இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? நிதிஷ்குமார் விளக்கம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பேன் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

Update: 2024-01-31 07:29 GMT

பாட்னா,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் நாடு முழுக்க உள்ள காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர்.

இந்த கூட்டணியை உருவாக்கிய முக்கிய நபர்களில் ஒருவராக பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் இருந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கை கோர்த்துள்ளார்.

அதன்படி, சமீபத்தில் பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பீகார் மாநிலத்தின் முதல்-மந்திரியாக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றார். இது இந்தியா கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா கூட்டணி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார். பீகாரில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வேறு பெயரை வைக்க கூறினேன். இந்தியா கூட்டணியின் பெயரை மாற்றுவதற்கு நான் பலமுறை வலியுறுத்தினேன். ஆனால், எனது பேச்சை கேட்காமல் இந்தியா என்ற பெயரை முடிவு செய்தனர்.

எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என இதுவரை இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் முடிவு செய்யவில்லை. என்னால் வலியுறுத்தப்பட்ட பல யோசனைகள் ஏற்கப்படவில்லை. இதுபோன்று சில முரண்பாடுகள் ஏற்பட்டதால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினேன் என்றார். மேலும், நான் பா.ஜ.க. கட்சியுடன் சேர்ந்து பீகார் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும், பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு காங்கிரஸ் அழுத்தத்தால் நடத்தப்பட்டதாக ராகுல் காந்தி கூறியது முட்டாள்தனமானது என கடுமையாக விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்