ஆண்டு பலன்- மேஷம்

Update: 2022-04-05 11:03 GMT

14.4.2021 முதல் 13.4.2022 வரை

மேஷம்

பொருளாதார நிலை உயரும்

(அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

மேஷ ராசி நேயர்களே!

பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டு, பெருமைகளைக் குவிக்கும் ஆண்டாக அமையப் போகின்றது. ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், தன ஸ்தானத்தில் சுக்ரன் வீட்டில் பரிவர்த்தனை யோகம் பெற்று இருக்கின்றார். 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு பகவான், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே இந்த ஆண்டு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். மதிநுட்பத்துடன் செயல்பட்டு மக்கள் செல்வாக்கை பெறப்போகிறீர்கள்.

புத்தாண்டின் தொடக்கத்தில் கிரகங்கள் நிலைபெற்றிருக்கும் இடம் மற்றும் அவை பலமாக இருக்கின்றனவா? என்பதை முதலில் அறிந்து செயல்படுவது நல்லது. சுய ஜாதகம் பலம் பெற்றிருக்குமேயானால் கோட்சார ரீதியாக வரும் குறுக்கீடுகள் எதுவும் பாதிக்காது. நடைபெறும் திசாபுத்தி பலம் இழந்து இருக்குமேயானால் மனக்கசப்புகளும், மாற்றங்களும் வந்துசேரும். அதுபோன்ற அமைப்பு உள்ளவர்கள், யோகபலம் பெற்ற நாளில் அதற்குரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். இந்த அடிப்படையில் உங்கள் ராசியில் சூரியன், புதன், சுக்ரன், சந்திரன் ஆகிய 4 கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருந்து சர்ப்ப தோஷத்தை உருவாக்குகிறார்கள். தொழில் ஸ்தானத்தில் சொந்த வீட்டில் சனிபகவான் பலம்பெற்றிருக்கிறார். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து பொருளாதார நிலையை உயர்த்தும்.

2-ல் ராகு இருப்பதால் வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டி, குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவீர்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. இயல்பான வாழ்க்கையில் சில குறுக்கீடுகள் வரலாம். அதற்கு அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பதே காரணம். எனவே, கணவன்-மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். ஆரோக்கியத் தொல்லைகள் இடையிடையே வந்து கொண்டே இருக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் அதில் இருந்து விடுபட இயலும்.

குருவின் வக்ர இயக்கம்

புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். 14.9.2021 முதல் 12.10.2021 வரை, மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெறுகின்றார். எனவே, இந்த காலகட்டங்களில் நிதானமும், பொறுமையும் அதிகம் தேவைப்படும். எதிர்மறை சிந்தனைகள் அடிக்கடி வந்து அலைமோதும். அதைத் தவிர்த்து நேர்மறை சிந்தனைகளை வரவழைத்துக் கொள்ளுங்கள். பிடிவாத குணத்தால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். வருமானப் பற்றாக்குறையால், சேமிப்புகள் கரையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் அல்லது இடமாற்றங்கள் கைநழுவிச் செல்லலாம்.

குருப்பெயா்ச்சி காலம்

ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குருபகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, அதன் பிறகு 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன்பிறகு 13.4.2022-ல் மீன ராசிக்குப் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால், வெற்றிகள் ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே, வழக்குகளில் இருந்த தேக்கநிலை மாறும். தெளிவு பிறக்கும். பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால், மனையில் மங்கல ஓசை கேட்கும். வாசல்வரை வந்து கைவிட்டுப் போன வரன்கள், மீண்டும் வந்து கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். வீடு கட்டும் முயற்சி, வெளிநாட்டு அனுகூலம், வாகன சேர்க்கை போன்றவை உருவாகும். 14-4-2022 அன்று குரு பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியாக விளங்கும் குரு, விரய ஸ்தானத்திலேயே பலம் பெறுவதால் வரவைக் காட்டிலும் செலவு கூடும். சுப விரயங்களை மேற்கொள்வதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து விடுபடலாம்.

ராகு-கேது பெயர்ச்சி காலம்

21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ஜென்ம ராகுவும், சப்தம கேதுவுமாக விளங்குவதால், மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். எதையும் துணிந்து செய்ய இயலாது. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவு வரலாம். ஒரு சிலருக்கு இடமாற்றம், வீடுமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகும்.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனி பகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சனி என்பதால், இக்காலத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. சூடுபிடித்த வியாபாரத்தில் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்காது.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய் -சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் எதையும் துணிந்து செய்ய இயலாது. அனைவருமே கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இது. நோய் தொற்று, இயற்கை சீற்றம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். உங்களைப் பொறுத்தவரை ராசிநாதனாக செவ்வாய் இருப்பதால், ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. குடும்பத்தில் அமைதி குறையும். 'செலவு அதிகரிக்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டு உங்களுக்கு யோக வாய்ப்புகளை அள்ளித் தரும். ஆனால் தேக நலனில் கவனம் அவசியம். குரு பார்வையால் கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். தாய், தந்தை மற்றும் சகோதரர்களின் ஆதரவோடு இல்லறத்தை நல்லறமாக அமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். மறுக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்படலாம். சனியின் வக்ர காலத்தில் விழிப்புணர்ச்சி தேவை. செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்து வாருங்கள். வாழ்க்கை வளமாகும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகப்பெருமானை வழிபடுங்கள். குறிப்பாக யோகபலம் பெற்ற நாளில், பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் வழிபாட்டை முறையாக செய்து வந்தால் முன்னேற்றம் கூடும். முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்