ஒன்பதில் வந்தது குரு பகவான்; ஒளிமயமான வாழ்வமையும்
உதவி செய்வதன் மூலம் நற்பெயரைப் பெறும் கடக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 13.4.2022 முதல் 9-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானம், குருவிற்கு சொந்த வீடாகும். அவர் அங்கிருந்து உங்கள் ராசியை பார்க்கும் பொன்னான நேரம் இது. இதனால் பொருள் வளம் அதிகரிக்கும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்திரவாதம் கிடைக்கப் போகிறது.
குரு இருக்கும் இடத்தின் பலன்
நவக்கிரகங்களில் சுபகிரகமான குரு பகவான், தற்போது இருக்கும் இடம் உங்கள் ராசிக்கு யோகம் செய்வதாகும். 'ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்' என்பார்கள். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிக்கப்போகும் குரு, மகிழ்ச்சியை வாரி வழங்கப்போகிறார். தொழிலில் இதுவரை இருந்து வந்த தடைக்கற்கள் அகலும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். லாபம் திருப்திகரமாக இருக்கும். நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் இல்லத்தில் கேட்கும்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு 1, 3, 5 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். உங்கள் ராசியை குரு பார்க்கும் இவ்வேளையில் சிறப்பான வாழ்க்கை அமையும். மனக்குழப்பத்தோடு இருந்த நீங்கள் தெளிவாக சிந்திப்பீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால், முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழில், உத்தியோகம், அரசியல், பொதுநலம், வழக்குகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உங்கள் திறமை பளிச்சிடும். கடன்சுமை குறைய புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.
பஞ்சம ஸ்தானத்தை குரு பார்ப்பதால், நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ, அவை அனைத்தும் கிடைக்கும். பிள்ளைகளின் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள் சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (13.4.2022 முதல் 30.4.2022 வரை)
உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் பூரட்டாதி நட்சத்திரக் காலில் தன்னுடைய சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார நிலை மேன்மை அடையும். தொழில் முயற்சி வெற்றியாகும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். புதிய உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும். தெய்வத் திருப்பணிக்கு கொடுத்து உதவுவீர்கள். வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு அங்கேயே குடியுரிமை கிடைக்கும்.
சனி சாரத்தில் குரு சஞ்சாரம் (1.5.2022 முதல் 24.2.2023 வரை)
உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சனி பகவான். உத்திரட்டாதி நட்சத்திரக் காலில், அஷ்டமாதிபதியான சனியின் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் வேளையில், மிகுந்த கவனம் தேவை. புதிது புதிதாக பிரச்சினைகள் தோன்றும். பிள்ளைகள் வழியிலும் பிரச்சினைகள் வரலாம்.
புதன் சாரத்தில் குரு சஞ்சாரம் (25.2.2023 முதல் 22.4.2023 வரை)
உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். ரேவதி நட்சத்திரக் காலில் புதன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, சகோதர வர்க்கத்தினரின் பகை மாறும். பாகப்பிரிவினைகளை சுமுகமாக முடித்துக் கொள்வீர்கள். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக புதிய வாகனம் வாங்க வேண்டுமென்று நினைத்தவர்கள், இப்பொழுது அதற்கான முயற்சி எடுக்கலாம். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம்.
குருவின் வக்ர இயக்கம் (20.7.2022 முதல் 16.11.2022 வரை)
இக்காலத்தில் குரு பகவான் சனியின் சாரத்தில் சஞ்சரித்து வக்ரம் பெறுகிறார். இதனால் குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திப்பீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லலாம். குடும்பத்தில் தினமும் பிரச்சினைகளும், போராட்டங்களும் தலைதூக்கும். மூன்றாம் நபரின் குறுக்கீடுகளால் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தக் குருப்பெயர்ச்சி வெற்றிச் செய்திகளை வழங்கப் போகிறது. வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் விருப்பம்போல் அமையும். கண்டகச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் குடும்பச்சுமை கூடுதலாக இருக்கும். கணவன் - மனைவிக்குள் பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்பட விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள்.
வளம் தரும் வழிபாடு
இந்தக் குருப்பெயர்ச்சியால் இனிய பலன்கள் கிடைக்க சனிக்கிழமை தோறும் அனுமன் கவசம் பாடி அனுமனை வழிபடுவதோடு, சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் வீற்றிருந்து அருள்வழங்கும் வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகப் பெருமானை வணங்குங்கள்.