'தளபதி' , 'குணா' திரைப்படங்கள் வெளியாகி 33 ஆண்டுகள் நிறைவு!
ரஜினியின் தளபதி மற்றும் கமலின் குணா ஆகிய இரு திரைப்படங்களும் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
சென்னை,
கடந்த 1991-ம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் 'குணா'. சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது. 33 வருடங்கள் கடந்த பின்னரும் படத்தையும், அதன் பாடல்களையும் இன்றைய தலைமுறையினர் கொண்டாடிவருகின்றனர்.
அதற்கு உதாரணம் அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' திரைப்படம். அந்தப் படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன்' பாடலும், 'மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல' வசனமும் ரசிகர்களை ஈர்த்தது. படம் வெளியாகி இப்பாடலும், அதன் காட்சிகளும் மீண்டும் 'குணா' வைப்பை இன்றைய தலைமுறையிடத்தில் ஏற்படுத்தியது. 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' படத்தின் உற்சாக வெற்றியைத் தொடர்ந்து, டிஜிட்டல் முறையில் மெருகூட்டப்பட்டு 'குணா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. கமல்ஹாசன் நடிப்பில் இளையராஜா இசையில் உருவான 'குணா' திரைப்படம் வெளியாகி 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், மம்முட்டி, ஷோபனா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்த 'தளபதி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைந்தது. 1991 தீபாவளி தினமான நவம்பர் 5ம் தேதியன்று 'தளபதி' படம் வெளியானது. மகாபாரதத்தில் வரும் குந்திதேவியின் மகனான கர்ணனையும், துரியோதனன் - கர்ணன் நட்பினையும் சமகால கதாப்பாத்திரங்களுடன் பொருத்தி எடுக்கப்பட்ட இயக்குநர் மணிரத்னத்தின் படம் தான், தளபதி. ரஜினிகாந்த்தின் தோற்றம், ஹேர்ஸ்டைல், அவரது நடிப்பு என அனைத்துமே அந்தப் படத்தில் வேறு கோணத்தில் இருந்து அவரது ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.