மீனம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் - சோப கிருத ஆண்டு

Update: 2023-04-13 18:45 GMT

14.4.2023 முதல் 13.4.2024 வரை

(பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

தொடங்கி விட்டது ஏழரைச் சனி

பெருந்தன்மையும், பிறருக்கு சேவை செய்யும் குணமும் பெற்ற மீன ராசி நேயர்களே

வந்த விருந்தினரை வரவேற்பால் திணறடிக்கும் உங்களுக்கு இந்த சோபகிருது புத்தாண்டு வரவைவிடச் செலவு அதிகரிக்க வைக்கும் ஆண்டாகவே அமையப் போகின்றது. வருமானத்திற்கு மீறிய செலவுகள் ஏற்படும். வாய்ப்புகள் பலவந்தும் கைநழுவிச் செல்லலாம். புதிய முயற்சிகளை போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டிய நேரமிது.

ஆண்டின் தொடக்கத்தில் 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருக்கிறார்கள். ஜென்ம குருவின் ஆதிக்கமும் நடைபெறுகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்தாண்டு பிறப்பதால் ஒவ்வொரு அடியையும் யோசித்து எடுத்துவைக்க வேண்டிய நேரமிது. மேலும் ஏப்ரல் 22-ல் தன ஸ்தானத்திற்கு குரு, பெயர்ச்சியாகி வரப்போகின்றார்.

வருடம் தொடங்கும் பொழுதே ஏழரைச் சனியின் ஆதிக்கம் தான் இருக்கின்றது. அதில் முதல் இரண்டரை ஆண்டுகளாக விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறப் போகின்றது. உங்கள் சுய ஜாதகத்தில் சனியின் சுற்று முதல் சுற்றா, இரண்டாவது சுற்றா, மூன்றாவது சுற்றா என்பதை அறிந்து கொள்ளுங்கள். இரண்டாவது சுற்று (பொங்குச்சனி) காலமாக இருந்தால் ஓரளவு நற்பலன்கள் நடைபெறும். விரயத்திற்கேற்ற வருமானம் வந்து சேரும். இடையில் சனி பகவான் வக்ரம் பெற்று மகர ராசிக்கும் வருகின்றார். அங்கிருந்து மீண்டும் 20.12.2023-ல் கும்ப ராசிக்குச் செல்கின்றார்.

இடையில் மூன்று முறை சனி, செவ்வாய் பார்வை ஏற்படுகின்றது. முரண்பாடான கிரகங்களின் பார்வை என்பதால் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். குறிப்பாக வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். சில முயற்சிகளில் தவறான முடிவுகளை எடுத்து செயல்பட்டு மன உளைச்சல் காண்பீர்கள்.

8.10.2023-ல் உங்கள் ராசிக்கு ராகு வருகின்றார். கன்னி ராசிக்கு கேது செல்கின்றார். அப்பொழுது சர்ப்பதோஷம் உருவாகும். எனவே சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை உங்களுக்கு ஏற்ற ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்வது நல்லது.

உங்கள் சுய ஜாதகத்தில் வலிமை வாய்ந்த திசாபுத்தி நடந்தால் நினைத்தது நிறைவேறும். திசாபுத்தி பலமிழந்திருந்தால் பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும்.

குருப்பெயர்ச்சி

சித்திரை 9-ந் தேதி (22.4.2023) அன்று மேஷ ராசி்க்கு குரு பகவான் வருகின்றார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு பகவான். அவரது பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால் அந்த இடங்கள் புனிதமாகின்றன. எனவே எதிரிகள் உதிரிகளாவர். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் இதுவரை தாமதித்து வந்த பதவி உயர்வு இப்பொழுது இடமாற்றத்துடன் கிடைக்கும். மாற்று வைத்தியம் உடல்நலத்தைச் சீராக்கும்.

8-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்பு உருவாகும். தொழில் வளர்ச்சியில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். இடையூறு சக்திகள் அகலும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வரும் வாய்ப்புக் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். இழந்த சொத்துக்களை மீண்டும் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அது கைகூடலாம். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பறிபோன பதவிகள் மீண்டும் கிடைக்கலாம். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தை வழங்கலாம்.

10-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் செய்தொழில் சிறப்பாக இருக்கும். உங்களுடைய தனித்திறமையினால் லாபத்தை அதிகரிக்க வைப்பீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்றதொழில் இப்பொழுது சொந்தக் கட்டிடத்திற்கு மாறும். ஆடம்பரச் செலவுகளால் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பங்குச்சந்தையால் பலன் கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகம் மூலம் வருமானம் உயர நண்பர்கள் வழிகாட்டுவர்.

கும்பச் சனி

கிரகங்களில் வலிமை வாய்ந்தவர் சனி பகவான். அவர் வருடத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே விரயங்கள் கூடுதலாக இருக்கும். வீடு மாற்றங்கள், இட மாற்றங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். பணியாளர் ஒத்துழைப்புக் குறையும். குடும்பச்சுமை கூடும். இக்காலத்தில் விரயங்களை சுப விரயங்களாக மாற்றிக்கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கு காலாகாலத்தில் நடைபெற வேண்டிய சுபகாரியங்களை நடத்துவதில் கவனம் செலுத்தலாம். வீடு கட்டும் முயற்சி அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். மேலும் கேட்ட சலுகைகளையும் கொடுக்கலாம்.

கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி இடையில் வக்ரம் பெறுகின்றார். 24.8.2023-ல் மகரத்திற்கு வந்தும் சனி வக்ரம் பெறுகின்றார். அங்கிருந்து மீண்டும் 20.10.2023-ல் கும்ப ராசிக்கு முறையாகச் செல்கின்றார். இந்த வக்ர காலத்தில் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரித்து ரணசிகிச்சை கூட ஏற்படலாம். திசாபுத்தி பலம்பெற்றிருந்தால் ஓரளவு நற்பலன் கிடைக்கும். மனக்குழப்பம் அகல சனியை வழிபடுவது நல்லது.

ராகு-கேது பெயர்ச்சி

8.10.2023 அன்று மீன ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கே ராகு வருவதால் பயணங்கள் அதிகரிக்கும். தீட்டிய திட்டங்கள் திசைமாறிச் செல்லும். பொருளாதாரத்தில் ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான இடமாறுதல் கிடைக்கும். சம்பள உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டுச்சென்று பணிபுரிய நேரிடும்.

சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கப் போவதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். வீடு மாற்றம், இட மாற்றம் உண்டு. வெளிநாட்டுப் பயணத்தில் திருப்தி ஏற்படாது. குடும்பத்தில் கவனத்தோடும், நிதானத்தோடும் செயல்பட்டால் கருத்து வேறுபாடுகள் ஏற்படாது. ராகு- கேது பெயர்ச்சிக் காலத்தில் சர்ப்ப தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் ஒற்றுமையை பலப்படுத்திக் கொள்ளலாம். 'திருமணம் முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல வரன்கள் வந்தாலும், பொருத்தம் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது.

வளர்ச்சி தரும் வழிபாடு

புத்தாண்டில் பொருளாதார நிலை உயர சனிக்கிழமை தோறும் சனி கவசம் பாடி சனீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். யோகபலம் பெற்ற நாளில் பொங்கு சனிக்குரிய ஆலயமாக விளங்கும் தஞ்சை மாவட்டம் திருக்கொள்ளிக்காடு சென்று தரிசனம் செய்து வந்தால் நினைத்தது நிறைவேறும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டு ஏழரைச் சனியின் ஆதிக்கத்தோடு தொடங்குவதால் கடின உழைப்பே கவலையைப் போக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் தான் ஆதாயம் கிடைக்கும். தெய்வ வழிபாடு திருப்தி தரும். வருமானப் பற்றாக்குறையால் கடன் சுமை கூடும். திட்டமிட்டுச் செலவு செய்யுங்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். குடும்பப் பிரச்சினையை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். பிள்ளைகளை நெறிப்படுத்தி கவனிப்பது அவசியம். யோசித்துச் செயல்பட்டால் யோகம் தரும் ஆண்டு.

நல்லதை நடத்தும் உள்ளங்கை

வருடப் பிறப்பன்று அதிகாலையில் உள்ளங்கை இரண்டையும் ஒட்டி வைத்துப் பார்த்து கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அதற்கு காரணம், விரல் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும் அடிப்பகுதியில் துர்க்கையும் குடிகொண்டிருப்பதாக சாஸ்திரம் சொல்கின்றது. கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றிற்கும் அதிதேவதையின் அருள் கிடைக்குமாம். அதுமட்டுமல்லாமல் புத்தாண்டு அன்று பூமா தேவியையும் தொட்டு வணங்கி நமது இஷ்ட தெய்வத்தின் பெயரையும் உச்சரிப்பது நல்லது. மேலும் வலம்புரிச் சங்கு, நிலைக்கண்ணாடி, இறைவன் திருவுருவப் படம், தண்ணீர், ஆலய கோபுரம், கனி வகைகள் முகத்திலும் விழிக்கலாம். மேலும் ஆன்மிகச் சான்றோர்களின் ஆசி பெறுவதும் நல்லது.

குரு-சனி வக்ரம்

12.9.2023 முதல் 20.12.2023 வரை மேஷத்தில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும். தொழில் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குறை கூறிக்கொண்டேயிருப்பர். 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால் எண்ணற்ற பிரச்சினை களைச் சந்திக்க நேரிடலாம். குறிப்பாக யாருக்கேனும் பொறுப்புகள் சொல்லி பணம் வாங்கிக் கொடுத்திருந்தால் அதன் மூலம் நட்பு பகையாகலாம். நாணயப் பாதிப்புகள் ஏற்படலாம்.

27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகரத்திலும் சனி வக்ரம் பெறுகின்றார். இந்த வக்ர காலத்தில் செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். மனநிம்மதி குறையும். தொழில் கூட்டாளிகள் விலகலாம். ஆரோக்கியத் சீர்கேடுகள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பத்திரப்பதிவில் தாமதங்கள் ஏற்படும். தொழிலில் வரும் நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிடும் சூழ்நிலை உண்டு. அனுபவஸ்தர்களின் ஆலோசனை இக்காலத்தில் கைகொடுக்கும்.

மேலும் செய்திகள்