(மிருகசீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள் வரை)
பெயரின் முதல் எழுத்துக்கள்: க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்
பத்தில் குரு; பதவியில் மாற்றம்
மிதுன ராசி நேயர்களே!
இந்தப் புத்தாண்டில் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் தொடர்கிறது. வருடக் கடைசியில்தான் சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. அதே நேரத்தில் புத்தாண்டுக்கு முந்தைய தினம் குருப்பெயர்ச்சியும் நிகழ்ந்துள்ளது. இதனால் 10-ல் குரு சஞ்சரிக்கிறார். எனவே வருமானத்தைக் காட்டிலும் செலவு கூடும். தடைகளும், தாமதங்களும், ஆரோக்கியத் தொல்லைகளும் அதிகரிக்கும். அவ்வப்போது வழிபாடுகளை மேற்கொள்வது, அனுபவஸ்தர்கள், அருளாளர்களின் ஆலோசனையைக் கேட்பதுதான் வாழ்க்கைப் பயணம் சிறக்க ஒரே வழி.
புத்தாண்டின் தொடக்க நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், உச்சம் பெற்ற சூரியனோடு சேர்ந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவர்களோடு ராகுவும் இணைந்திருக்கிறார். சூரியன்- ராகு சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. தொழிலில் லாபம் கிடைக்கும். ஆனால் அது வந்த மறுநிமிடமே செலவாகிவிடும். தொழில் பங்குதாரர்களை ஆராய்ந்து தேர்ந்தெடுப்பது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் சில நடைபெறும், சில தடைபடும். உத்தியோகத்தில் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், இப்பொழுது மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உருவாகும்.
பஞ்சம ஸ்தானத்தில் கேது இருப்பதால், பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படும். அவர்களை நெறிப்படுத்த முடியாமலும், வழிநடத்திச் செல்ல இயலாமலும் கவலைப்படுவீர்கள். ஒரு காரியத்தை ஒருமுறைக்கு இருமுறை செய்யும் சூழல் உருவாகும். சொந்தங்களோடும், சுற்றங்களோடும் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். மனக்குழப்பம் அதிகரிக்கும் இந்த நேரத்தில், துணிவும் தன்னம்பிக்கையும் அதிகம் தேவை.
அஷ்டமத்தில் சனி சஞ்சரிப்பதால் எதைச் செய்தாலும் பல முறை யோசித்துச் செய்ய வேண்டும். திடீர், திடீரென சிச்கல்களும், சிரமங்களும் வரலாம். ஒருவருக்கு நீங்கள் செய்யும் நன்மை கூட, அவருக்கு தீமையாகத் தெரியும். பிறருக்கு பணப் பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்திருந்தால், அது நண்பர்களுக்குள் பகையை உண்டாக்கலாம். வம்பு, வழக்குகள் வாசல் தேடி வந்தாலும், அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.
'10-ல் குரு இருந்தால் பதவி மாற்றம் வரும்' என்பது பழமொழி. ஆனால் உங்களை பொறுத்தவரை 10-க்கு அதிபதியான குரு தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலைப்பளு காரணமாக விருப்ப ஓய்வில் வெளிவருவர். நண்பர்களுடன் இணைந்து செய்ய நினைக்கும் தொழில் முயற்சி கைகூடும். ஆனால் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் லாபம் ஏட்டில் இருக்குமே தவிர எதிரில் இருக்காது.
வருடத் தொடக்கத்தில் சுக்ர மங்கள யோகம், புத ஆதித்ய யோகம், சந்திர மங்கள யோகம், சகட யோகம் போன்ற யோகங்கள் இருப்பதால் மலைபோல் வந்த துயர் பனி போல் விலக, உங்கள் சுயஜாதக அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, பக்தி மார்க்கத்திலும் ஈடுபாடு செலுத்துங்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் தோன்றும் பொழுதே மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று உடல்நலத்தை சீராக்கிக் கொள்ளுங்கள்.
குருவின் பார்வை பலன்
ஆண்டின் தொடக்கத்தில் மீனத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிகிறது. வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடமான 2-ம் இடத்தை குரு பார்ப்பதால் கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றிவிடுவீர்கள். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும்.
குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு. சுபவிரயங்கள் அதிகரிக்கும். பொருளாதாரமும் தேவைக்கேற்ப வந்துசேரும். தாய்வழி ஆதரவு உண்டு. அசையாச் சொத்துக்களில் ஒன்றை விற்று மற்றொன்றை வாங்கும் அமைப்பு உண்டு. உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி அகலும். வேலைப்பளு குறையும் விதத்தில் வேறு இலாகாவிற்கு மாற்றப்படுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும்.
சனியின் வக்ரமும், பெயர்ச்சிக் காலமும்
25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். சனி அஷ்டமாதிபதியாகவும் இருப்பதால் வக்ர காலத்திலும் உங்களுக்கு நன்மைகளைச் செய்யும். சுபச் செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகளும், சம்பள உயர்வும் உண்டு. 29.3.2023 முதல் கும்ப ராசிக்குச் சனி செல்கிறார். உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கு செல்லும் சனியால் பொன், பொருட்கள் சேரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
வருடம் முழுவதும் வளர்ச்சி கிடைக்க லட்சுமி கவசம் பாடி, லட்சுமி உடனாய விஷ்ணுவை வழிபடுவது நல்லது. வெள்ளிக்கிழமை வழிபட்டால் நல்லது நடக்கும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டில் வரவைக் காட்டிலும் செலவு கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். கணவன் - மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பிறரிடம் பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் வரலாம். பிள்ளைகளை நெறிப்படுத்திக் கொள்வதோடு உங்கள் மேற்பார்வையிலும் வைத்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலிடத்து அனுகூலமும், கேட்ட சலுகைகளும் சனியின் வக்ர காலத்தில் கிடைக்கும்.