திரைத்துறையில் 25 ஆண்டுகள் - இயக்குநர் பாலாவுக்கு பாராட்டு விழா

இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கலைப்பயணத்திற்கு வரும் 18ம் தேதி விழா நடத்த உள்ளதாக "வணங்கான்" பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-09 09:13 GMT

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், 1999-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி வெளியான சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சேது படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 'சேது'விற்காக சிறந்த படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றார் பாலா. தவிர, சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு அரசு விருது உள்பட பல விருதுகளையும் 'சேது' குவித்தது. அதனை தொடர்ந்து நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி உள்ளிட்ட தரமான வெற்றிப் படங்களை கொடுத்தார்.

அதன் பிறகு , தனக்கென அழுத்தமான கதைகள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர் என்று பெயரெடுத்தார். இவர் தற்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து 'வணங்கான்' படத்தை இயக்கியுள்ளார் . இப்படம் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிறது. இதனால் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை வருகின்ற 18ம் தேதி அன்று நடத்த இப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டமிட்டுள்ளார்.

நாளை 'சேது' படத்தின் 25வது ஆண்டாகும். இதனை விழாவாக கொண்டாட அவருடைய திரைத்துறை நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க பல முக்கிய நட்சத்திரங்களை அழைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக 'வணங்கான்' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "வணக்கம்! கலையுலகம் உறவுகளாலும் உணர்ச்சிகளாலும் நிரம்பிய உலகம் மட்டுமல்ல, மகத்தான திறமையாளர்களை உறவுகளாக இணைத்துக் கொண்டு இயங்கும் ஒரு குடும்பம். அனைவரின் சுக துக்கங்களிலும், பாராட்டுதலிலும், தோள் கொடுத்தலிலும், துணை இருத்தலிலும் இச்சிறு உலகம் தன்னைத்தானே செழுமைப்படுத்திக் கொள்கிறது. அன்பினால் ஆகாதது உலகத்தில் என்ன இருக்கிறது? பேரன்பு மட்டுமே உலகத்தை இயக்கும் விசை. சினிமா ஒரு பேரன்பு கொண்ட பெரும் ஆலமரம். அம்மரத்தின் விழுதுகளில் ஒரு விழுது தான் இயக்குநர் பாலா. பலமான அந்த விழுது அம்மரத்தை உறுதியாகத் தாங்கியிருக்கிறது தனது பங்களிப்பின் மூலம். அப்படியான பங்களிப்பின் மூலம் நிறைய நாயகர்களை, கலைஞர்களை தனது இருபத்தைந்து ஆண்டு காலத்தில் உருவாக்கி உள்ளார் இயக்குநர் பாலா.

அதுவரை திறமை இருந்தும் முகவரி கிடைக்காமல் தவித்தவர்களைத் தேடி எடுத்து தன் படங்களையே அவர்களது முகவரியாக ஆக்கியவர் அவர். அவர் தன் கலை உளியால் துளித்துளியாக செதுக்கிய சிற்பங்கள் தான் தமிழ்த் திரை உலகம் என்கிற ராஜகோபுரத்தில் மின்னிக் கொண்டிருக்கின்றன. பாலா என்ற தனிமனிதர் ரத்தமும் சதையுமாக உருவாக்கிய சிறிய படப்பட்டியலில் அவர் சாதித்திருப்பது நீண்ட வரிசை. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துப் போனவர்களில் அவரும் ஒருவர். எல்லோரும் ஒரு பாணியில் கடந்து பாதை அமைத்துக் கொண்டிருக்கும்போது, தனக்கென ஒரு பாணியை அழுத்தமாக அமைத்துக் கொண்டவர். மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள், உடலால்... உடல் புலன்களால் பாதிக்கப்பட்ட எளிய மனிதர்கள், புறக்கணிக்கப்பட்ட வாழ்வில் அன்பைத் தேடி அலைபவர்கள் என அதுவரை பேசப்படாத, பாலா உருவாக்கிய செல்லுலாய்டு மனிதர்கள் காலம் காலமாய் தமிழ்த் திரையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

அவர்களின் கடின வாழ்வைத் தன் அகத்தின் மூலம் பார்த்து பதிவு செய்த பாலாவின் திரை மொழி மிக அசாத்தியமானது. நாம் வாழும் காலத்தில் கலை ஆன்மா கொண்ட ஒரு மகத்தான மனிதனைக் கொண்டாடவும்... பெருமைகொள்ளச் செய்யவும் ஓடும் ஓட்டத்தில் நமக்கு நேரம் வாய்க்காமல் போயிருக்கிறது. இன்னமும் அதைக் காலம் தாழ்த்திக் கொண்டே போகக் கூடாது. அவரது இருபத்தைந்தாம் ஆண்டை விமர்சையாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ். இயக்குநர் பாலா இயக்கி, அருண்விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் "வணங்கான்" படத்தின் ஆடியோ வெளியீட்டையும், இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணத்தையும் இணைத்து இரட்டை விழாவாக டிசம்பர் 18ம் தேதி அன்று மாலை 5 மணியளவில் சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடத்த உள்ளோம்.

இது பாலா என்கிற ஒரு தனிப்பட்ட இயக்குநருக்கான விழா மட்டுமல்ல. கால் நூற்றாண்டாக தமிழ்த் திரையை கலையம்சம் பொருந்திய தனது திரைக்காவியங்களால் நிறைத்த ஒரு மாமனிதனுக்கு நாம் செய்கிற மரியாதை. திரையுலகின் ஆகச்சிறந்த ஆளுமைகளும் வாழ்த்த, இன்னும் பல ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் இயக்குநர் பாலா ஆரோக்கிய நடைபோட, நீங்களும் உடனிருந்து வாழ்த்த அழைக்கிறோம். தமிழ்த் திரையுலகின் அனைத்து நண்பர்களையும் ஒரே குடும்பமாய் நின்று வாழ்த்த வருகை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி, பல நடிகர்களின் நடிப்புத்திறனை அடையாளப்படுத்திய இயக்குநர் என இந்தியளவில் பெயரெடுத்த பாலாவை கொண்டாட வேண்டும் என்பதற்காக சக இயக்குநர்கள், அவருடன் பணியாற்றிய நடிகர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது

Tags:    

மேலும் செய்திகள்