14.4.2023 முதல் 13.4.2024 வரை
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)
ஏழரை விலகியது, இனிய நேரம் வருகிறது!
அரசியல் முதல் ஆன்மிகம் வரை அறிந்து வைத்திருக்கும் தனுசு ராசி நேயர்களே!
சகலகலா வல்லவர்களாக விளங்கும் உங்களுக்கு இந்த சோபகிருது புத்தாண்டு ஏழரைச்சனி விலகியபிறகு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இனித் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வர். கெட்டிமேளம் கொட்டும் வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தவர்களுக்கு அது கை கூடும். கண்ணேறு படும் விதத்தில் உங்கள் முன்னேற்றம் அமையப் போகிறது.
ஏப்ரல் 22-ம் தேதி குரு பகவான் மேஷ ராசிக்குச் செல்கின்றார். அதன் பார்வையும் உங்கள் ராசியில் பதியப் போகின்றது. எனவே ஆண்டு முழுவதும் உங்களுக்கு வேண்டிய நற்பலன் கிடைக்கப் போகிறது. ஆரோக்கியம் சீராகும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் வெற்றி காணப் போகின்றீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும். வீடு தொடர்பான வில்லங்கங்கள் விலகும்.
புத்தாண்டில் மூன்று முறை சனி, செவ்வாய் பார்வை ஏற்படுகின்றது. அந்த நேரங்களில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. 8.10.2023 அன்று மீன ராசிக்கு ராகுவும், கன்னி ராசிக்கு கேதுவும் செல்கின்றார்கள். அதன் விளைவாக ஒருசிலருக்கு தொழில் மாற்றங்கள், இடமாற்றங்கள் வரலாம். பெற்றோர் உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடை ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது.
உங்கள் ஜாதகத்தில் வலிமை வாய்ந்த திசாபுத்தி நடைபெறுமேயானால் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. அல்லாத பட்சத்தில் காரியத் தடைகள் வந்து அலைமோதும். அதுபோன்ற காலங்களில் தெய்வ வழிபாடுகளை முறையாக மேற்கொண்டால் திருப்தியான வாழ்க்கை உங்களுக்கு அமையும்.
குருப்பெயர்ச்சி!
சித்திரை 9-ந் தேதி (22.4.2023) அன்று மேஷ ராசிக்கு குரு பகவான் வருகின்றார். அப்போது அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு 9, 11 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. எனவே அந்த இடங்கள் புனிதமடைகின்றது. ஜென்ம ராசியைக் குரு பார்ப்பதால் உடல் நலமும், மன நலமும் சிறப்பாக இருக்கும். உறவினர் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். வாகன யோகம் வந்து சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
குருவின் பார்வை 9, 11 ஆகிய இடங்களில் பதிவதால் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். நினைத்ததை செய்ய நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய சந்தோஷச் செய்திகள் வந்து சேரும். மருத்துவச் செலவுகள் குறையும். வாய்தாக்கள் ஓயும். புதிய கிளைத்தொழில்கள் தொடங்கி தொழில் வளத்தைப் பெருக்கிக் கொள்வீர்க்ள. இந்த நேரத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு எல்லாவற்றையும் வாங்கி மகிழ வருமானம் உயரப் போகின்றது.
ெவளிநாடு செல்லும் யோகமும் ஒருசிலருக்கு கைகூடும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக் கொடுப்பர். பிள்ளைகளால் வந்த பிரச்சினைகள் அகலும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். செய்தொழிலில் எதிர்பார்த்ததை விடக் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகள் நெருக்கமாகி வேண்டிய சலுகைகளை வழங்குவர்.
கும்பச் சனி!
கிரகங்களில் வலிமை வாய்ந்த கிரகம் சனியாகும். உங்கள் ராசிக்கு நடைபெற்று வந்த ஏழரைச் சனி, ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே விலகி விட்டது. எனவே இந்த ஆண்டு உங்களுக்கு எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கப் போகின்றது. தொழிலில் இருந்த தொய்வு அகலும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். முக்கியப் புள்ளிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். ஊர் மாற்றங்களும், வீடு மாற்றங்களும் உறுதியாகலாம். கடன் சுமை குறையும். கவலைகள் தீரும். இக்காலத்தில் சனிக்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நன்மைகள் நடைபெறும்.
கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி இடையில் வக்ரமும் பெறுகின்றார். பின்னர் 24.8.2023 முதல் மகரத்திற்கு வந்தும் சனி வக்ரம் பெறுகின்றார். அங்கிருந்து மீண்டும் 20.12.2023-ல் கும்ப ராசிக்கு முறையாகப் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். இந்த வக்ர காலத்தில் கொஞ்சம் கவனமாகச் செயல்பட வேண்டும். பணப்புழக்கத்தில் இருந்த வளர்ச்சி நிலை மாறும். இனத்தார் பகையும், எதிர்பாராத வழக்குகளும் வரலாம். கனத்த இதயத்தோடு காட்சி தரும் நேரமிது. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். பொன், பொருட்கள் வாங்குவதிலும், புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களும் கால தாமதத்தை தவிர்க்க இயலாது. எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாழ்க்கை அமையும். நிச்சய தார்த்தம் செய்த திருமணம் நிகழ்வது கூட தாமதப்படலாம். எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய நேரமிது.
ராகு-கேது பெயர்ச்சி!
8.10.2023 அன்று மீன ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் ராகுவும், 10-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போவதால் வீடு மாற்றங்கள், இட மாற்றங்கள் வரலாம். விரயங்கள் அதிகரிக்கும். 'பாடுபட்டுத் தேடிய பணம் பலவழிகளிலும் விரயமாகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. உடல் நலத்திலும் திடீர் திடீரென பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் திகைக்க வைக்கும். உறவினர்களுக்கு நீங்கள் நன்மை செய்தாலும் அது தீமையாக தெரியும். சொத்துப் பிரச்சினைகளும், சொந்தங்களின் அனுசரிப்பும் குறையும். இக்காலத்தில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் செய்வது நல்லது.
10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பதவி மாற்றங்கள் வரலாம். சாதாரண உத்தியோகமாக இருந்தாலும், உர்யமட்ட அதிகாரியாக இருந்தாலும், அரசியல் களத்தில் இடம்பெற்றவர்களாக இருந்தாலும் வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. புது ஒப்பந்தங்கள் வந்தாலும் கையெழுத்திடும் பொழுது கவனம் தேவை. பெற்றோர்களின் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். பிரச்சினைகளைச் சந்திக்கும் பொழுது ஆரம்பத்திலேயே தீர்வு காண்பது உத்தமம். அதை வளரவிடக்கூடாது.
வளர்ச்சி தரும் வழிபாடு!
புத்தாண்டில் புதுமை படைக்க சனிக்கிழமை தோறும் சனி கவசம் பாடி சனி பகவானை வழிபடுவது நல்லது. சிறப்பு வழிபாடாக திருநள்ளாறு சென்று, அங்குள்ள காக வாகனத்தானை யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் தேக நலனும் சீராகும், செல்வ நிலையும் உயரும்.
பெண்களுக்கான பலன்கள்!
புத்தாண்டின் தொடக்கம் மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறை அகலும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல காரியங்கள் இல்லத்தில் படிப்படியாக நடைபெறும். வீடு, இடம் வாங்கப்போட்ட திட்டம் நிறைவேறும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஒருசிலருக்கு உருவாகலாம். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவலும் உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி செலவிடுவீர்கள். அவர்களின் கல்வி மற்றும் கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.
குரு-சனி வக்ரம்!
12.9.2023 முதல் 20.12.2023 வரை மேஷத்தில் குரு வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதனாகவும், சுக ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் வக்ரம் பெறும்பொழுது ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். அதைச் செய்வோமா? இதைச்செய்வோமா? என்ற மனக்குழப்பம் காண்பீர்கள். தெம்பு குறைந்து திடீர் தாக்குதல்கள் உடல்நலத்தில் உருவாகும். வம்பு, வழக்குகள் வாசல் தேடி வரும். நண்பர்கள் கூட பகையாகலாம். நாடு மாற்றங்களும், வீடு மாற்றங்களும் திருப்தி தராது. கடன் பிரச்சினை தலைதூக்கும்.
27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், பிறகு 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகரத்திலும் சனி வக்ரம் பெறுகின்றார். இந்த வக்ர காலத்தில் முயற்சிகளில் முட்டுக்கட்டைகள் ஏற்படும். வளர்ச்சிக்கு குறுக்கீடாக பலரும் வந்து நிற்பர். குடும்பச் சுமை கூடும். கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். 'சரிந்து போன வாழ்க்கை சமநிலை அடைய என்ன செய்யலாம்' என்ற கவலை ஒருபுறம், 'தங்கம்-வெள்ளி இல்லத்தில் தங்கவில்லையே' என்ற கவலை மற்றொரு புறம் காணப்படும். இறை நம்பிக்கையோடு எதையும் செய்ய வேண்டிய நேரமிது.