விருச்சகம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

Update: 2022-05-23 09:40 GMT

27-12-2020 முதல் 20-12-2023 வரை

ஏழரைச்சனி விலகியது, இனிய வாழ்க்கை மலர்கிறது விருச்சிக ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், 26.12.2020 அன்று முன்னேற்றத்தைக் கொடுக்கும் மூன்றாமிடத்திற்கு செல்கின்றார். இப்பொழுது ஏழரைச்சனி விலகி விட்டது. எனவே இனி, தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். துணையாக இருக்கும் நண்பர்களும், உறவினர்களும் தோள்கொடுத்து உதவுவர். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. வெற்றிகள் ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான், இப்பொழுது வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். உங்களின் நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குரு உங்கள் ராசிக்கு, தன -பஞ்சமாதிபதியாக விளங்குபவர். அவரோடு இப்பொழுது சனி பகவான் இணைந்து 'நீச்சபங்க ராஜயோக'த்தை உருவாக்குகின்றார். எனவே மனம்போல மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். செல்வச் செழிப்போடு கூடிய வாழ்க்கை மலரப்போகிறது.

வாய்ப்புகள் வாசல் தேடி வரும்

டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனி, முன்னேற்றத்தின் முதல்படிக்கு செல்ல வைக்கப்போகிறார். இதுவரை ஏற்பட்ட தடைகளும், தாமதங்களும் அகலும். தனவரவு அதிகரிக்கும். வாழ்க்கைத் தேவை ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். எதிரிகள் விலகுவர். சகோதர ஒற்றுமை பலப்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புடன் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பதவி வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்து உயர் பதவிகளும், சம்பள உயர்வும் கிடைக்கும்.

சனியின் பார்வை பலன்கள்

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 5, 9, 12 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. சகாய ஸ்தானத்தில் வீற்றிருந்து பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், பயண ஸ்தானம் ஆகியவற்றைச் சனி பார்க்கிறார். பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு என்ன என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ, அவை அனைத்தும் கிடைத்து நிறைவான வாழ்க்கை உருவாகப் போகின்றது. குறிப்பாக திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். துள்ளி விளையாடும் பிள்ளைச் செல்வம் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். புதிய சொத்துக்களின் சேர்க்கையும், வீடுகட்டிக் குடியேறும் அமைப்பும் மனம்போல நடைபெறும்.

சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால், பெற்றோர் வழியில் பிரியம் கூடும்.

சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால், சுப விரயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு.

சனியின் பாதசாரப் பலன்கள்

27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அற்புதமான பலன்கள் வந்து சேரும். உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியாக சூரியன் விளங்குவதால் புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். அடுக்கடுக்காக ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும்.

28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். அதுமட்டுமல்லாமல் புதிதாக வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, செய்யும் தொழில் சீராக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரப் போட்டிகள் அகலும். வீடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் விரும்பிய வண்ணம் வந்து சேரும். நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வுகள் இப்பொழுது கிடைக்கும். குடும்பத்தை விட்டுப்பிரிந்து வேலைபார்த்து வந்தவர்கள், இனி ஒன்றுசேரும் வாய்ப்பு உண்டு. இக்காலத்தில் கும்ப ராசிக்கு சனி செல்கின்றார். அர்த்தாஷ்டமச் சனியாக சனி பகவான் வந்தாலும், கும்ப ராசி அவருக்கு சொந்த வீடு என்பதால் நன்மைகளையே வழங்குவார். சொல்லும் சொற்கள் எல்லாம் வெல்லும் சொற்களாக மாறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.

குருப்பெயர்ச்சிக் காலம்

சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி வருகின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வெற்றி நடைபோடும். வருமானம் திருப்தி தரும். மீனத்தில் குரு வரும்பொழுது, உங்கள் ராசியையே பார்க்கப் போகின்றார். எனவே ஆரோக்கியம் சீராகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, கொஞ்சம் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். கொடுத்த கடன்களால் பிரச்சினைகள் ஏற்படும்.

ராகு-கேது பெயர்ச்சிக்காலம்

21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் புதியபாதை புலப்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வழக்கமான பணிகளில் ஏற்பட்ட சுணக்கம் அகலும். 12-ல் கேது சஞ்சரிப்பதால் ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவினர் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். ஆன்மிகத்திற்கு என்று அதிக தொகையைச் செலவிடு வீர்கள். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும்.

வெற்றி பெற வைக்கும் வழிபாடு

சதுர்த்தி விரதமிருந்து ஆனைமுகப் பெருமானை வழிபடுவதோடு, சஷ்டி அன்று முருகப்பெருமானையும் வழிபட்டு வாருங்கள். இல்லத்து பூஜை அறையில் வராகி படம் வைத்து, வராகி கவசம் பாடி வழிபட்டால் வசதி வாய்ப்புகள் பெருகும். வளர்ச்சியும் அதிகரிக்கும்.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரம் அடைகின்றார்.

இக்காலத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ளமாட்டார்கள். எவ்வளவுதான் நன்மை செய்தாலும் குடும்பத்தினர் குறைகூறிக்கொண்டே இருப்பர். விரயங்கள் அதிகரிக்கும். அலைச்சலைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது, யோசித்து செயல்படுங்கள்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்

பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாகவே இருக்கின்றது. ஏழரைச்சனி விலகி விட்டதால் இனி இல்லம் தேடி நல்ல தகவல்கள் வந்துசேரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பொருளாதார நிலை உயரும். ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகரிக்கும். கணவன் -மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதியும், கல்யாண முயற்சி கருதியும் நீங்கள் எடுத்த செயல்களில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு, உத்தியோக உயர்வும், ஊதிய உயர்வும் உண்டு. தாய் மற்றும் உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர்.