‘இது இரண்டாவது பேரழிவு’ - காசா மக்கள் வேதனை ... ... இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 9ம் நாளாக தொடரும் போர்..!!
‘இது இரண்டாவது பேரழிவு’ - காசா மக்கள் வேதனை
தற்போது நடப்பவை 1948 போரை நினைவூட்டுவதாக காசா மக்கள் வேதனை
1948-ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் தனி நாடாக உருவானது. அதன் நீட்சியாக இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டு நீடித்த இந்த போரின் போது 500 பாலஸ்தீன கிராமங்கள், நகரங்களை இஸ்ரேல் அழித்தது.
இன்றைக்கு இஸ்ரேலாக இருக்கும் பாலஸ்தீன பகுதிகளிருந்து ஏறத்தாழ 7 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு தள்ளப்பட்டனர். அதன் பின்னர் அவர்களால் தங்களின் பகுதிக்கு திரும்பவே முடியவில்லை. அப்படி இடம் பெயர்ந்தவர்களின் வாரிசுகள்தான் தற்போது காசாவில் போர் சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். 1948 போரின் போது கட்டாய இடப்பெயர்வுக்கு தள்ளப்பட்ட நிகழ்வை பாலஸ்தீனர்கள் ‘நக்பா' (பேரழிவு) என அழைக்கிறார்கள்.
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, வடக்கு காசாவில் இருந்து வெளியேறி வரும் பாலஸ்தீனர்கள் தற்போது நடந்து கொண்டிருப்பதை ‘இரண்டாவது நக்பா’ என்கிறார்கள்.
இதுப்பற்றி காசாவை சேர்ந்த ஒருவர் கூறுகையில், “இப்போது நடப்பவை எல்லாம் நக்பாவை நினைவுபடுத்துகிறது. 1948-ம் ஆண்டு போரில் ஏற்பட்ட பேரழிவால் 7½ லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் சொந்த மண்ணிலிருந்தே வெளியேற்றப்பட்டனர். அதேபோல் இப்போது காசாவிலிருந்து வெளியேற்றப்படுகின்றோம், ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் எங்கள் நிலம். இங்கேதான் எங்களின் வேர்கள் இருக்கும். சுதந்திரம், அமைதி, பாதுகாப்புக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.