8.10.2023 முதல் 25.4.2025 வரை
மகர ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் 3-ம் இடமான வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். அதே சமயம் கேது பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பிதுர்ரார்ஜித ஸ்தானத்திற்கு வருகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அதே இடத்தில் சஞ்சரித்து அங்குள்ள நட்சத்திரப் பாதசாரங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார்கள்.
இதுவரை அர்த்தாஷ்டம ராகுவாக சஞ்சரித்து வந்த ராகு, மூன்றாவது இடத்திற்கு வரும்போது முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வீரத்தோடும், விவேகத்தோடும் செயல்படுவீர்கள். வெற்றிக்குரிய வாய்ப்புகள் வந்துசேரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பங்காளிப் பகை மாறும். பொருளாதார நிலை திருப்தியளிக்கும் என்றாலும், செலவுகள் வரிசை கட்டி நிற்கும்.
9-ல் சஞ்சரிக்கும் கேதுவால் பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். தந்தை வழி ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய நல்ல தகவல் வரும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வேற்று மனிதர்களின் ஒத்துழைப்பால், தொழிலில் வெற்றி காண்பீர்கள். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
குரு மற்றும் சனி வக்ர காலம்
8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உடன்பிறப்புகளின் வழியில் பிரச்சினைகள் உருவாகும். உயர்மட்ட அதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுப்பர். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. தடைகளும், தாமதங்களும் வந்துசேரும்.
8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். அவரது வக்ர காலத்தில் கூடுதலான விழிப்புணர்ச்சி தேவை. ஆரோக்கியத் தொல்லையால், மருத்துவச் செலவுகள் கூடும். உறவினர் பகை உருவாகும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்ய இயலாது.
சனிப்பெயர்ச்சி காலம்
20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். இக்காலத்தில் ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. இதன் விளைவாக குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெற வழிபிறக்கும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை விலைக்கு வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.
குருப்பெயர்ச்சி காலம்
1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு குரு செல்கிறார். அப்பொழுது அவர் உங்கள் ராசியையும், 9, 11 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகிறார். குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். ஆற்றல் மிக்கவர்கள் உங்கள் பின்னணியில் இருந்து காரியங்களை முடித்துக் கொடுப்பர்.
பெண்களுக்கான பலன்கள்
இந்த ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு வாழ்க்கைத் தேவை பூர்த்தியாகும். வருமானம் போதுமானதாக இருக்கும். கணவன் - மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே இடம் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றமும், இலாகா மாற்றமும் வரலாம்.
வளர்ச்சி தரும் வழிபாடு
மூன்றாம் இடத்து ராகுவால் முன்னேற்றம் கூடவும், ஒன்பதாம் இடத்து கேதுவால் ஒளிமயமான எதிர்காலம் பெறவும், ராகு-கேதுக்களுக்குரிய சர்ப்ப பிரீதியை யோக பலம் பெற்ற நாளில் செய்துகொள்ளுங்கள்.