மீனம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

Update: 2022-05-23 09:44 GMT

27-12-2020 முதல் 20-12-2023 வரை

பதினோராமிடத்தில் சனி! பண வரவுதான் இனி! மீன ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சனி. அவர் லாப ஸ்தானத்தில் தனது சொந்த வீடான மகரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் மிகச் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் வந்து குதூகலத்தை வழங்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். சுபகாரியங்கள் மளமளவென்று நடைபெறும். பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.

மகர ராசியில், உங்கள் ராசிநாதன் குரு பகவான் நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி பகவானும் இணைந்து 'நீச்சபங்க ராஜயோக'த்தை உருவாக்குகிறார்கள். 10-க்கு அதிபதி குரு 11-ல் சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். அரசியல் சார்ந்த பிரமுகர்களால் ஆதாயம் உண்டு.

லாப ஸ்தானச் சனியின் ஆதிக்கம்

டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கப் போகின்றார். அந்த இடம் லாப ஸ்தானம் என்று சொல்லப்படுவதால் இதுவரை எவ்வளவு முயற்சி செய்தும் முடிவடையாத தொழில் தொடர்புகள், இப்பொழுது முடிவடைந்து பெருந்தொகை கையில் புரளும். புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கும்.

சனியின் பார்வைப் பலன்கள்

உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், உங்கள் ராசியையும், 5, 8 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின்றார். உடல் நலம், குடும்பம், புகழ், ஆரோக்கியம், பூர்வ புண்ணியம், பிள்ளைகள், பூர்வீகச் சொத்துக்கள், ஆயுள் விருத்தி, ஆரோக்கியம் போன்றவற்றை எல்லாம் அறிந்து கொள்ளும் விதத்தில் சனியின் பார்வை பதிவதால், அதற்கேற்ற பலன்கள் உங்களுக்கு வந்துசேரும். குறிப்பாக சனி ராசியைப் பார்ப்பதால் ஆரோக்கியத் தொல்லை வரத்தான் செய்யும். உங்களுக்கோ, உங்களைச் சார்ந்த குடும்பத்தினருக்கோ உடல்நலப் பாதிப்பும், மருத்துவச் செலவும் உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும்.

சனியின் பார்வை 5-ல் பதிவதால் பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். பிள்ளைகளின் மேற்படிப்பை முன்னிட்டு நீங்கள் செய்த ஏற்பாடுகள் பலன் தரும். படித்து முடித்த பிள்ளைகள் வேலை வாய்ப்பிற்காகச் செய்த முயற்சியும் கைகூடும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகளில் மட்டுமல்லாமல் பெற்றோர்களின் முத்துவிழா, பவளவிழா போன்ற விழாக்கள் மற்றும் புதுமனை புகுவிழாக்கள் நடத்தும் யோகம் உண்டு. 'பூர்வீக இடம் கையை விட்டுப் போய்விட்டதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, புது இடம் சொந்த ஊரிலேயே வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. சனியின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் கைகூடிவரும்.

சனியின் பாதசாரப் பலன்கள்

27.12.2020 முதல் 27.12.2021 வரை:சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, எதிரிகளின் தொல்லை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். திட்டமிட்ட காரியத்தை திடீர் திடீரென மாற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு 6-க்கு அதிபதியாக சூரியன் விளங்குவதால் அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகளில் தாமதம் ஏற்படும். ஆதரவுக்கரம் நீட்டுவதாகச் சொன்னவர்கள் விலகிக்கொள்வர். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். நீங்கள் என்ன செய்தாலும் குடும்பப் பெரியவர்கள் நன்றி காட்ட மாட்டார்கள். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு.

28.12.2021 முதல் 26.1.2023 வரை:சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, திட்டமிட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். திடீர் முன்னேற்றம் வந்து சேரும். கல்யாணச் சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். வர்த்தகம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிந்து மகிழ்ச்சி காண்பீர்கள். 'வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள்.

27.1.2023 முதல் 19.12.2023 வரை:செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, வாழ்க்கைப் பாதையில் நல்ல மாற்றங்கள் வரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் உண்டு. வீண் கவலைகள் அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். உறவினர்களின்் மனவருத்தங்கள் மாறும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் நட்பால் அனைத்து வழிகளிலும் நன்மை கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், 'விருப்ப ஓய்வில் வெளிவந்து தொழிலைத் தொடங்கலாமா?' என்று யோசிப்பர். இக்காலத்தில் சனியும் கும்பத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். எனவே வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பதில் இருந்த தடைகள் அகலும்.

குருப்பெயர்ச்சிக் காலம்

சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் விரய ஸ்தானத்தில் இருப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், இட மாற்றங்களும் உருவாகும். தொழிலில் கவனம் தேவை. குடும்பச் சுமை கூடும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ராசிநாதன் ராசியிலேயே சஞ்சரிப்பதால் நல்ல பலன்கள் இல்லம் தேடி வரும். எதிரிகள் விலகுவர்.

மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கல்கள் திருப்தி தரும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு உன்னத நிகழ்வு இல்லத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் உயர் பதவி உண்டு.

ராகு- கேது பெயர்ச்சிக் காலம்

21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றனர். மேஷ ராகுவின் ஆதிக்க காலத்தில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். பற்றாக்குறை மாறும். விலகிச்சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்திணைவர். அஷ்டமத்தில் கேது இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். விரயங்கள் கூடும்.

8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் கூடலாம். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்ய இயலாது.

வெற்றி பெற வைக்கும் வழிபாடு

வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து தட்சிணாமூர்த்தியை வழிபடுவதோடு, இல்லத்து பூஜை அறையில் வள்ளி-தெய்வானை உடனாய முருகன் படம் வைத்து முருகப்பெருமானுக்குரிய பதிகங்களை பாடி வழிபடுவதன் மூலம் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்லலாம்.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகின்றார். இக்காலத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். தொழிலில் விரயங்கள் அதிகரிக்கும். அயல்நாடு சென்று வேலை கிடைக்காமல் திரும்பும் சூழ்நிலையும் உண்டு. கடன் சுமையின் காரணமாக கட்டிய வீட்டைக் கொடுத்துவிட்டு வேறு இடம் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். நெருக்கடி நிலை அதிகரிக்கும். எதிலும் கவனம் தேவைப்படும்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்

இந்த சனிப்பெயர்ச்சி நன்மை தரும் பெயர்ச்சியாகவே அமைகின்றது. குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். உடன்இருப்பவர்களின் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். திருமணம், புத்திரப்பேறு ஆகியவற்றில் இருந்த தடைகள் அகலும். தாய் மற்றும் சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சேமிப்பு உயரும். பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். மேலதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைவீர்கள். வாகனம் வாங்க, வீடு கட்ட உதவி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். பிள்ளைகளால் பெருமை சேரும்.