கன்னி - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் - சோப கிருத ஆண்டு

Update: 2023-04-13 18:45 GMT

14.4.2023 முதல் 13.4.2024 வரை

(உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: பா, பி, பு, பூ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

அஷ்டமத்தில் வருகிறது குரு!

வரவு அறிந்து செலவு செய்வதில் வல்லவர்களாக விளங்கும் கன்னி ராசி நேயர்களே!

தெய்வ பக்தி மிக்கவர்களாக விளங்கும் உங்களுக்கு இந்த சோபகிருது வருடப் புத்தாண்டில் 6-ம் இடத்தில் சனி சஞ்சரிக்கின்றார். 8-ம் இடத்திற்கு குரு வரப்போகின்றார். அக்டோபர் மாதத்தில் உங்கள் ராசியிலேயே கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கப் போகின்றார்கள். எனவே ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஏற்றமும், இறக்கமும் கலந்த வாழ்க்கை அமையும்.

சோபகிருது வருடம் தொடங்கும் பொழுது ருண ரோக ஸ்தானத்தில் சனி வலுவாக இருக்கின்றார். எனவே ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலமே ஆரோக்கியத்தை சீராக்கிக் கொள்ள இயலும். அடுத்தவர்கள் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது மிகமிக கவனமாக இருப்பது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகி கவலையை அதிகரிக்கச் செய்யும் நேரம் என்பதால் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்வது நல்லது. 22.4.2023 அன்று குரு பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திற்கு வரப்போகின்றார். 8.10.2023-ல் மீன ராசிக்கு ராகுவும், கன்னி ராசிக்கு கேதுவும் செல்கின்றார்கள்.

இடையில் மூன்று முறை சனி-செவ்வாயின் பார்வை ஏற்படுகின்றது. இக்காலத்தில் நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கலாம். நேசம் மிக்க உறவினர்கள் பாசம் காட்டாமல் விலகலாம். வட்டமிடும் கழுகுகள் போல வஞ்சகர்கள் சுற்றி நிற்பர். அச்சத்தை விட்டு அமைதியைக் காணவும், உச்சத்தை தொட்டு உயர்ந்த நிலையை அடையவும் சந்தர்ப்பங்கள் சாதகமாக அமைய வேண்டுமானால் சாமி துணை உங்களுக்குத் தேவை.

உங்கள் சுய ஜாதகத்தில் வலிமை வாய்ந்த திசாபுத்தி நடைபெறுமேயானால் உங்களுடைய எண்ணங்கள் ஓரளவேனும் நிறைவேறும். பலமிழந்த திசாபுத்திகள் நடைபெறுமேயானால் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்காது. பணத்தேவை அதிகரித்து கடன்வாங்கும் சூழ்நிலை உருவாகும். எனவே யோகபலம் பெற்ற நாளில் உங்களுக்கு அனுகூலம் தரும் தெய்வங்களை தேடிச்சென்று வழிபட்டு வந்தால் நன்மைகள் நடைபெறும்.

குருப்பெயர்ச்சி!

சித்திரை 9-ந் தேதி (22.4.2023) அன்று மேஷ ராசிக்கு குரு பகவான் வருகின்றார். அப்பொழுது அவரது பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. குரு அஷ்டமத்தில் சஞ்சரித்தாலும் அதன் பார்வைக்கு பலன் உண்டு அல்லவா? அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது வாக்கு, தனம், குடும்பம் ஆகியற்றைக் குறிக்கும் 2-ம் இடத்தை குரு பார்ப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும். நாணயப் பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பச்சுமை கூடுதலாக இருந்தாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. வீடு வாங்க, விற்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சுக ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். கல்வியில் மேம்பாடு பெற வழிபிறக்கும். செய்தொழில் மேன்மையால் சிகரத்தை எட்டும் சூழ்நிலை உருவாகலாம். உடல்நலத்திற்காக செலவிட்ட தொகை குறையும். தாயின் உடல்நலம் சீராகும். முன்னோர் சொத்துக்களை விற்றுவிட்டு அதில் வரும் லாபத்தைக் கொண்டு புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

குருவின் பார்வை விரய ஸ்தானத்தில் பதிவதால் தவிர்க்க முடியாதபடி சில விரயங்கள் ஏற்படத்தான் செய்யும். திடீர் இடமாற்றங்கள் உத்தியோகத்தில் வரலாம். வெளிநாட்டுப் பயணங்கள் கூட ஒருசிலருக்கு அமையலாம். அனுபவஸ்தர்களின் ஆலோசனை இக்காலத்தில் கைகொடுக்கும்.

கும்பச் சனி!

கிரகங்களில் வலிமை வாய்ந்தவர் சனி பகவான். அவர் வருடத் தொடக்கத்திலேயே 6- ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். 'ருண, ரோக ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது அது நன்மை செய்யுமா? அல்லது மன பயத்தை உருவாக்குமா?' என்று நீங்கள் சிந்திப்பீர்கள். உங்கள் ராசிநாதன் புதன், சனிக்கு நட்பு கிரகமாகும். மேலும் 6-ம் இடத்திற்கு அதிபதி 6-ம் இடத்திலேயே சஞ்சரிப்பதால் 'விபரீத ராஜயோக' அடிப்படையில் நற்பலன்கள் திடீரென வந்து சேரலாம். அதே சமயம் குறுக்கீடு சக்திகளும் அதிகரிக்கும். பொதுவாக சனியால் உங்களுக்கு உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம் வரலாம். அரசு வேலை கிடைப்பதில் இருந்த தடை அகலும். ஒருசிலருக்கு ரண சிகிச்சை ஏற்பட்டாலும் அது விரைவில் குணமாகும்.

கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி இடையில் வக்ரம் பெறுகின்றார். பின்னர் 24.8.2023 முதல் மகரத்திற்கு வந்து வக்ரம் பெறுகிறார். அங்கிருந்து மீண்டும் 20.12.2023-ல் கும்ப ராசிக்கு முறையாகப் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். இந்த வக்ர காலத்தில் உங்களுக்கு நன்மை, தீமை இரண்டும் கலந்தே நடைபெறும். அலுவலகப் பணிகளில் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சகப் பணியாளர்களால் உங்கள் முன்னேற்றம் முடங்குவதற்கு வாய்ப்பு உண்டு. உயரதிகாரிகள் நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். இடமாற்றம் வந்தால் அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்வது நல்லது.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

8.10.2023 அன்று மீன ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இக்காலத்தில் உங்கள் ராசியிலேயே கேதுவும், ஏழாமிடத்தில் ராகுவும் சஞ்சரிக்கப் போகின்றார்கள். எனவே சர்ப்ப தோஷத்தின் ஆதிக்கம் வருகின்றது. சப்தம ராகுவால் குடும்பத்தில் அமைதிக் குறைவு ஏற்படலாம். யாரையும் நம்பி நீண்டதூரப் பயணங்கள் சென்றால் அதனால் விரயங்களே அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. ெவளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகள் திருப்தி தராது.

ஜென்ம கேதுவின் ஆதிக்கத்தால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அரைகுறையாக பல பணிகள் நிற்கும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் நேரமிது. குடும்பத் தகவல்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் இதயத்தை வாடவைக்கும். இதுபோன்ற நேரங்களில் முறையாக சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்தால் தடைகள் தானாக விலகும்.

வளர்ச்சி தரும் வழிபாடு!

புத்தாண்டில் யோகங்கள் அதிகரிக்க புதன்கிழமை தோறும் விரதமிருந்து பெருமாள் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. யோகபலம் பெற்ற நாளில் கும்பகோணம் அருகிலுள்ள உப்பிலியப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் ஒளிமயமான எதிர்காலம் அமையும்.

பெண்களுக்கான பலன்கள்!

இந்தப் புத்தாண்டில் கொடுக்கல்-வாங்கல்கள் திருப்தியளித்தாலும் மன நிம்மதி குறைவாகவே இருக்கும். அஷ்டமத்தில் குருவும், 6-ம் இடத்தில் சனியும் சஞ்சரிக்கும் சூழ்நிலை அமைவதால் எதையும் திட்டமிட்டபடி செய்ய இயலாது. திடீர் திடீரென மாற்றங்கள் வந்து சேரும். புத்திசாதுரியமாகச் செயல்பட்டால் மட்டுமே நிறைவு காண இயலும். குடும்பத்தில் கருத்து மோதல்கள் ஏற்படாமல் இருக்க விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். விரயங்களை சுபவிரயங்களாக மாற்றிக்கொள்ளவும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது, பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தலாம். உத்தியோகத்தில் இனிமை தராத விதத்தில் இடமாற்றங்கள் வரலாம்.

குரு-சனி வக்ரம்!

12.9.2023 முதல் 20.12.2023 வரை மேஷத்தில் குரு வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. எனவே இக்காலத்தில் மிகமிக கவனம் தேவை. வீண்பழிகளும், விரயங்களும் வந்து கொண்டேயிருக்கும். வாங்கிய இடத்தை விற்கக் கூடிய நிலையும், அதனால் வாட்டமும் ஏற்படும். பத்திரப் பதிவில் சிக்கல்கள் வரலாம். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோ கத்தில் எவ்வளவு திறமையாக நீங்கள் வேலை பார்த்தாலும் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்காது. வீண் பிடிவாதத்தை விலக்கிக்கொள்வது நல்லது.

27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், பிறகு 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகரத்திலும் சனி வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் பிள்ளைகள் வழியில் சில பிரச்சினைகள் தலைதூக்கலாம். 'கடன்சுமை கூடிக்கொண்டே செல்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். கடமையில் தொய்வு ஏற்படும். சினத்தின் காரணமாக பணத்தை விரயம் செய்ய நேரிடும். உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவதன் மூலம் உறவினர் பகை அதிகரிக்கும். இதுவரை நட்பாக இருந்தவர்கள் பகையாக மாறி மனச்சஞ்சலத்தை ஏற்படுத்துவர்.

மேலும் செய்திகள்