தனுசு - தமிழ் மாத ஜோதிடம்

Update: 2022-07-16 16:33 GMT

ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2022 முதல் 16-08-2022 வரை


மனதில் பட்ட கருத்துக்களை மறைக்காமல் எடுத்துரைக்கும் தனுசு ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சுக ஸ்தானத்தில் இருப்பதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

சிம்ம - புதன் சஞ்சாரம்

ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் போது நினைத்த காரியங்கள் நிறைவேறும். நீடித்த நோய் அகலும். அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும் விதத்தில் கிரக நிலைகளின் சஞ்சாரம் இருக்கிறது. ஆயினும் ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் ஒருசில காரியங்கள் தடைப்படலாம். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

கடக - சுக்ரன் சஞ்சாரம்

ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியான அவர் 8-ம் இடத்திற்கு வரும்போது, 'விபரீத ராஜயோகம்' செயல்படும். பகைக் கிரகம் வலுவிழக்கும் இந்த நேரத்தில் பணவரவு திருப்தி தரும். கல்வி மற்றும் அரசு வேலை தொடர்பான முயற்சி கை கூடும். புதிய நகைகளை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.

குருவின் வக்ர இயக்கம்

ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் குரு வக்ரம்பெறும் போது எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திருப்பம் நிகழும். ஆரோக்கியத் தொல்லை உண்டு. உங்கள் ராசிநாதனாகவும், சுக ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் குரு இருப்பதால் கவனத்தோடு செயல்படுங்கள். நீங்கள் நன்மை செய்தாலும், பிறருக்கு அது தீமையாகவே தெரியும்.

வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. வெளிநாட்டிற்குச் சென்றவர்களில் சிலர், வேலையின்றி திரும்ப நேரிடும். படித்து முடித்து பல காலமாக வேலையின்றி தவித்தவர்களுக்கு, தற்காலிகப் பணி அமையலாம். இந்த நேரத்தில் குலதெய்வம் மற்றும் எல்லை தெய்வங்களை வழிபடுவது நல்லது.

ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்

ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி 6-ல் வரும்போது, புதிய திருப்பங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு. புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். அருளாளர்களின் ஆலோசனை கைகொடுக்கும். அரசு வழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கலாம். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருந்து, தொழில் வளம் பெற வழிகாட்டுவர். 12-க்கு அதிபதியாகவும் செவ்வாய் இருப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். இட விற்பனை மூலம் தன லாபம் கிடைக்கலாம்.

இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 19, 20, 31, ஆகஸ்டு: 1, 5, 6, 11, 12 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் சுபச்செலவு அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அன்பும், ஆதரவும் கூடும். பிள்ளைகளின் கல்யாணம், சீமந்தம் செய்யும் சூழ்நிலை உருவாகும். ஒரு சிலருக்கு, வீடு மாற்றம் அமையலாம். உறவினர் பகை அகலும். பணிபுரியும் பெண் களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சகப் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குருவின் வக்ர காலத்தில் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மேலும் செய்திகள்