தனுசு - ஆண்டு பலன் - 2023

Update: 2022-12-31 18:45 GMT

மூலம், பூராடம், உத்ராடம் 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)

ஏழரைச்சனி விலகி இனிமை தரும் நேரம்

தனுசு ராசி நேயர்களே!

பிறக்கும் புத்தாண்டில் ஏழரைச் சனி விலகி வாழ்வை வளப்படுத்தப் போகின்றது. கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக மாறும். குரு, சனி, ராகு-கேதுக்களின் பெயர்ச்சிக் காலங்கள் அனைத்தும் உங்களுக்கு கொடுக்கும் பலன்கள் நற்பலன்களாகவே இருக்கின்றன.

தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக் கும். தடைகள் தானாக விலகும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உத்தியோகம், தொழிலில் உயர் நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடு களை யோகபலம் பெற்ற நாளில் செய்து வந்தால் திட்டமிட்ட காரியங்கள் மேலும் சிறப்பாக முடியும்.

புத்தாண்டு கிரக நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, சுக ஸ்தானத்தில் சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார். 5-ம் இடத்தில் ராகுவும், 11-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். உங்கள் ராசியிலேயே சூரியன், புதன் இணைந்திருக்கிறார். பஞ்சம விரயாதிபதியான செவ்வாய் வக்ரம் பெற்று 6-ம் இடத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்தாண்டு பிறக்கிறது.

புத்தாண்டு பிறக்கும் பொழுது குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே சென்ற ஆண்டில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் உருவாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரக்கூடிய வாய்ப்பு உண்டு. தொழில் மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். நம்பிக்கைக்குரிய நிறுவனங்களில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். படித்து முடித்த பிள்ளைகள், வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்று நினைத்தவர்கள், அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் பலன் கிடைக்கும்.

கும்ப - சனி சஞ்சாரம்

29.3.2023 அன்று சனி பகவான், அவிட்டம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிச் செல்கிறார். 24.8.2023 அன்று மகரத்திற்கு வக்ர இயக்கத்தில் வரும் அவர், 20.12.2023 அன்று மீண்டும் கும்ப ராசிக்குச் செல்கிறார். இடையில் கும்ப ராசியிலும், மகர ராசியிலும் வக்ர இயக்கத்தில் சஞ்சரித்து, எண்ணற்ற மாற்றங்களை உருவாக்குகிறார். வரும் மாற்றங்கள் நல்ல மாற்றங்களாக அமைய சனிக்கிழமை ஆதியந்தப் பிரபுவை வழிபடுவது நல்லது. சனிப்பெயர்ச்சியான ஒரு மாதத்தில் குருப் பெயர்ச்சியாகப் போவதால் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதியும். எனவே சனிப்பெயர்ச்சி யோகம் தரும் பெயர்ச்சியாக உங்களுக்கு அமையப் போகிறது. கூட்டு முயற்சியில் இருந்து விலகித் தனித்து இயங்க வாய்ப்பு உருவாகும். ஆரோக்கியத் தொல்லை ஏற்பட்டாலும், உணவுக் கட்டுப்பாட்டால் சரிசெய்து கொள்ள முன்வருவீர்கள்.

மேஷ - குரு சஞ்சாரம்

22.4.2023 அன்று குரு பகவான், அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகப் போகிறார். அவரது பார்வை 1, 9, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. உங்கள் ராசியில் குரு பார்வை பதிவது யோகம்தான். உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றி காண்பீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரைகுறையாக நின்ற பணிகள் முழுமையாக முடிவடையும். வருமானம் இருமடங்கு உயரும். வருங்காலத்தை நலமாக்கிக் கொள்ள எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் அன்பு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். சகோதரர்கள் சொத்துக்களை பங்கிட்டுக் கொள் வதில் சமரச முயற்சிக்கு வருவர். முன்னோர்கள் கட்டி வைத்து சிதிலமடைந்த ஆலயங்களை புதுப்பிக்கும் யோகம் உண்டு. புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.

11-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் லாப ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டி லும் கூடுதல் லாபம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் தொழிலை விரிவு செய்யும் அளவிற்கு மூலதனம் வந்து சேரும். முன்னேற்றப் பாதை யில் அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் நேரம் இது.

ராகு-கேது பெயர்ச்சி

8.10.2023 அன்று ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன ராசியில் ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ராகு பகவான் 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போவதால், அர்த்தாஷ்டம ராகுவாக அமர்கிறார். எனவே சுகக்கேடுகள், ஆரோக்கியத் தொல்லைகள் உருவா கலாம். குடும்பத்தில் மூன்றாம் நபர்களின் தலையீடுகளால் பிரச்சினைகள் அதிகரிக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.

தொழில் ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் தொழில் போட்டி அதிகரிக்கும். உங்கள் துறையைச் சார்ந்தவர்களே உங்களுக்கு எதிரியாக மாறுவர். பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டுப் புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ள முன்வருவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர் களுக்கு பொறுப்புகள் மாற்றப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைப்பது அரிது.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

இப்புத்தாண்டில் 4 முறை செவ்வாய் - சனி பார்வை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு செவ்வாய் பஞ்சமாதிபதி. எனவே இக்காலத்தில் மனநிம்மதி குறையும். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். வேலையை விட்டுவிடலாமா? என்று கூட சிந்திப்பீர்கள். வீடுமாற்றம், இடமாற்றம் திருப்தி தராது. புதிய கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

சனிக்கிழமை தோறும் விரதமிருந்து அனுமனை வழிபடுவது நல்லது. யோகபலம் பெற்ற நாளில் நாமக்கல் விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் சேமிப்பும் உயரும். செல்வாக்கும் அதிகரிக்கும்.

சனி மற்றும் குருவின் வக்ர காலம்

27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகர ராசியிலும் சனி பகவான் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியான அவர், வக்ரம் பெறும்பொழுது கவனமுடன் செயல்பட வேண்டும். குடும்பச்சுமை கூடும். கொடுக்கல்- வாங்கல்கள் திருப்தி தராது. பணப்பொறுப்புகள் சொல்வதால் சில பிரச்சினைகள் உருவாகும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்காது.

12.9.2023 முதல் 19.12.2023 வரை மேஷ ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உடல்நலனில் கவனம் தேவை. உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்ய இயலாது. சொத்து வாங்கும் முயற்சியில் தடைகள் ஏற்படும். சொந்தங்களால் பல பிரச்சினைகள் வந்து அலைமோதும். புதிய வாகனங்கள் வாங்கும் பொழுது யோசித்து வாங்குவது நல்லது.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டில் ஏழரைச் சனி விலகப் போவதால் நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகி ஆனந்தமான வாழ்க்கை அமையப்போகிறது. கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகள் பகை மறந்து செயல்படுவர். பிள்ளைகளால் பெருமை சேரும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். வருமானம் போதுமானதாக இருக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் அகலும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

மேலும் செய்திகள்