பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியதுஇஸ்ரேல்-ஹமாஸ்... ... இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்
பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியது
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நேற்று 6-வது நாளை எட்டியது. இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த 6 நாட்களில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்டு குண்டுகளை வீசி தாக்கியுள்ளனர். அது மட்டும் இன்றி இஸ்ரேலுக்குள் ஊடுருவி இருக்கும் நூற்றுக்கணக்கான ஹமாஸ் அமைப்பினர் வீதிவீதியாக சென்று கண்ணில் படுபவர்களையெல்லாம் கொன்று குவித்து வருகின்றனர்.
அதே வேளையில் இஸ்ரேலை நிலைகுலைய செய்த இந்த திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரி வான்தாக்குதலை தொடுத்து வருகிறது. இஸ்ரேல் போர் விமானங்களின் இடைவிடாத குண்டுமழையால் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது.
இஸ்ரேல் பிரதமர் சபதம்
இதனிடையே வான்வழி தாக்குதலுடன் காசா மீது தரைவழி தாக்குதலையும் தொடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்காக எல்லை பகுதியில் 3 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தரைவழி தாக்குதலுக்கு படைகள் தயாராக இருப்பதாகவும், அரசு ஒப்புதல் அளித்தால் உடனடியாக தாக்குதலை தொடங்குவோம் எனவும் இஸ்ரேலிய ராணுவ செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் ஹெக்ட் நேற்று தெரிவித்தார்.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு சபதம் செய்துள்ளார்.
சிறுவர்கள் கொலை; பெண்கள் கற்பழிப்பு
ஒவ்வொரு ஹமாஸ் உறுப்பினரும் உயிரற்ற மனிதர் என சாடிய நேட்டன்யாகு, சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கைகளை பின்னால் கட்டி தலையில் சுடுவது, மக்களை உயிருடன் எரிப்பது, பெண்களை கற்பழிப்பது மற்றும் ராணுவ வீரர்களின் தலையை துண்டிப்பது உள்ளிட்ட அட்டூழியங்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் காசாவில் ஹமாஸ் அமைப்பின் உயரடுக்கு நுக்பா படைகளை குறிவைத்து இரவு முழுவதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. இந்த தாக்குதல்களில் ஹமாஸ் அமைப்பின் ஆயுத கிடங்குகளும் நிர்மூலமாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இதனிடையே முன்னறிவிப்பின்றி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும், இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆனால் அதனை மறுத்துள்ள இஸ்ரேல் ராணுவம் தாக்குதலுக்கு முன்பு பொதுமக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக முன்னறிவிப்பை வெளியிடுவதாக கூறியுள்ளது.
3.39 லட்சம் மக்கள் இடம் பெயர்வு
இந்த நிலையில் ஒரு புறம் இஸ்ரேல் போர் விமானங்கள் இடைவிடாமல் குண்டுகளை வீசி வரும் நிலையில் மறுபுறம் உணவு, தண்ணீர், எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் அனைத்து வினியோகங்களையும் இஸ்ரேல் நிறுத்திவிட்டதால் காசா மக்கள் சொல்லெணா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.
இஸ்ரேல் காசாவுக்கான வினியோகங்களை மீண்டும் தொடங்காவிட்டால் அங்கு இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சர்வதேச உதவி குழுக்கள் எச்சரித்துள்ளன.
ஆனால் காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள சுமார் 150 இஸ்ரேலியர்களை விடுவிக்கும் வரை இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு எதுவும் அனுப்பப்படாது என அந்த நாட்டு அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
இதனால் காசா மக்கள் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் காசாவில் இருந்து இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 30 சதவீதம் உயர்ந்தது என்றும், இதுவரை 3,39,000 இடம் பெயர்ந்துள்ளனர் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
எல்லையை திறந்த எகிப்து
வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்ப பாலஸ்தீனியர்கள் தெருக்களில் தங்கள் உடைமைகளை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடத்தை தேடி ஓடும் சோக காட்சிகள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
இதனிடையே போர் காரணமாக காசாவுடனான தனது எல்லையை கடந்த வாரம் மூடிய எகிப்து தற்போது மீண்டும் எல்லையை திறந்துள்ளது. இந்த எல்லை வழியாக காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் எகிப்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் போர் தொடங்கிய முதல் நாளே இஸ்ரேலுக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்த அமெரிக்கா, இஸ்ரேல் தன்னை தற்காத்து கொள்வதற்கு அனைத்து வழிகளிலும் உதவும் என உறுதியளித்தது. அந்த வகையில் ஆயுதங்கள் அடங்கிய அமெரிக்காவின் முதல் விமானம் நேற்று முன்தினம் இஸ்ரேல் சென்றடைந்தது.