14.4.2023 முதல் 13.4.2024 வரை
(மிருகசீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)
நல்லது நடக்கும்!
விலகிச் சென்றவர்களையும் விரும்பி அழைத்துக்கொள்ளும் மிதுன ராசி நேயர்களே!
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் உங்களுக்கு இந்த சோபகிருது ஆண்டில் அஷ்டமத்துச் சனி விலகி பலன் கொடுக்கும் விதத்திலேயே ஆரம்ப கிரக நிலை அமைகின்றது. அதுவே மிகப்பெரிய யோகம் தான். கடந்த சில வருடங்களாக 'தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது நல்ல நேரம் தொடங்கிவிட்டது. பகையான நட்புகள் உறவாகும். பண வரவு உச்சம் பெறும். தொழில் வெற்றிநடைபோட புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோக மாற்றங்கள் உள்ளத்தை மகிழ்விக்கும் விதம் அமையும்.
ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்து புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகின்றார். முத்தான இடமான 10-ம் இடத்தில் குரு பகவான் பலம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார்.
பாக்கிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சனி வீற்றிருக்கின்றார். கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் 24.8.2023-ல் மகர ராசிக்கு சென்று வக்ரம் பெறுகிறார். அங்கிருந்து 20.12.2023-ல் கும்ப ராசிக்கு சனி செல்கின்றார். குரு பகவான் 22.4.2023-ல் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகின்றார்.
உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் மூன்று முறை சனியைப் பார்ப்பதன் மூலமாக அக்காலங்களில் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். வியாபாரம், தொழிலில் கவனத்தோடு இருக்க வேண்டும். மறைமுக சூழ்ச்சிகளை எதிர்கொள்ள நேரிடும். உங்கள் மீது உண்மையான அக்கறை கொள்பவர்கள் கூட மனம் மாறிவிடுவர். சங்கிலித் தொடர்போல கடன் சுமை அதிகரிக்கும்.
8.10.2023-ல் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் கேதுவும், 10-ம் இடத்தில் ராகுவும் வரப்போகின்றனர். இந்த மாற்றங்களின் அடிப்படையில் தான் ஆண்டு முழுவதும் உங்களுக்கு மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து கொண்டேயிருக்கும். உங்கள் சுய ஜாதகத்தில் வலிமையான திசாபுத்திகள் நடைபெறுமேயானால் வரும் மாற்றம் வளர்ச்சியைக் கூட்டும். இல்லையேல் பிரச்சினைகளைச் சந்திக்கும் விதத்திலும், பிறரை பகைத்துக் கொள்ளும் விதத்திலும் வாழ்க்கை அமையும். சுய ஜாதகத்தில் பாக்கியாதிபதியின் பலமறிந்து அதற்குரிய தெய்வத்தை தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வருவது நல்லது.
குருப்பெயர்ச்சி!
சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு பகவான் வருகின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவரது பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறத் தொடங்கும். வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகவே அமையும்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பார்வை பதிவதால் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். பணியாளர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். நீங்கள் செய்யும் வர்த்தகம் எதுவாக இருந்தாலும் அது மனதிற்கு பிடித்தவிதமே அமையும். திருமணத் தடை அகலும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்களுக்குத் தொல்லை தந்த மேலதிகாரிகள் மாற்றப்படலாம். சுறுசுறுப்போடு செயல்பட்டு சுற்றத்தார் மதிக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வீர்கள்.
கும்பச் சனி!
ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கின்றார். கும்ப ராசி சனிக்குச் சொந்த வீடு என்பதாலும், அஷ்டமத்துச் சனி விலகியதாலும் நஷ்டமடைந்த தொழிலில் லாபம் கிடைக்கும். கஷ்டங்கள் விலகும். கவலைகள் பறந்தோடும். பெற்றோர் வழி உறவில் இருந்த விரிசல் மறையும். பிள்ளைகளுக்கு பெரிய இடத்து சம்பந்தங்கள் வரலாம். வியாபாரத்தில் அதிக அளவு வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து பொருட்களை பெற்றுக்கொள்ள முன்வருவர். இக்காலத்தில் விலகும் சனியை விரும்பிச்சென்று வழிபடுவது நல்லது.
கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி இடையில் வக்ரம் பெறு கிறார். 24.8.2023-ல் மகரத்திற்கு வந்தும் வக்ரம் பெறு கின்றார். அங்கிருந்து மீண்டும் 20.12.2023-ல் கும்ப ராசிக்கு முறையாகப் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். மகரத்தில் சஞ்சரிக்கும் பொழுது அஷ்டமத்துச் சனி உருவாகின்றது. எனவே இக்காலத்தில் மிகமிக கவனமுடன் இருக்க வேண்டும். குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அலைக்கழிப்பால் இனிமை தராத இடத்திற்கு மாற்றப்படுவீர்கள். உறவினர்களால் உதாசீனம் உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கும்பத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். ெவளிநாட்டு முயற்சியில் தடை ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. வீடு மாற்றங்கள் ஏற்படலாம்.
ராகு-கேது பெயர்ச்சி!
8.10.2023 அன்று மீன ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றார்கள். 10-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். குறைவான முதலீடு செய்து அதிக லாபம் கிடைக்கும் விதத்தில் புதிய தொழில் ஒன்றை உருவாக்கி கொள்வீர்கள். வள்ளல்களின் ஒத்துழைப்பும், வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு அதிகார வர்க்கத்தின் ஆதரவோடு புதிய பொறுப்புகளும், பதவி வாய்ப்புகளும் வந்து சேரும். சர்ப்பக் கிரக பெயர்ச்சிக் காலத்தில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை அனுகூல நாளில் செய்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.
சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். தேக நலன் பாதிக்காமல் இருக்க உணவு வகையில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. பழைய வாகனங்களால் ஏற்படும் பழுது பார்க்கும் செலவை முன்னிட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்து விற்பனையில் ஒரு சிலர் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். வீடு, இடம் வாங்குபவர்கள் பத்திரப் பதிவைச் சரிபார்த்து வாங்குவது நல்லது.
வளர்ச்சி தரும் வழிபாடு!
புத்தாண்டு முழுவதும் சந்தோஷங்களைச் சந்திக்க பவுர்ணமி தோறும் விரதமிருந்து கவசம் பாடி லட்சுமியை வழிபடுவது நல்லது. தஞ்சாவூரில் வீற்றிருந்து அருள் கொடுக்கும் தஞ்சபுரீஸ்வரர் ஆலயம் சென்று வழிபட்டு வந்தால் நெஞ்சம் மகிழும் சம்பவம் நிறைய நடைபெறும்.
பெண்களுக்கான பலன்கள்!
புத்தாண்டில் தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் அதிகரிக்கும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். பெண்களுக்குப் பிறந்த வீட்டிலிருந்து உதவி கிடைக்கும். பிள்ளைகளின் சுபகாரியங்கள் முடிவிற்கு வரும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். வாக்குவாதத்தோடு இருந்த வாழ்க்கை இனி ஆக்கப்பூர்வமாக அமையும். சனியின் வக்ர காலத்திலும், மகரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுதும் பணிச்சுமையும், பண விரயமும் அதிகரிக்கும். தவிர்க்க முடியாத விரயங்களால் தடுமாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டு.
குரு-சனியின் வக்ரம்!
12.9.2023 முதல் 20.12.2023 வரை மேஷத்தில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலம் உங்களுக்கு இனிய காலமாக அமையும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும் பொழுது யோகத்தைக் கொடுக்கும். கருத்து மோதல்களால் காயம்பட்ட மனம் சீராகும். பொறுமையோடு செயல்பட்டதன் விளைவாகப் புதிய பாதை புலப்படும். கல்யாண மேளம் ஒலிக்கும். கனவுகள் அனைத்தும் பலிக்கும். அழியாத புகழுக்கு அஸ்திவாரம் அமைக்கும் விதத்தில் சில காரியம் நடைபெறும். 'தொட்டிலில் பிள்ளை தவழவில்லையே' என்று வருத்தப்பட்ட தம்பதியருக்கு, வழிபட்ட தெய்வங்களால் வாரிசு உருவாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகளும் கிடைக்கும். அலுவலகம் சார்ந்த பயணங்களால் ஆதாயம் உண்டு. உச்சம் பெற்று நீங்கள் வாழவும், ஒளிமயமான எதிர்காலம் அமையவும் வழிபிறக்கும்.
27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும் பிறகு 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகரத்திலும் சனி வக்ரம் பெறுகின்றார். இந்த வக்ர காலம் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் காலமாகும். களைப்பின்றி உழைத்தால் தான் காரியங்களில் வெற்றி கிடைக்கும். இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் உடன் பணிபுரிவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இடமாற்றம் வந்தால் இன்முகத்தோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.