பத்தில் வந்தது குருபகவான்; பதவியில் மாற்றம் உருவாகும்
வெற்றிக்கான நேரம் அறிந்து காரியங்களைச் செய்யும் மிதுன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான், 13.4.2022 முதல் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு வருகிறார். சுமார் ஓராண்டு காலம் அங்கு வீற்றிருந்து அதன் பார்வை பலனால் உங்ளுக்கு நன்மைகளை வழங்குவார். '10-ல் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும்' என்பார்கள்.
குரு இருக்கும் இடத்தின் பலன்
நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு, உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியாவார். அவர் தன் சொந்த வீட்டில் 10-ம் இடத்திலேயே சஞ்சரிப்பது யோகம்தான். எனவே எந்த மாற்றம் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் உங்களிடம் இருக்கும். 10-ல் குரு வரும்பொழுது ஜீவன ஸ்தானம் பலப்படுகிறது. எனவே தொழில், வியாபாரத்தில் புதிய திருப்பங்கள் ஏற்படும். பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறைந்தாலும் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் தன்மை உங்களிடம் உண்டு. கூட்டுத் தொழில்புரிவோர் கூட்டாளிகளிடம் நம்பிக்கை வைப்பதை விட, தாங்களே முழுமையாக தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் குடும்ப ஸ்தானம் பலப்படுகிறது. குடும்ப முன்னேற்றம் கூடும். ஒற்றுமை பலப்படும். இதுவரை குடும்பத்தில் கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் படிப்படியாக மாறும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.
குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் சுகஸ்தானம் புனிதமடைகிறது. எனவே சந்தோஷ வாய்ப்புகள் வந்துசேரும். மாற்று மருத்துவத்தால் ஆரோக்கியத் தொல்லை அகலும். தாயின் உடல்நலம் சீராகும். தாய்வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் தடைபட்டு வந்த காரியங்கள் நடந்தேறும்.
6-ம் இடத்தை குரு பார்ப்பதால், எதிர்ப்பு, வியாதி, கடன் எனப்படும் இடம் புனிதமடைகின்றது. எதிரிகள் உதிரிகளாவர். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாக வந்து சேரும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்சுயசாரத்தில் குரு சஞ்சாரம் (13.4.2022 முதல் 30.4.2022 வரை)
உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் பூரட்டாதி நட்சத்திரக் காலில் தனது சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, நற்பலன்களை வழங்குவார். கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். எதிர்பாராத மாற்றங்கள் இல்லம்தேடி வரும்.
சனி சாரத்தில் குரு சஞ்சாரம் (1.5.2022 முதல் 24.2.2023 வரை)
உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. உத்திரட்டாதி நட்சத்திரக் காலில், அஷ்டமாதிபதியான சனியின் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அவ்வளவு திருப்தியான பலன்கள் கிடைக்காது. முன்னோர் சொத்துக்களில் பாகப்பிரிவினை முடிந்தாலும் எதிர்பார்த்தவை கைக்கு கிடைப்பது அரிது. அவ்வப்போது தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.
புதன் சாரத்தில் குரு சஞ்சாரம் (25.2.2023 முதல் 22.4.2023 வரை)
உங்களுக்கு ராசிநாதனான புதன், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியாவார். ரேவதி நட்சத்திரக் காலில் புதன் சாரத்தில் குரு சஞ்சாரம் செய்யும் பொழுது, ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்துசேரும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். ஊர்மாற்றம், இடமாற்றம் நல்லவிதமாக அமையும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர்.
குருவின் வக்ர இயக்கம் (20.7.2022 முதல் 16.11.2022 வரை)
உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவர், குரு பகவான். எனவே அவர் வக்ரம் பெறும்பொழுது நற்பலன்களை வழங்குவார். இக்காலத்தில் தடையாகி நின்ற சுபகாரியங்கள் படிப்படியாக நடைபெறும். ஆதாயம் தரும் தகவல் அடிக்கடி வந்து சேரும். எதிர்பார்ப்புகள் ஒன்றிரண்டு நிறைவேறாமல் போனாலும் கூடியவரை நிறைவேறிவிடும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தக் குருப்பெயர்ச்சியால் இடமாற்றம், வீடுமாற்றம் போன்றவை ஏற்படலாம். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டாலும் எப்படியாவது காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடி விடும். குடும்பத் தகவல்களை மூன்றாம் நபரிடம் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.
வளம் தரும் வழிபாடு
இந்தக் குருப்பெயர்ச்சியால் இனிய பலன்கள் கிடைக்க புதன்கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சிறப்பு வழிபாடாக யோகபலம் பெற்ற நாளில் தென் குடித் திட்டை ராஜகுரு, பட்டமங்கலம் திசைமாறிய தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.