பன்னிரண்டில் வந்தது குரு பகவான்; பண விரயங்கள் அதிகரிக்கும்
பிறருக்கு உதவும் பெருந்தன்மையான குணம் படைத்த மேஷ ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான், 13.4.2022 முதல் 12-ம் இடமான விரய ஸ்தானத்திற்கு வருகிறார். இதனை 'பயண ஸ்தானம்' என்றும், 'அயனசயன ஸ்தானம்' என்றும் சொல்வார்கள். இந்த இடத்தில் குரு சஞ்சரிப்பதால் வரவைக்காட்டிலும் செலவு கூடும். 'எவ்வளவு பணம் வந்தாலும் மறுநிமிடம் செலவாகிவிடுகிறதே' என்ற எண்ணம் தோன்றும். இருப்பினும், சுபவிரயங்களைச் செய்வதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து தப்பிக்கலாம்.
குரு இருக்கும் இடத்தின் பலன்
நவக்கிரகங்களில் குருவை 'சுபகிரகம்' என்பார்கள். அப்படிப்பட்ட கிரகம் இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கே பலன். சனி இருக்கும் இடத்திற்கு பலன் கொடுப்பார். குரு பார்க்கும் இடத்திற்கு பலன் கொடுப்பார். அந்த அடிப்படையில் குரு பகவான் இருக்கும் இடம், உங்கள் ராசிக்கு விரய ஸ்தானம். ஆகையால் வரவு ஒருமடங்கு என்றால் செலவு இருமடங்காகும். வாழ்க்கைத் தேவைகள் இறுதி நேரத்தில் பூர்த்தியாகும். பழைய கடன்களை அடைக்க வருமானம் வந்தாலும், புதிய கடன் வாங்கும் சூழ்நிலையும் சிலருக்கு ஏற்படும். தங்களுக்கோ, தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ, ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உருவாகலாம். உறவினர்களுக்கோ, மற்றும் உடன்பிறப்புகளுக்கோ திருமணச்செலவுகள், குழந்தை பிறப்புச் செலவுகள், பெண் பிள்ளைகளின் சுபச்சடங்கு செலவுகள், பெற்றோர்களின் மணிவிழாக்கள் என்று பலவிதமாகவும் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வீடு வாங்கும் அல்லது வீட்டைப் பழுது பார்க்கும் யோகம் உருவாகும். பிள்ளைகளுக்கு நல்ல வேலைகிடைத்து, உதிரி வருமானம் வந்து, குடும்ப பொருளா தாரத்தை உயர்த்தும்.
குருவின் பார்வை பலன்
மீனத்திற்கு பெயர்ச்சியாகும் குரு, உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களை பார்க்கப் போகிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். அதன் பார்வை பலத்தால் பல நன்மைகள் கிடைக்கும். 4-ம் இடத்தைப் பார்ப்பதால், கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையைச் சரிவரச் செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். தாய்வழி ஆதரவு உண்டு. இடம், பூமி சம்பந்தமாக எடுத்த முயற்சி, வாகனம் வாங்கும் முயற்சியில் இருந்த தடை அகலும். பணிபுரிபவர்களுக்கு, கூடுதல் பொறுப்பு வரலாம்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (13.4.2022 முதல் 30.4.2022 வரை)
உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியானவர் குரு. அவர் பூரட்டாதி நட்சத்திரக் காலில், தன் சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பாக்கிய ஸ்தானம் பலம்பெறும். இக்காலத்தில் குரு பகவான், செலவிற்கேற்ற வரவைக் கொடுத்துக் கொண்டேயிருப்பார். குடும்பச்சுமை கூடும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். பெற்றோரின் ஆதரவோடு சில பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வீர்கள். திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடும். இடமாற்றம், வீடுமாற்றம், பதவி மாற்றம் வரும் நேரம் இது.
சனி சாரத்தில் குரு சஞ்சாரம் (1.5.2022 முதல் 24.2.2023 வரை)
உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர், சனி பகவான். அவரது சாரத்தில் உத்திரட்டாதி நட்சத்திரக் காலில் குரு சஞ்சரிக்கும்போது, தொழில்வளம் சிறப்பாகும். எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், மருத்துவம் சம்பந்தமான தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது ஒரு இனிய காலமாக அமையும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
புதன் சாரத்தில் குரு சஞ்சாரம் (25.2.2023 முதல் 22.4.2023 வரை)
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதி, புதன். ரேவதி நட்சத்திரக் காலில் புதன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும்போது, மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். வழக்குகள் சமாதானத்திற்கு வரும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து இணைவர். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் பலம் குறையும். கொடுத்த கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியைத் தரும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும்.
குரு வக்ர இயக்கம் (20.7.2022 முதல் 16.11.2022 வரை)
இக்காலத்தில் குரு பகவான், சனியின் சாரத்தில் சஞ்சரித்து வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. எனவே இக்காலத்தில் நிதானமும், பொறுமையும் அவசியம். எதிர்மறைச் சொற்களை தவிர்த்து, நேர்மறைச் சொற்களை பேசுங்கள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. எனவே சலுகைகள் கிடைப்பது தாமதப்படும். வழிபாட்டின் மூலமே நல்ல பலன்களை வரவழைத்துக் கொள்ள இயலும்.
பெண்களுக்கான பலன்கள்
குருப்பெயர்ச்சியின் விளைவாக பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் கவனம் தேவை. வருமானப் பற்றாக்குறை அதிகரிக்கும். கணவன்- மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படுங்கள். கூட்டுக் குடும்பத்திலும் பிரச்சினை உண்டு. உங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பாராத மாற்றம் வரலாம். அலுவலகத்தில் சகப் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையும். வியாழன் தோறும் விரதமும், குரு வழிபாடும் நன்மை தரும்.
வளம் தரும் வழிபாடு
இந்தக் குருப்பெயர்ச்சியால் இனிய பலன் கிடைக்க, நவக்கிரகத்தில் உள்ள குருவை வழிபடுவதோடு, சிறப்பு வழிபாடாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வழிபாட்டையும் மேற்கொண்டால் வாழ்க்கை வளமாகும்.