ஒற்றை தலைமை என்று வந்தால் எடப்பாடி பழனிசாமி தேர்வாக வாய்ப்பு - முன்னாள் எம்.எல்.ஏ ஜக்கையன்
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ ஜக்கையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கட்சிக்கு தலைமை தாங்குவது யார் என்ற கேள்வி எழுந்ததும், தலைமை கழகம், மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் ஏற்கனவே இதுபற்றி ஆலோசனை நடத்தி உள்ளனர். 23ம் தேதி அதற்கு உரிய தீர்வு ஏற்படும் வகையில் பொதுக்குழு கூட்டம் நடடக்கவிருக்கிறது.
அந்த வகையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவர் கட்சியை தலைமைதாங்கி வழிநடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். ஒற்றை தலைமை வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறோம். ஓபிஎஸ் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், எடப்பாடியாரை ஏன் ஆதரிக்கிறோம் என்று கேட்கிறீர்கள். உள்கட்சி பிரச்சனைக்குள் செல்ல விரும்பவில்லை.
ஆனால் தற்போது தமிழ்நாடு முழுவதும் எடப்பாடியாருக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. மெஜாரிட்டி இருந்தால் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்குவது ஜனநாயக கடமை ஆகும். தலைமை பதவியை அவருக்கு கொடுத்தால் மிக நன்றாக இருக்கும். மூத்த தலைவர்கள் கூடி சமரச முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். ஒற்றை தலைமையாக எடப்பாடியாருக்கு வழங்குவதுடன், மற்றவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கும் முயற்சியும் நடக்கிறது. ஒற்றை தலைமை என்று வந்தால் எடப்பாடி பழனிசாமி தேர்வாக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இவ்வாறு முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் தெரிவித்தார்.