27-12-2020 முதல் 20-12-2023 வரை
கண்டகச் சனியின் ஆதிக்கம், கடமையில் கவனம் இனி தேவை! கடக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 7-ம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு அடியெடுத்து வைக்கின்றார். இதைக் 'கண்டகச் சனி' என்று சொல்வது வழக்கம். இப்போது சனியின் நேரடிப்பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது.
'கண்டகச் சனி' என்றதும், 'ஏதேனும் 'கண்டம்' வந்து விடுமோ' என்று நினைக்க வேண்டாம். சனி மகரத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் கூடும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதால் 'குரு பார்க்கக் கோடி நன்மை' என்பதற்கேற்ப சனியின் கடுமையைக் குறைக்கும். இந்தச் சனிப்பெயர்ச்சி காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது.
ஏழாமிடத்தில் சனி
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்திற்கு வரும் சனி பகவானால், எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரும். குறிப்பாக, உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ உடலில் சிறு அச்சுறுத்தல்கள் தோன்றினாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், 1, 4, 9 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே உடல் ஆரோக்கியம், அறிவாற்றல், முன்னேற்றம், உற்சாகம், சுகஜீவனம், வாகனம், தாய்வழி உறவு, பூர்வீகம், பாக்கியம் ஆகிய அனைத்து ஆதிபத்யங்களிலும் வரும் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனியின் நேரடிப் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்படும். சனியின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் கல்வியில் கரையேற கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த இலக்கை அடைவது கடினம் என்றாலும், குரு பார்வை இருப்பதால் மகர குருவின் சஞ்சார காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் நிறைவேறும். சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாக்கிய ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, தனவரவு தாராளமாக வந்து சேரும். தனாதிபதியாகவும், குடும்ப ஸ்தானாதிபதியாகவும் சூரியன் விளங்குவதால், மங்கல ஓசை மனையில் கேட்க வாய்ப்பு கிட்டும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிநாதனாக சந்திரன் இருப்பதால் வெளிநாட்டு முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். மின்னணுத் துறையிலும், கலைத்துறையிலும் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வில் வெளிவரும் சூழ்நிலையும் ஒருசிலருக்கு ஏற்படும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, வீடு, இடம் சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முடிவு வெற்றி தரும். வீட்டை விரிவு செய்து கட்டுவதில் அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதில் ஆர்வம் கூடும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவதால் பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் வந்து சேரும். இந்த நேரத்தில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கப் போகின்றார். அப்பொழுது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் ஏற்பட்டாலும், கும்ப ராசி சனிக்கு சொந்த வீடு என்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். சொந்தங்களின் பகையை வளர்த்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
குருப்பெயர்ச்சிக் காலம்
கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் குரு வருவதால் ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, மிகச்சிறந்த பலன் உங்களுக்கு கிடைக்கும். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இதனால் தொழில் ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே தொழில் தொடங்க வாய்ப்புகள் கைகூடி வரும். 4-ல் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி தொல்லைகள் உண்டு. தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். பிதுர்ரார்ஜித சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகலும். வாகனங்கள் வாங்கிப் பயணம் செய்யும் முயற்சி கைகூடும். கேதுவின் ஆதிக்கத்தால் சகோதர வர்க்கத்தில் சச்சரவுகள் ஏற்படலாம். அவர்கள் மூலம் வாங்கிய தொகையால் பிரச்சினைகள் உருவாகலாம்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
புதன்கிழமை தோறும் விரதமிருந்து ராமபிரான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ராமர் பட்டாபிஷேக படத்தை இல்லத்து பூஜை அறையில் வைத்து ராமர், சீதா, அனுமன் ஆகியோருக்குரிய பாடல்களைப் பாடி வழிபடுவது நல்லது. ராமபிரான் வழிபாடு நம்பிக்கையை நிறைவேற்றி வைக்கும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகின்றார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதி சனி என்பதால், குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். திடீர் இடமாற்றம் சிக்கலை உருவாக்கும். சனி அஷ்டமாதிபதியாகி வக்ரம் பெறுவதால் ஒருசில காரியங்கள் திடீரென முடிவாகும். குறிப்பாக பிள்ளைகளின் கல்யாணம், பெற்றோர்களின் மணிவிழாக்கள் நடைபெற்றுச் சுபவிரயங்களை உருவாக்கும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய பெயர்ச்சியாக அமையும். அதிக விரயங்கள் ஏற்படும். உறவினர் பகை ஏற்பட்டு உள்ளத்தில் தெளிவில்லாமல் செயல்பட வைக்கும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்காமல் இருக்க, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. உடன்பிறப்புகளின் குணமறிந்து செயல்படுவதன் மூலமே ஆதாயம் கிடைக்கும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு திடீர் இடமாற்றங்கள் வரலாம். வேலையில் பிரச்சினைகளும் உண்டு. நிதானத்துடன் செயல்பட்டால் நிம்மதி கிடைக்கும்.