ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை தாமதம்; இஸ்ரோ தகவல்
ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை அரை மணிநேரம் தாமதம் அடைந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா டிவி-டி1 ராக்கெட் இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான இறுதி கட்ட பணியான 13 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில், ககன்யான் மாதிரி விண்கலம் சோதனையில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதன்படி காலை 8 மணிக்கு பதிலாக காலை 8.30 மணிக்கு விண்கலம் விண்ணில் ஏவப்படும். வானிலையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் காரணத்தினால் விண்கல சோதனையில் தாமதம் ஏற்பட்டு உள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
பூமியிலிருந்து புறப்பட்ட ராக்கெட் 8 நிமிடங்களில் திட்டமிட்ட 17 கிலோமீட்டர் என்ற இலக்கை சென்றடையும். அதன் பிறகு அதில் பொருத்தப்பட்டுள்ள விண்கலம் தனியாக பிரிந்து வங்க கடலில் பாராசூட் மூலம் பாதுகாப்பாக இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராக்கெட்டின் செயல்பாடுகளும், அதில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் செயல்பாடுகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.