்கு நேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி என வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து மக்களின் மனதை வென்றார். தற்போது சசிகுமார் உடன் இணைந்து 'டூரிஸ்ட் பேமிலி' படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், நடிகை சிம்ரனின் பிறந்தநாளையொட்டி, 'டூரிஸ்ட் பேமிலி' படக்குழு சிறப்பு புரோமோ வீடியோவை வெளியிட்டு சிம்ரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.