8.10.2023 முதல் 25.4.2025 வரை
கடக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் 9-ம் இடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். அதே நேரம் கேது பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திற்கு வருகிறார். அடுத்து வரும் ஒன்றரை ஆண்டுகள் இவர்கள் இருவரும், தாங்கள் சஞ்சரிக்கும் நட்சத்திர பாதசாரங்களின்படி பலன்களை வழங்குவார்கள்.
ராகு பகவான் 9-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். இதனால் உங்கள் பாக்கிய ஸ்தானம் பலப்படுகிறது. தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். தந்தை வழி உறவால் ஆதாயம் உண்டு. தர்ம காரியம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். பங்காளிகள் பக்க பலமாக இருப்பர். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. மங்கல காரியங்கள் மனையில் நடைபெற வழிபிறக்கும்.
3-ம் இடத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, ஆன்மிகப் பணிகளை அதிகம் செய்ய நேரிடும். கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். முன்னோர் கட்டிவைத்து சிதிலமடைந்த கோவில்களை மீண்டும் சரிசெய்து குடமுழுக்கு விழா செய்யும் யோகம் கூட ஒருசிலருக்கு கைகூடும். பொருளாதாரத்தில் இதுவரை இருந்த பற்றாக்குறை அகலும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றியாகும்.
குரு மற்றும் சனி வக்ர காலம்
8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். குரு வக்ரம் பெறுவது ஒரு வகையில் நன்மைதான் என்றாலும், அவர் பாக்கியாதிபதியாகவும் இருப்பதால் திடீர் திடீரென விரயங்கள் ஏற்படும். பிள்ளைகளால் பிரச்சினைகள் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு குறையும். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு மேலதிகாரிகள் ஒத்துழைப்பு செய்வர்.
8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். அவர் வக்ரம் பெறும் காலங்களில், குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். இருப்பினும் அஷ்டமத்துச் சனி வக்ரம்பெறுவது ஒருவகைக்கு நன்மைதான். சுபச்செலவு அதிகமாகும்.
சனிப்பெயர்ச்சி காலம்
20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் தடை, தாமதங்களை சந்திப்பீர்கள். மனதில் நினைத்ததை செய்ய இயலாது. கருத்து வேறுபாட்டால் பகை உருவாகலாம். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் 'போதுமான மூலதனம் இல்லையே' என்று கவலைப்படுவீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் உங்கள் நேரடிப் பார்வையில் செய்யுங்கள். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.
குருப்பெயர்ச்சி காலம்
1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு குரு செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கப்போகிறார். அந்த வகையில் சகோதர வழியில் ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். கடன் சுமை குறையும். பழைய பங்குதாரர்கள் விலகினாலும் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். பொருளாதாரம் உயரும்.
பெண்களுக்கான பலன்கள்
ராகு- கேது பெயர்ச்சியின் விளைவாக குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கணவன் - மனைவி இருவரும் விட்டுக்கொடுத்துச் செல்வது நன்மை தரும். பணம் வந்த மறுநிமிடமே செலவாகிவிடும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் பணியை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம்.
வளர்ச்சி தரும் வழிபாடு
9-ம் இடத்து ராகுவால் உன்னதமான பலன் கிடைக்கவும், 3-ம் இடத்து கேதுவால் முன்னேற்றம் கூடவும், நாக தெய்வங்களை வழிபாடு செய்யுங்கள்.