ஒடிசா ரெயில் விபத்து: சிறப்பு ரெயில்கள் மூலம் 383 பேர் சென்னை அழைத்து வரப்படுகிறார்கள்

சென்னை

ஒடிசாவில் பாலசோர் பகுதியில் ரெயில் விபத்தால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் தவிப்புக்குள்ளானார்கள். விபத்துக்குள்ளான 2 பயணிகள் ரெயிலில் சுமார் 2 ஆயிரம் பயணிகள் பயணித்தது தெரிய வந்து உள்ளது.

அவர்களில் பாதி பேர் காயம் அடைந்து உள்ளனர். சுமார் 1000 பயணிகள் அந்த பகுதியில் நேற்று இரவு தவிக்க நேரிட்டது. பலர் உடனடியாக பஸ்களை பிடித்து மற்ற பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து எப்படி செல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் விபத்து நடந்த பகுதிக்கு அருகிலேயே அமர்ந்திருந்தனர்.

அவர்களை குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே அதிகாரிகள் இன்று காலை செய்தனர். இதற்காக விபத்து பகுதிக்கு அருகே வரை சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேற்கு வங்காளத்தில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

சென்னை சென்ட்ரலில் இருந்தும் சிறப்பு ரெயில் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது. அந்த ரெயில் பத்ரக் நகரம் வரை சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றி சென்னை திரும்பும் என்று தெரிய வந்துள்ளது. அந்த ரெயிலில் 250 பயணிகள் அழைத்துவரப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல புவனேஸ்வரத்தில் இருந்தும் மற்றொரு சிறப்பு ரெயில் சென்னைக்கு இயக்கப்படுகிறது. அந்த ரெயிலில் 133 பேர் அழைத்துவரப்படுகிறார்கள்.

மொத்தம் 383 பேர் ஒடிசாவில் இருந்து சென்னை திரும்புகிறார்கள் இவர்களை அழைத்து வரும் சிறப்பு ரெயில்கள் நாளை காலை சென்னை ரெயில் நிலையம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2023-06-03 07:52 GMT

Linked news