ஆறாம் இடத்தில் குருபகவான்; அக்கறை தேவை உடல்நலனில்
யாரிடமும் எளிதாகப் பழகும் துலாம் ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 13.4.2022 முதல் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். 'ஆறில் குரு வந்தால் ஊரில் பகை' என்பார்கள். எனவே இக்காலத்தில் உங்களுக்கு கொஞ்சம் பொறுமையும், நிதானமும் தேவை. அதே நேரத்தில் 6-க்கு அதிபதியான குரு, தன் சொந்த வீட்டிலேயே சஞ்சரிப்பதால் 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப, ராஜயோகத்தை தரும் விதத்தில் குருவின் செயல்பாடு இருக்கப்போகிறது.
குரு இருக்கும் இடத்தின் பலன்
நவக்கிரகங்களில் சுபகிரகமான குருபகவான், இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் என்றாலும், உங்கள் ராசிக்கு அவர் இருக்கும் 6-ம் இடம், வியாதி, எதிர்ப்பு, கடன், இடையூறு, சஞ்சலம், ஏமாற்றம், வழக்குகள், சுயமரியாதை போன்றவற்றை பற்றி அறிந்துகொள்ள உதவும் இடமாகும். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதி குரு என்பதால் கடன் சுமை குறைய வழி ஏற்படும். எதிரிகளின் தொல்லை குறையும். குடும்பத்தில் இதுவரை இருந்த மனக்கசப்பு மாறும்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குருவின் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. குருவின் பார்வை 2-ம் இடமான வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றில் பதிகிறது. இதனால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். மனதிற்குப் பிடித்த வரன்கள் வந்து மகிழ்ச்சியோடு சுபகாரியம் நடைபெறப்போகிறது. 10-ம் இடத்தை குரு பார்ப்பதால், உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். மேலதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். 10-ம் இடம் தொழில் ஸ்தானம் என்பதால் முத்தான தொழில்கள் வாய்க்கும். ஆதாயம் தரும் தகவல்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டேஇருக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரெனப் பொறுப்புகள் வரலாம். 'செயல் ஸ்தானம்' என்றும் 10-ம் இடத்தைச் சொல்வார்கள். அந்த இடத்தைக் குரு பார்ப்பதால் செயல்களில் வெற்றி கிடைக்கும்.
12-ம் இடத்தில் குருவின் பார்வை பதிவதால், இடமாற்றங்கள், ஊர்மாற்றங்கள் எளிதில் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் ஒருசிலர் ஆர்வம் காட்டுவர். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். சங்கிலித் தொடர்போல கடன் சுமை கூடினாலும், காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். நீண்ட தூரத்தில் பணிபுரியும் உறவினர்கள் உங்கள் நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவர்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள் சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (13.4.2022 முதல் 30.4.2022 வரை)
உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர், பூரட்டாதி நட்சத்திரக் காலில் தனது சொந்த சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது விரயங்கள் கொஞ்சம் கூடும். விழிப்புணர்ச்சி தேவை. குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் -வாங்கல்களில் யாரையும் நம்பி பெரும் தொகை கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.
சனி சாரத்தில் குரு சஞ்சாரம் (1.5.2022 முதல் 24.2.2023 வரை)
உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சனி பகவான். உத்திரட்டாதி நட்சத்திரக் காலில் சனி பகவான் சாரத்தில் குரு சஞ்சாரம் செய்யும் பொழுது, ஆரோக்கியத் தொல்லை அகலும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். பயணங்கள் பலன் தரும். இடமாற்றங்கள் எளிதில் கிடைக்கும். மனமாற்றங்கள் ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவர்.
புதன் சாரத்தில் குரு சஞ்சாரம் (25.2.2023 முதல் 22.4.2023 வரை)
உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். ரேவதி நட்சத்திரக்காலில், புதன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரும். நாடு மாற்றங்களும், வீடு மாற்றங்களும் ஏற்படலாம். பயணங்கள் அதிகரிக்கும். பகல் இரவாகப் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும்.
குருவின் வக்ர இயக்கம் (20.7.2022 முதல் 16.11.2022 வரை)
இக்காலத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமாக விளங்கும் குரு, வக்ரம்பெறுவது யோகம்தான். நல்ல காரியங்கள் பலவும் படிப்படியாக நடைபெறும். நம்பிக்கையோடு செயல்படுவீர்கள். நாணயப் பாதிப்புகள் அகலும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட வாய்ப்பு ஏற்படும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். உடல்நலத்தில் கவனம் தேவை. சிறு சிறு தொல்லைகள் வந்து கொண்டேயிருக்கும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக ஆரோக்கியத் தொல்லை அடிக்கடி ஏற்படலாம். உற்றார், உறவினர்களின் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டேயிருக்கும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது. பகுதி நேரத்தில் சிறிய தொழில் செய்வதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். வெள்ளிக்கிழமை விரதமும், அம்பிகை வழிபாடும் நன்மை தரும்.
வளம் தரும் வழிபாடு
இல்லத்து பூஜையறையில் சுக்ரனுக்குரிய துதிப்பாடல்களை வெள்ளிக்கிழமை தோறும் படித்து வழிபடுங்கள். அனுகூல நாளில் புதுக்கோட்டை அருகே உள்ள திருவேங்கிவாசல் சென்று வியாக்ரபுரீஸ்வரர், அறம்வளர்த்த நாயகியையும், குரு தட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள்.