பலி 5 ஆயிரத்தை எட்டியது ஹமாஸ் அமைப்பினரால் பிணை... ... இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 9ம் நாளாக தொடரும் போர்..!!

பலி 5 ஆயிரத்தை எட்டியது

ஹமாஸ் அமைப்பினரால் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை மீட்கும் முயற்சியாக ராணுவ வீரர்கள் தரை வழியாக காசாவுக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசா பகுதியிலுள்ள ஆஸ்பத்திரியை தொடர்புகொண்டு இடம்பெயர ஆணையிட்டுள்ளது. நூற்றுக்கணக்கிலான காயமுற்றவர்களை இடம்மாற்றுவது எளிதானது அல்ல அவர்களை கைவிட்டும் செல்ல முடியாது என ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் வௌியேறுவதற்கான காலக்கெடுவை மேலும் 6 மணி நேரம் நீட்டித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வான்வழி தாக்குதலில் 24 மணி நேரத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 300-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் இதுவரை 724 குழந்தைகள் மற்றும் 458 பெண்கள் உள்பட 2,200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 8 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தாக்குதலில் 1,500 ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதன்படி காசா தரப்பில் மட்டும் இதுவரை 3,700-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

அதே சமயம் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 1,300 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை எட்டியுள்ளது.

Update: 2023-10-14 22:29 GMT

Linked news