புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2022 முதல் 17-10-2022 வரை
யாரையும் சந்தித்த உடனேயே நண்பர்களாக ஆக்கிக் கொள்ளும் தனுசு ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குருவும், தனாதிபதி சனியும் வக்ரத்தில் இருக்கிறார்கள். இதனால் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும்.
கன்னி - சுக்ரன் சஞ்சாரம்
புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகைக் கிரகமாக விளங்கும் சுக்ரன், நீச்சம் பெறுவது யோகம்தான். எதிர்பாராத நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் உண்டு. பெண் வழிப் பிரச்சினைகள் அகலும். 'உத்தியோக மாற்றம் செய்யலாமா?' என்று சிந்தித்தவர்களுக்கு, புதிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.
கன்னி - புதன் சஞ்சாரம்
புரட்டாசி 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், உச்சம் பெறும் இந்த நேரம் யோகமான காலமாகும். திருமண வாய்ப்புகள் கைகூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புதன் கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமாக இருந்தாலும், தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறும் பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், சப்தம ஸ்தானத்திற்கு செல்லும்பொழுது பிள்ளைகள் வழியில் சுபச்செலவு ஏற்படும். இடம், பூமியால் லாபம் உண்டு.
இக்காலத்தில் செவ்வாய் பார்வை சனி மீது பதிவதால் திடீர் பிரச்சினைகள் பலவும் தலைதூக்கும். உடல்நலத் தொல்லை ஏற்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. சொத்துக்களால் சில பிரச்சினை வரலாம். துணிந்து எந்த முடிவும் எடுக்க இயலாது.
சனி வக்ர நிவர்த்தி
புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். இது ஒரு இனிய காலமாகும். தட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து தனவரவு தாராளமாக வந்து சேரும் நேரம் இது. தனாதிபதி சனி பலம் பெறுகிறார். சகாய ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் சனி, வக்ர நிவர்த்தியாகும் நேரத்தில் நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல்கள் வரலாம். குடும்பத்தில் அமைதி கூடும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.
இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் விநாயகரை வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-செப்டம்பர்: 23, 24, 29, 30, அக்டோபர்: 5, 6, 9, 10.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டாலும், மனநிம்மதி குறைவாகவே இருக்கும். ஆரோக்கியத் தொல்லைகளும் உண்டு. குருவின் வக்ர நிவர்த்தி காலம் வரை பொறுமையாக செயல்படுங்கள். கணவன் - மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். பணிபுரியும் பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். திறமைக்கேற்ற அங்கீகாரம் உண்டு.