22-04-2023 முதல் 01-05-2024 வரை
(உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)
நான்கில் வந்தது குருபகவான்! நம்பிக்கை தேவை வழிபாட்டில்!
வருத்தங்களை மனதில் மறைத்து வாழும் மகர ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரித்து வந்த குரு பகவான், 22.4.2023 முதல் 4-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரித்தாலும் அதன் பார்வை பலனால் நன்மைகளைக் கொடுப்பார். ஜென்மச் சனி விலகி இப்பொழுது குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. எனவே பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது என்றாலும் அர்த்தாஷ்டம குரு இடையிடையே தாக்குதல்களையும், தடைகளையும் கொடுக்கத்தான் செய்வார். ஆக்கப்பூர்வமாக சிந்தித்து எதையும் முடிவெடுக்க இயலாது. வரவைவிட செலவு அதிகரிக்கும். கை வலி, கால் வலி என்று ஏதேனும் ஒரு தொல்லை இருந்து கொண்டேதான் இருக்கும். அதிலிருந்து விடுபட வியாழன் தோறும் விரதமிருந்து குரு பகவானை வழிபடுவதோடு சுயஜாதகத்தில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வருவது நல்லது.
குரு இருக்கும் இடத்தின் பலன்!
நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கும் பொழுது மன அமைதி குறையும். விற்பனை செய்த சொத்துக்களால் வில்லங்கங்கள் ஏற்படும். இருப்பினும் குருவை கும்பிடுவதன் மூலம் ஓரளவு நன்மைகள் வந்து சேரும்.
மன்னவன் நான்கில் நிற்க
மலைபோல துயரம் சேரும்!
கண்ணெதிரே வந்த வாய்ப்பு
கைநழுவிச் செல்லும் உண்மை!
முன்னாளில் இருந்த நோய்கள்
முற்றிலும் மீண்டும் தாக்கும்!
பொன்னவன் வழிபாட்டாலே
புதுப்பாதை கிடைக்கும் உண்மை!
என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.
அந்த அடிப்படையில் அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கம் வரும்பொழுது ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். இடம், பூமியால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். நெருங்கிய சொந்தங்களுக்குள் மனஅமைதி குறையும். தாயின் உடல்நலத்திலும் கவனம் தேவை.
வெற்றிகளைக் குவிக்கும் வியாழனின் பார்வை!
இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கின்றார். குரு பார்வை பதியும் அந்த மூன்று இடங்களும் புனிதமடைகின்றது. எனவே இழப்புகளை ஈடுசெய்ய புதிய வழிபிறக்கும். இல்லத்தில் ஏற்படும் வீண் விரயங்களிலிருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். அஷ்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் மாற்று மருத்துவத்தின் மூலம் உடல் நலத்தை சீராக்கிக் கொள்ள இயலும். விலகிச்சென்ற உறவினர்கள் இப்பொழுது மீண்டும் வந்து இணைவர். பணிபுரியும் இடத்தில் நீங்கள் கேட்ட இடமாற்றம் கிடைக்கலாம்.
குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் முத்தான தொழில்கள் வாய்க்க வேண்டும் அல்லவா? எனவே இனி ஜீவனத்திற்கு சிரமமில்லை. படித்து முடித்தும் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது வேலையும், கைநிறைய சம்பளமும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். பொதுநலம் மற்றும் அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இதுவரை கிடைக்காத சலுகைககள் இப்பொழுது கிடைக்கும்.
குரு பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் ஆதாயம் தரும் விதத்தில் அதிகப் பயணங்கள் ஏற்படும். வெளிநாட்டில் இருந்து வியக்கும் தகவல் வரலாம். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்துடன் புனித யாத்திரைகள் செல்வீர்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்!
அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
குரு பகவான் அசுவதி நட்சத்திரக்காலில் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். வரவு திருப்திகரமாக இருந்தாலும் உடனுக்குடன் செலவாகிவிடும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக்கொண்டு நினைத்த இலக்கை அடைய முயற்சிப்பர். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளிடம் பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி யாரிடமும் விவரிக்க வேண்டாம். அதேபோல் குடும்பப் பிரச்சினைகளையும் மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம்.
பரணி நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
குரு பகவான் பரணி நட்சத்திரக்காலில் சுக்ரன் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்கள் ஏராளமாக நடைபெறும். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். எனவே பிள்ளைகளால் பெருமை சேரும். வசதி வாய்ப்புகள் பெருக புது யுக்திகளைக் கையாள்வீர்கள். நீடித்த நோய் அகலும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தங்கம், வெள்ளி போன்றவை வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு உருவாகும்.
கார்த்திகை நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
குரு பகவான் கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர், திடீரென மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும். அஷ்டமாதிபதியாக சூரியன் விளங்குவதால் மனநிம்மதி குறையும். விரயங்கள் அதிகரிக்கும். உறவினர்களும், உடனிருப்பவர்களும் பகையாக மாறலாம். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு வீண் பழிகள் வரலாம். எதையும் நிதானித்துச் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் உருவாகலாம். பணியாளர்கள் தொல்லை அதிகரிக்கும்.
ராகு-கேது பெயர்ச்சி!
மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் 8.10.2023 அன்று மீன ராசிக்கு ராகுவும், கன்னி ராசிக்கு கேதுவும் செல்கின்றனர். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் ராகுவும், ஒன்பதாமிடத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் நெருக்கடி நிலை குறைந்து நிம்மதி கிடைக்கும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. விற்பனையான நிலம் பூமியிலிருந்து வரவேண்டிய நிலுவைத்தொகை வந்து சேரும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் விழாக்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். பெற்றோர் வழிப்பிரச்சினைகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
குருவின் வக்ர காலம்! (12.9.2023 முதல் 20.12.2023 வரை)
இக்காலத்தில் குரு பகவான் அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக்காலில் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உடன்பிறப்புகள் வழியில் பிரச்சினைகள் உருவாகும். உயர்மட்ட அதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுப்பர். பணிபுரியும் இடத்தில் நிம்மதி இருக்காது. உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது. கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும். தடைகளும், தாமதங்களும் வந்து சேரும். குரு 12-க்கு அதிபதியாகவும் இருப்பதால் பயணங்களால் ஒரு சிலருக்கு பலன் உண்டு.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. மாறி மாறி தொல்லை வந்து கொண்டிருக்கிறதே என்று கவலைப்படுவீர்கள். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உடன் இருப்பவர்களாலும், குடியிருக்கும் வீட்டாலும் சில பிரச்சினைகள் உண்டு. கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளின் சுபகாரியங்கள் காலாகாலத்தில் நடைபெறும். குலதெய்வ வழிபாடும் குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும். பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வரலாம். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
இல்லத்துப் பூஜை அறையில் விநாயகப் பெருமான் படம் வைத்து விநாயகர் கவசம் பாடி வழிபடுவது நல்லது. பாதியில் நின்ற பணி மீதியும் நடைபெற ஆதியந்தப் பிரபுவை வழிபட்டு வாருங்கள். அனைத்து யோகங்களும் வந்து சேரும்.