அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)
வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நேரம்
கும்ப ராசி நேயர்களே!
வரும் புத்தாண்டில் விரயச் சனியின் ஆதிக்கம் முடிந்து ஜென்மச் சனியின் ஆதிக்கம் தொடங்கப்போகிறது. குருப்பெயர்ச்சி மற்றும் ராகு-கேதுக்களின் பெயர்ச்சியும் நடைபெறப் போகிறது. எனவே சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையும். எண்ணிய எண்ணங்களை எளிதில் முடிப்பதில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும், எதிர்பார்ப்புகள் கடைசியில் நிறைவேறிவிடும். ஏழரைச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் மனக்குழப்பங்கள் அதிகரிக்கலாம். இதைச் செய்வோமா?, அதைச் செய்வோமா? என்ற இரட்டைச் சிந்தனை ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கும். தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் இருந்தால் தடைகள் விலகும்.
புத்தாண்டு கிரக நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, விரய ஸ்தானத்தில் இருக்கிறார். எனவே விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் கவனம் தேவை. 2-ம் இடத்தில் குருவும், 3-ம் இடத்தில் சந்திரனோடு ராகுவும் சஞ்சரிக்கின்றனர். சுக ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் பெற்றிருக்கிறார். 9-ம் இடத்தில் கேதுவும், லாப ஸ்தானத்தில் சூரியன், புதனும், விரய ஸ்தானத்தில் சுக்ரனும் அமர்ந்தபடி இந்த ஆண்டு தொடங்குகிறது.
புத்தாண்டு தொடக்கத்தில் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே கடன்சுமை கொஞ்சம் குறையும். கவலைகள் தீர வழிபிறக்கும். திடீர் இடமாற்றம், வாகன மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலக நேரிடும். நடக்கும் தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
கும்ப - சனி சஞ்சாரம்
29.3.2023 அன்று சனி பகவான், அவிட்டம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிச் செல்கிறார். 24.8.2023 அன்று மகரத்திற்கு வக்ர இயக்கத்தில் வரும் அவர், 20.12.2023 அன்று மீண்டும் கும்ப ராசிக்குச் செல்கிறார். இடையில் கும்ப ராசியிலும், மகர ராசியிலும் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால், திடீர் திடீரென மாற்றங்கள் வந்துசேரும். நல்ல வாய்ப்புகள் வந்தாலும் ஆரோக்கியத் தொல்லையின் காரணமாக அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாமல் போகலாம். பணிபுரியும் இடத்தில் உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர் களிடம் கொடுப்பதன் மூலம், அது நிறைவேறாமல் போவதோடு பிரச்சினைகளும் உருவாகலாம். குறிப்பாக ஜென்மச் சனியின் ஆதிக்கக் காலத்தில் வரவு ஒரு மடங்கு வந்தால், செலவு இருமடங்கு ஆகலாம். எதையும் யோசித்து செய்வதோடு அனுபவஸ்தர்களின் ஆலோ சனை கேட்டு புது முயற்சியில் ஈடுபடுவது நல்லது.
மேஷ - குரு சஞ்சாரம்
22.4.2023 அன்று குரு பகவான், அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. 7-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த தம்பதியர் களுக்குள் ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்கள் அகலும். 'வேலைக்கு விண்ணப் பித்திருந்தும் வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, வேலைவாய்ப்பு அமையும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வரலாம். உத்தி யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வந்தாலும், ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலமறிந்து அதை ஏற்றுக்கொள்வது நல்லது.
குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். பூர்வீக சொத்து சம்பந்தமான பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவும், வெளிநாடு சென்று பணிபுரிவது சம்பந்தமாகவும் ஏதேனும் முயற்சிகள் எடுத்தால் அது நடைபெறும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தீர்த்த யாத்திரைகள், தெய்வ வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டு வீர்கள்.
11-ம் இடத்தில் குரு பார்வை பதிவதால் லாப ஸ்தானம் புனித மடைகிறது. எனவே போதுமான அளவிற்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படும். தொட்டது துலங்கும். தொழில்வளம் சிறக்கும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்சுமை குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், தலைமைப் பதவிகளும் கிடைக்கலாம். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும்.
ராகு-கேது பெயர்ச்சி
8.10.2023 அன்று ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன ராசியில் ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, திரண்ட செல்வத்தை வழங் கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக இருக்கும். துயரங்களில் இருந்து விடுபட, துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் தடையாக இருந்த காரியங்கள் தானாக நடைபெறத் தொடங்கும்.
அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். அலைச் சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. நாடு மாற்றங்களும், வீடு மாற்றங்களும் வந்து சேரும். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். செல்வ வளம் பெருக நீங்கள் எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். இக்காலத்தில் எதிர்மறைச் சிந்தனைகளை தவிர்த்து நேர்மறைச் சிந்தனைகளை மேற்கொள்வது நல்லது.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
இந்தப் புத்தாண்டில் 4 முறை செவ்வாய் - சனியின் பார்வை ஏற்படுகிறது. உங்கள் ராசிநாதனும், 3, 10-க்கு அதிபதியான செவ்வாயும் பகைக் கிரகம் என்பதால், இருவரும் பார்த்துக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல. எதிரிகளின் பலம் கூடும். ஆரோக்கியத்திற்காக அதிகம் செலவிடுவீர்கள். எதிர்கால பயம் அதிகரிக்கும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
அஷ்டமி திதியில் பைரவரை வழிபடுங்கள். காரைக்குடி அருகே பெரிச்சிக் கோவிலில் வீற்றிருந்து அருளும் பைரவர் மற்றும் சனி பகவானை யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டால் எல்லா வளமும், நலமும் கிடைக்கும்.
சனி மற்றும் குருவின் வக்ர காலம்
27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகர ராசியிலும் சனி பகவான் வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலத்தில் நன்மை, தீமை இரண்டும் கலந்துதான் நடைபெறும். விரயாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும், உங்கள் ராசிநாதனாகவும் சனி இருப்பதால், ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. திடீர் இடமாற்றங்கள் மனக்கவலையைத் தரும். உறவினர்களையும், நண்பர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் இது.
12.9.2023 முதல் 19.12.2023 வரை மேஷ ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு தன - லாபாதிபதியான குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. கொடுக்கல்-வாங்கல்களில் சிக்கல்களும், சிரமங்களும் உருவாகலாம். குடியிருக்கும் வீட்டால் பிரச்சினைகள் ஏற்படும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. நல்ல காரியங்கள் நடைபெறுவதில் தடை ஏற்படும். நண்பர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். பணிபுரிபவர்களுக்கு இனிமை தராத இடமாற்றம் வரும்.
பெண்களுக்கான பலன்கள்
இப்புத்தாண்டின் தொடக்கத்தில் தனாதிபதியும், விரயாதிபதியும் வலிமை பெற்றுச் சஞ்சரிப்பதால் வரவும், செலவும் சமமாகும். ஏழரைச் சனியில் விரயச் சனியும், பிறகு ஜென்மச் சனியும் நடைபெறப் போகிறது. எனவே குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. வாங்கிய இடத்தால் பிரச்சினை வரலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். தாய்வழி ஆதரவு உண்டு. புதிய சொத்துக்கள் வாங்குவது, பிள்ளைகள் திருமணம் போன்ற சுபச்செலவுகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.