2025 புத்தாண்டு ராசி பலன் - துலாம்
பழைய கடன்கள் அடைபடும். பூர்விக சொத்துக்களில் இருந்த வம்பு வழக்குகள் தீரும்.
பொதுப்பலன்கள்
துலாம் ராசியினருக்கு இந்த ஆண்டு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். அஷ்டமத்தில் குரு, 5-ல் சனி, 6-ல் ராகு என்ற கிரக அமைப்பில் புத்தாண்டு பிறக்கிறது. மார்ச் மாதம் சனி 6-ம் இடத்திற்கும், குரு 9-ம் இடத்திற்கும், ராகு, கேதுக்கள் 5, 11-ம் இடத்திற்கும் மாற இருப்பது அதிர்ஷ்டமான அமைப்பாகும். கடந்த காலங்களில் பட்ட துன்பங்களுக்கு மருந்தாக கிரக பெயர்ச்சிகள் அமைகின்றன. குடும்பத்தில் புது மகிழ்ச்சி பிறக்கும். சுப காரியங்கள் நல்லவிதமாக நடந்தேறும்.
பழைய கடன்கள் அடைபடும். பூர்விக சொத்துக்களில் இருந்த வம்பு வழக்குகள் தீரும். தொலைதூர பிரயாணங்கள் ஏற்படும். பட்டம் பதவிகள் உங்களை தேடி வரும். சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் குடியிருக்கும் வீட்டுக்கு இன்டீரியர் டெக்கரேஷன் அழகுபட செய்வீர்கள். படிக்காதவர்களாக இருந்தாலும் கூட கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவற்றை சிறப்பாக பயன்படுத்தும் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.
குடும்பம், பொருளாதாரம்
தொழில் மற்றும் பணி என்ற வகையில் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்கள் மீண்டும் குடும்பத்தோடு இணைவார்கள். உடன்பிறந்த சகோதர சகோதரிகள் சம்பந்தப்பட்ட கல்வி மற்றும் திருமண விஷயங்களை திட்டமிட்டு நடத்துவீர்கள். புதிய நண்பர்களுடைய தொடர்பின் மூலம் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பொருளாதார ரீதியாக கடந்த காலங்களில் இருந்த தடைகள் அகன்று நல்ல தன வரவு ஏற்படும். புதிய வண்டி வாகனம், வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும். மனதில் தெளிவு பிறக்கும். பெண்மணிகள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்ப சுப காரியங்களை அவர்களாகவே முன் நின்று நல்லவிதமாக நடத்தி முடிப்பார்கள்.
தொழில், உத்தியோகம்
தொழில்துறையினர் தங்களுடைய தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான நல்ல சூழல் அமைந்துள்ளது. பழைய கடன்கள் அனைத்தையும் தீர்ப்பீர்கள். புதிய இடத்தில் தொழிலை மாற்றியமைத்து நடத்துவீர்கள். வாடிக்கையாளர் ஆதரவு பல மடங்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் உழைப்பின் மூலம் நிர்வாகத்தின் மதிப்பு மரியாதையை பெறுவார்கள். அலுவலக ரீதியாக தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். சக ஊழியர்களிடம் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
கலை, கல்வி
கலைஞர்களை தொழில் ரீதியாக புறக்கணித்தவர்களே இப்பொழுது அழைத்து நல்ல வாய்ப்புகளை தருவார்கள். சக கலைஞர்கள் ஆதரவோடு புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழில் ரீதியாக உங்களுடைய திறமைகளை வெளிக்காட்டும் நல்ல காலம் அமைந்துள்ளது. நீதித்துறை, கட்டுமான பொருள்கள், ரியல் எஸ்டேட் ஆகிய துறையினர் நல்ல முன்னேற்றம் அடைவர். மாணவர்களுக்கு பெற்றோர் சொல்படி நடப்பர். உடற்பயிற்சி, யோகா ஆகிய பயிற்சிகளில் ஆர்வம் கொள்வார்கள். மருத்துவம், இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் படிப்பில் சிறப்பு பெறுவார்கள். படித்து முடித்தவர்களுக்கு உடனடியாக பணி கிடைக்கும்.
கூடுதல் நன்மை பெற..
புற்றுக் கோவிலுக்கு பால் வாங்கி கொடுத்து, அபிஷேகம் செய்வது நல்லது. மாதம் ஒருமுறை அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று அனாதை ஆசிரமங்களில் அன்னதானம், ஆடைதானம் செய்வதும் பல நன்மைகளை அளிக்கும்.
கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்