கன்னி - ஆண்டு பலன் - 2023

Update:2023-01-01 00:15 IST

உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: பா, பி, பு, பூ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

எட்டில் வரும் குருவால் எண்ணற்ற மாற்றம் வரும்

கன்னி ராசி நேயர்களே!

வரும் புத்தாண்டு உங்களுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் ஆண்டாகவே அமையப்போகிறது. மாபெரும் கிரகங்களாக விளங்கும் சனி, குரு, ராகு, கேது ஆகியவற்றின் பெயர்ச்சி காலங்கள், முன்னோக்கிச் செல்லும் சூழ்நிலையை உருவாக்கும். திடீரென பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பும் உண்டு. காரணம் சர்ப்பக் கிரகத்தின் ஆதிக்கம், இந்த ஆண்டு உங்கள் ராசியில் வருகிறது. எனவே ஏற்றமும் இறக்கமும் கலந்த சூழ்நிலை உருவாகும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை வந்து மன அமைதியைக் குறைக்கலாம். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடு திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

புத்தாண்டு கிரக நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், விரயாதிபதி சூரியனோடு இணைந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே ஆரோக்கியம் சீராக, கொஞ்சம் விரயம் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். வருடத் தொடக்கத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சுக்ரனோடு இணைந்து பஞ்சம ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கிறார். ஒன்பதாம் இடத்தில் வக்ரம் பெற்ற செவ்வாய் வீற்றிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்தாண்டு தொடங்குகிறது.

புத்தாண்டு தொடங்கும் பொழுது குருவின் பார்வை, உங்கள் ராசியில் பதிவதோடு, 2, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. எனவே உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கடன்சுமை குறைய புதிய வழிபிறக்கும். கவலைகள் அகல உடன்பிறப்புகள் வழிகாட்டுவர். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. பெரிய தொகை ஒன்று கைக்கு கிடைத்து அதன்மூலம் சுபகாரியங்களை நடத்துவீர்கள். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. தனவரவை மேம்படுத்துவதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வீர்கள். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

கும்ப - சனி சஞ்சாரம்

29.3.2023 அன்று சனி பகவான், அவிட்டம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிச் செல்கின்றார். 24.8.2023 அன்று மகரத்திற்கு வக்ர இயக்கத்தில் வரும் அவர், 20.12.2023 அன்று மீண்டும் கும்ப ராசிக்குச் செல்கிறார். இடையில் கும்ப ராசியிலும், மகர ராசியிலும் வக்ர இயக்கத்தில் சஞ்சரித்து, எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறார். இதுவரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக் கும் 6-ம் இடத்திற்கு வருகிறார். அத னால் மன அமைதி குறையும். மக்கள் செல்வங்களால் விரயங்கள் ஏற்படும். எதிர்ப்புகள் மேலோங்கி இருந்தாலும் அதை வெல்லும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத் திற்கு ஆளாவதால், இடமாற்றம் வரக்கூடும். ஆரோக்கியத் தில் அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்பட்டு அகலும்.

மேஷ - குரு சஞ்சாரம்

22.4.2023 அன்று குரு பகவான், அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே வாக்கு, தனம், குடும்பம், தாய், வீடு, வாகனம், சுகம், பயணம், வெளிநாடு போன்ற ஆதிபத்யங்களில் எல்லாம் நல்ல மாற்றங்கள் ஏற்படப் போகிறது. பணத்தேவை பூர்த்தியாகும். கொடுக்கல் - வாங்கல்களை ஒழுங்கு செய்துகொள்வீர்கள். வீண் விரயங்களை சுப விரயங் களாக மாற்ற முயற்சி செய்து கொள்ளுங்கள்.

குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் வீடு கட்டும் வாய்ப்பும் அசையாச் சொத்து வாங்கும் வாய்ப்பும் கைகூடி வரும். தாயின் உடல்நிலை சீராகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். என்றைக்கோ வாங்கிப் போட்ட சொத்துக்கள், பலமடங்கு விலை உயர்ந்து விற்பனையாகி அதன் மூலம் ஒரு பெரும் தொகை கிடைக்கலாம். அதனைக் கொண்டு கடனை அடைத்துவிட்டு மீதி பணத்தில் புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

12-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். மங்கல ஓசை மனையில் கேட்க எடுத்த முயற்சி கைகூடும். நீண்ட தூரப் பயணங்கள் பலன் தருவதாக அமையும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளை களின் கல்யாண காரியங்களை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதிலும் மும்முரம் காட்டுவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புதுமுயற்சிகள் பலன் தரும். நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீடு செல்லும் யோகம் உண்டு.

ராகு-கேது பெயர்ச்சி

8.10.2023 அன்று ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன ராசியில் ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக ஜென்ம ராசியில் கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் இருப்பதால் 'கால சர்ப்பதோஷம்' உருவாகிறது. எனவே நினைத்தது நிறைவேறுவதில் சில தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். வீண் விரயங் களும், பொருளாதாரப் பற்றாக்குறையும் அதிகரிக்கும். ஆன்மிக நாட்டம் கூடும். ஜென்ம கேதுவால் மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். பொதுவாழ்வில் இருப்பவர் களுக்கு பொறுப்புகள் மாற்றப்படலாம்.

7-ல் கேது இருப்பதால் குடும்பச்சுமை கூடும். வந்த வரன்கள் கைநழுவிச் செல்லும். கல்யாணம் ஆனவர்களுக்கு வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகள் அதிகரிக்கும். குடும்பத் தகவல்களை 3-ம் நபர்களிடம் சொல்வதால் பிரச்சினைகள் தலைதூக்கும். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. இக்காலத்தில் ராகு- கேது தோஷ நிவர்த்திக் குரிய பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் அனுகூல ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டால் போராட்டமான வாழ்க்கை மாறும்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

புத்தாண்டில் 4 முறை செவ்வாய் - சனி பார்வை ஏற்படுகிறது. இக்காலத்தில் சகோதர ஒற்றுமை குறையலாம். சேமிப்புகள் கரையும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும். பொருளாதாரப் பற்றாக்குறையின் காரணமாக கடன்சுமை மற்றும் கைமாற்று வாங்கும் சூழ்நிலை அமையும். உடல்நலத் தொல்லைகளும், ரண சிகிச்சைகளும் ஏற்படும். புதிய வாய்ப்புகள் வந்தாலும் உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. இடம், பூமியால் பிரச்சினைகள் அதிகரிக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் மேலோங்கும். தொழில் பங்குதாரர்கள் விலகிக் கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்துவர். வீடு மாற்றம், நாடு மாற்றம் ஏற்படலாம்.

வளர்ச்சி தரும் வழிபாடு

பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து நந்தியம் பெருமானை வழிபட்டு வாருங்கள். யோகபலம் பெற்ற நாளில், சிவ பெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் வாழ்க்கை வளமாகும்.

சனி மற்றும் குரு வக்ர காலம்

27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகர ராசியிலும் சனி பகவான் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். திடீரென உத்தியோகத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்.

12.9.2023 முதல் 19.12.2023 வரை மேஷ ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறுவது யோகம்தான். வீடு கட்டும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இடம், பூமியால் லாபம் உண்டு. கல்யாண வாய்ப்பு கைகூடும். கல்விக்காக எடுத்த முயற்சியில் நற்பலன்கள் கிடைக்கும். சுபச்செய்திகள் வீட்டை முற்றுகையிடும்.

பெண்களுக்கான பலன்கள்

இப்புத்தாண்டின் தொடக்கத்தில் நற்பலன்கள் கிடைக்கும். ஆயினும் ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக சர்ப்ப தோஷம் உருவாகிறது. எனவே சர்ப்ப சாந்தி வழிபாடுகளை மேற்கொண்டால் பொருளாதாரமும் திருப்தி தரும். மன நிம்மதியும் கூடும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலமே ஒற்றுமை உருவாகும். பிள்ளைகளின் உத்தியோகம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் சில பிரச்சினைகள் வரலாம். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றமும், ஊதிய உயர்வும் உண்டு.

மேலும் செய்திகள்