Update: 2022-05-23 15:21 GMT

14.4.2022 முதல் 13.4.2023 வரை


(அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்:சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்

செல்வ நிலை உயரும்

மேஷ ராசி நேயர்களே!

இந்த தமிழ் புத்தாண்டு, பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை உங்களுக்குத் தரப்போகின்றது. எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். மதிநுட்பத்தோடு செயல்பட்டு மக்களின் செல்வாக்கைப் பெறப்போகிறீர்கள்.

புத்தாண்டின் தொடக்க நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், தனாதிபதி சுக்ரனோடு இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்ப ஸ்தானாதிபதியும், களத்திர ஸ்தானாதிபதியுமான சுக்ரனோடு உங்கள் ராசிநாதன் இணைந்திருப்பதால், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிக லாபம் தரக்கூடிய விதத்தில் தொழிலும் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். வருமானப் பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் சம்பள உயர்வும், நல்ல பொறுப்புகளும் கிடைக்கலாம்.

உங்கள் ராசியிலேயே சூரியன், புதனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியன் உச்சம் பெற்று, அவரோடு சகாய ஸ்தானாதிபதி புதன் இணைந்திருப்பதால் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

ஜென்மத்தில் ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பதால் சர்ப்ப தோஷ ஆதிக்கம் இருக்கிறது. எனவே அதற்குரிய பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. ஒருசில சமயங்களில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை உருவாகும். பொருளாதார மேம்பாடு கருதி புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது, பங்குதாரர்களின் சாதகம் பக்கபலமாக இருக்கின்றதா? என்பதை ஆராய்ந்து பார்த்து அதற்கு ஏற்ப தொழில்களை அமைத்துக் கொள்வது நல்லது.

தொழில் ஸ்தானத்தில் சனி பலம்பெற்றிருப்பதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். என்றாலும் அதன் வக்ர காலத்தில் கொஞ்சம் கவனமுடன் செயல்பட வேண்டும். கூட்டாளிகளால் பிரச்சினை ஏற்படலாம். குருவைப் பொறுத்தவரை வருடத் தொடக்கத்திலிருந்து விரய ஸ்தானத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. விரயாதிபதி விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இந்த ஆண்டு விரயங்கள் கூடும். எனவே சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக இல்லத்தில் சுப காரியங்களை நடத்துவது, வீட்டிற்குத் தேவையான உபகரணங்களை வாங்குவது போன்ற சுப விரயங்களை மேற்கொள்ளலாம்.

குருவின் பார்வை பலன்

மீனத்தில் சஞ்சரிக்கும் குரு, இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். வாகனம், வீடு, தாய், சவுகர்யம், எதிர்ப்பு, வியாதி, கடன், இழப்பு, விரயம் ஆகியவற்றைக் குறிக்கும் ஸ்தானங்களைக் குரு பார்த்தால் வருமானம் திருப்திகரமாக இருக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. மாற்று மருத்துவத்தால் உடல் ஆரோக்கியம் சீராகும். கடன்சுமை ஓரளவு குறையும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு இழந்த பதவிகள் கூட மீண்டும் கிடைக்கும்.

8.8.2022 முதல் 16.11.2022 வரை, மீன ராசியில் குரு வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கிறார். பெற்றோர் வழியில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உற்றார், உறவினர்களால் விரயங்கள் ஏற்படும். வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வந்துசேரும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நிதானமும், பொறுமையும் தேவைப்படும் நேரம் இது. பிடிவாதக் குணத்தையும், கோபத்தையும் குறைத்துக் கொள்ளுங்கள். முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு சலுகைகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். பணியிட மாற்றத்திலும் திருப்தி ஏற்படாது.


சனியின் வக்ரமும், பெயர்ச்சி காலமும்

25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். 29.3.2023-ல் கும்ப ராசிக்கு சனி, பெயர்ச்சியாகிச் செல்கின்றார். சனியின் வக்ர காலத்தில் தொழிலில் கவனம் தேவை. பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் உருவாகலாம். பொதுவாக சனிப்பெயர்ச்சிக்குப் பின்னால் லாப ஸ்தானம் பலம்பெறுகிறது. எனவே தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். கூட்டுத் தொழிலில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

விரய ஸ்தானத்தில் குரு இருப்பதால் குரு கவசம் பாடி குருவை வழிபடுவதோடு வியாழன் தோறும் விரதமிருப்பது நல்லது. குரு வழிபாடு குதூகலம் வழங்கும்.

பெண்களுக்கான பலன்கள்

புத்தாண்டில் கொடுக்கல்- வாங்கல்களில் திருப்தி ஏற்படும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். கணவன் - மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி, கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பிடிவாதக் குணத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வது நல்லது. சர்ப்ப தோஷம் இருப்பதால் ராகு-கேது பரிகாரத்தை முறையாக யோகபலம் பெற்ற நாளில் அனுகூல ஸ்தலங்களில் செய்து கொள்ளுங்கள்.


கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

17.5.2022 முதல் 25.6.2022 வரை மீனத்தில் உள்ள செவ்வாயை, மகரத்தில் உள்ள சனி பார்க்கிறார். 9.10.2022 முதல் 28.11.2022 வரை மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார்.

உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சனியை 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் பார்ப்பதால் குடும்பத்தில் மன அமைதி குறையும். கொடுக்கல்- வாங்கல்களில் பிரச்சினை அதிகரிக்கும். பயணங்களில் இடையூறு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

மேலும் செய்திகள்