உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா மீண்டும் திடீர் தாக்குதல்; குடியிருப்பு கட்டிடங்கள் தகர்ப்பு!
கிழக்கு உக்ரைனில் சில பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றிய நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா மீண்டும் திடீரென தாக்குதல் நடத்தியது. இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கீவ் நகரத்தில் இரண்டு குடியிருப்புக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து, கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறுகையில், கிழக்கு உக்ரைன் உள்ளிட்ட இடங்களில் ரஷிய துருப்புக்கள் தங்கள் படைகளை ஒருங்கிணைத்தது. எனவே ரஷியப் படைகள் கீவில் குறைந்தது இரண்டு குடியிருப்பு கட்டிடங்களை தாக்கின. இந்த கொடூர தாக்குதலில், இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிட்ச்கோ கூறினார்.
மேலும், கீவில் உள்ள அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகையாளர்கள், தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் மீட்புப்பணிகள் நடைபெறுவதை உறுதிபடுத்தியுள்ளனர்.