14.4.2023 முதல் 13.4.2024 வரை
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீர்ஷம் 1, 2 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)
தொழில் முன்னேற்றம்!
அருகில் இருப்பவர்களும் ஆனந்தமாக வாழ விரும்பும் ரிஷப ராசி நேயர்களே!
எந்த ஒரு செயலை ஒப்படைத்தாலும் எப்பாடுபட்டாவது முடித்துவிடும் ஆற்றல் பெற்ற உங்களுக்கு, சோபகிருது புத்தாண்டு தொழிலில் முன்னேற்றத்தை வழங்கும் ஆண்டாக அமையப் போகின்றது. ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம் தான். அதுமட்டுமல்லாமல் லாப ஸ்தானத்தில் குரு சொந்த வீட்டிலும், தொழில் ஸ்தானத்தில் சனிபகவான் தன் சொந்த வீடான கும்பத்திலும் சஞ்சரிக்கின்றார்கள். குறிப்பாக தொழில், லாப ஸ்தானங்கள் பலம் பெற்று இருப்பதால் தொழில் வளர்ச்சியும், லாபமும் திருப்தி தரும் விதம் அமையும்.
தொடக்கத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் வியாழன் 22.4.2023 அன்று உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்திற்கு வருகின்றார். இடையில் வக்ரமும் பெறுகின்றார். சனி பகவான் வருடத் தொடக்கத்தில் கும்ப ராசியில் சஞ்சரிக்கின்றார். இடையில் கும்பத்தில் வக்ரம் பெறுவதோடு, 24.8.2023-ல் மகர ராசிக்கும் வக்ர இயக்கத்தில் வருகின்றார். அங்கிருந்து 20.12.2023-ல் மீண்டும் கும்ப ராசிக்கு சனிப் பெயர்ச்சியாகின்றார்.
இடையில் மூன்று முறை சனி, செவ்வாயின் பார்வையும் ஏற்படுகின்றது. உங்கள் ராசிக்கு சப்தம விரயாதிபதி செவ்வாய் என்பதால் இக்காலத்தில் குடும்பப் பிரச்சினைஅதிகரிக்கலாம். வியாபாரத்திலும், உத்தியோகத்திலும் குறுக்கீடுகள் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளால் கையிருப்புகள் கரையும்.
8.10.2023-ல் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு ராகுவும், 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு கேதுவும் வருகின்றனர். இந்த மாற்றங்களின் அடிப்படையில் தான் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்குப் பலன்கள் அமையும்.
உங்கள் சுய ஜாதகத்தில் வலிமை வாய்ந்த திசாபுத்திகள் நடைபெற்றால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். திசாபுத்தி பலம் இழந்திருந்தால் செய்யும் காரியங்களில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சினைகள், ஆரோக்கியத் தொல்லைகள் காரணமாக அதிகம் செலவிடும் சூழ்நிலையும் அமையும். அப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தால் பாக்கியாதிபதிக்குரிய தெய்வத்தை தேர்ந்தெடுத்து யோக பலம் பெற்ற நாளில் வழிபட்டு வருவது நல்லது.
குருப்பெயர்ச்சி!
சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு பகவான் வருகின்றார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு வரும் குரு பகவானின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகின்றது. விரய ஸ்தானத்திற்கு குரு வந்தாலும் கவலைப்பட வேண்டாம். உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியான குரு 12-ம் இடத்திற்கு வரும் பொழுது சில நன்மைகளை உடனடியாக வழங்கும். காலங்காலமாகக் காத்திருந்தும் நடைபெறாத சுபகாரியங்கள் இப்பொழுது ஞாலம் போற்றும் விதம் நடைபெறப்போகின்றது.
குருவின் பார்வை பலனால் தாய்வழி ஆதரவு திருப்தி தரும். வாகனம் வாங்கி மகிழ்வது சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பால், தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியலாம்.
தொழிலில் மட்டுமல்ல உத்தியோகத்திலும் உங்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். பரிசீலனையில் இருந்த பதவி உயர்வு தானாக வரலாம். அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வர். மறைமுக எதிர்ப்புகள் மாறும். ஆரோக்கியம் சீராக உடனுக்குடன் உடல்நலத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள். வாங்கிய சொத்துக்களால் லாபமும், தேங்கிய காரியங்கள் துரிதமாக நடைபெறும் யோகமும் இக்காலத்தில் ஏற்படும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள்.
கும்பச் சனி!
ஆண்டின் தொடக்கம் முதல் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கின்றார். அவர் தன் சொந்த வீடான கும்பத்தில் சஞ்சரிப்பதால் இனி நடக்கும் காரியங்கள் எல்லாம் இனிதாகவே நடைபெறும். பணி ஓய்விற்குப் பிறகும் சிலருக்குப் பணிபுரிய வாய்ப்புக் கிடைக்கும். திசாபுத்தி பலம்பெற்றவர்கள் உத்தியோகத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, சுய தொழில் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளுக்குப் பெரிய இடத்தில் இருந்து வரன்கள் வரலாம். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி இடையில் வக்ரம் பெறுகிறார். 24.8.2023 முதல் மகரத்திற்கு வந்தும் வக்ரம் அடைகின்றார். அங்கிருந்து மீண்டும் 20.12.2023-ல் கும்ப ராசிக்கு முறையாகப் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். மகரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகின்றது. எனவே, அரைகுறையாக நின்ற பணிகள் இனித்தொடரும். கூட்டு முயற்சி வெற்றியடையும். குடியிருக்கும் வீட்டாலும், கட்டிய வீட்டாலும் வந்த பிரச்சினைகள் கொஞ்சம், கொஞ்சமாக மாறும். படிப்படியாக உயர்ந்து பார் போற்றும் விதம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். இல்லம் தேடி சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும்.
ராகு-கேது பெயர்ச்சி!
8.10.2023 அன்று மீன ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 11-ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கப்போவதால் லாப ஸ்தானம் பலம் பெறுகின்றது. எனவே சேமிப்பு உயரவும், சிறப்பான வாழ்க்கை அமையவும் வழிபிறக்கப் போகின்றது. 'தொழிலை எப்படி விரிவுபடுத்துவது?' என்று நினைத்திருந்த உங்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, உதிரி வருமானங்கள் பெருகும். அதிகாரிகளால் ஏற்பட்ட அல்லல் அகலும். மேலும் ராகு பகவான் யோகங்களை வழங்க யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்தால் அற்புதப் பலன்கள் வந்து சேரும்.
கேதுவின் ஆதிக்கத்தால் குழந்தைச் செல்வங்களின் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடியிருக்கும் வீட்டை ஒருசிலர் விலைக்கு வாங்க முன்வருவர். அண்ணன்-தம்பிகளுக்குள் இருந்த அரசல், புரசல்கள் மாறும். பூர்வீக சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொள்வதில் தீவிரம் காட்டுவீர்கள். முன்னோர்கள் செய்து வைத்த முக்கியத் திருப்பணிகளை மீண்டும் செய்ய முன்வருவீர்கள்.
வளர்ச்சி தரும் வழிபாடு!
புத்தாண்டு முழுவதும் மகிழ்ச்சி அதிகரிக்கும் விதம் அமைய, பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வழிபடுவது நல்லது. யோகபலம் பெற்ற நாளில் புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியிலுள்ள நெய் நந்தீஸ்வரரை வழிபட்டு வந்தால் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
பெண்களுக்கான பலன்கள்!
புத்தாண்டு உங்களுக்கு வளர்ச்சி தரும் ஆண்டாக அமையப் போகின்றது. வருமானம் உயரும். வாங்கல்-கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். தாய்வழி ஆதரவும், உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பும் திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவதன் மூலம் இல்லறத்தை நல்லறமாக அமைத்துக் கொள்வீர்கள். சனியின் வக்ர காலத்தில் கூடுதல் நிதானத்தோடு செயல்பட வேண்டும். கூட்டாளிகள் விலகலாம். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது. ராகு-கேது பெயர்ச்சி நன்மை தரும். வெளிநாட்டு முயற்சியிலும் அனுகூலம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும்.
குரு-சனியின் வக்ரம்!
12.9.2023 முதல் 20.12.2023 வரை மேஷத்தில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் தொழில் கூட்டாளிகளின் அனுசரிப்பு குறையும். இடமாற்றங்கள் இனிமை தராது. ெவளிநாட்டில் பணிபுரியச் சென்றவர்கள் அங்கு வேலை கிடைக்காமல் திரும்பலாம். அசையா சொத்துக்கள் வாங்கி அழகுபார்த்தவர்கள் அதை விற்க நேரிடலாம். அஷ்டமாதிபதியாகவும் குரு விளங்குவதால் ஒரு சில நன்மைகளும் ஏற்படும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை ஓரளவு குறையும். உத்தியோகத்தில் சகப் பணியாளர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். ஆகாரக் கட்டுப்பாட்டின் மூலமாக ஆரோக்கியம் சீராக வழிபிறக்கும்.
27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், பிறகு 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகரத்திலும் சனி பகவான் வக்ரம் பெறுகின்றார். இந்த வக்ர காலத்தில் தொழில் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படலாம். எதிரிகளின் பலம் மேலோங்கும். புதியவர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வும், சலுகைகளும் சகப் பணியாளர்களுக்குப் போய்ச் சேரும்.