அற்புதங்கள் நிறைந்த சுருளி வேலப்பர் கோவில்

வேலப்பர் கருவறையில் சிவன், விஷ்ணு, விநாயகர் காட்சி தருவது சிறப்பு.

Update: 2024-10-04 00:30 GMT

தமிழ் கடவுளாம் முருகப் பெருமானின் அற்புதங்களை எடுத்துரைக்கும் தலமாக விளங்குகிறது, தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள வேலப்பர் திருக்கோவில். 'சுருளிவேலப்பர்' என்ற பெயரில் முருகப் பெருமான் இந்தத் தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இது ஒரு குகைக்கோவிலாகும். இங்குள்ள விபூதிக் குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிப்பது, 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறைபோல மாறுவது போன்ற வியப்புக்குரிய விஷயங்களும் இங்கு குவிந்து கிடக்கின்றன.

தல புராணம்

மகாவிஷ்ணுவின் மகளான வள்ளியை, மலையரசனான நம்பிராஜன் என்பவர் வளர்த்து வந்தார். அவளை சில திருவிளையாடல்கள் நடத்தி முருகப்பெருமான் மணம் முடித்துக் கொண்டார். திருமண சீராக நம்பிராஜன், தனது ஆட்சிக்குட்பட்ட மலைப் பிரதேசங்களை முருகப்பெருமானுக்குக் கொடுத்தார். அதில் ஒன்றுதான் இந்த சுருளிமலை. இங்கு சில காலம் முருகப்பெருமான், வள்ளியுடன் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

ஒரு சமயம் சனி பகவான், தன் கிரக சஞ்சாரத்தின்படி தேவர்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. தேவர்கள், தங்களைக் காத்தருளும்படி இங்குள்ள முருகனை தஞ்சமடைந்தனர். சுருளிமலை வேலப்பரும், தேவர்களுக்கு அடைக்கலம் தந்து காத்தருளினார். இத்தலத்தில் உள்ள அருவியானது இனிய சுருதியுடன் கொட்டுவதால், 'சுருதி' என்று அழைக்கப்பட்டது. பின்னர் இது காலப்போக்கில் மருவி 'சுருளி' என்றானது. ஆகவே இத்தல இறைவனும் 'சுருளிவேலப்பர்' என்று பெயர் பெற்றார். இத்தல முருகப்பெருமான் பழனியில் வீற்றிருப்பதைப் போலவே, ஆண்டி கோலத்தில் இருந்து அருள்பாலிப்பதால், 'சுருளியாண்டி' என்றும் அழைக்கப்படுகிறார்.

குன்று தோறாடல் கோவில்

திருமுருகாற்றுப்படையில் மலைகள் அனைத்தும் முருகனுக்கே சொந்தம் எனக்குறிப்பிடும் நக்கீரர், மலைக்கோவில்களை "குன்று தோறாடல்" என்கிறார். இத்தலமும் குன்று தோறாடல் என்றே அழைக்கப்படுகிறது. சுருளி வேலப்பர், மலையில் இயற்கையாகத் தோன்றிய குடவரை சன்னிதியில் காட்சி தருகிறார். அருகில் விநாயகர், மகாலிங்கம், சந்தான கிருஷ்ணர், வீரபாகு, ராமபிரான், லட்சுமணன் உள்ளனர். இம்மலைப்பகுதியில் சித்தர்கள் வாழ்வதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வேலப்பர் கருவறையில் சிவன், விஷ்ணு, விநாயகர் காட்சி தருவது சிறப்பு. முருகன் குடிகொண்டதால் "நெடுவேள்குன்றம்'' என்றழைக்கப்படும் இம்மலையில் அனைத்து தெய்வங்களும் குடிகொண்டிருக்கின்றனர் என்பது ஐதீகமாதலால் அனைவருக்கும் தனி சிலைகள் உள்ளன.

ஆலய சிறப்பு

ஆடி, தை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் அருவியில் தீர்த்தமாடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். ஆடி அமாவாசை அன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும். குழந்தை இல்லாத பக்தர் ஒருவருக்கு, சுருளி வேலப்பரே மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதிச்சடங்குகள் செய்து வைத்தார் என்கிறது தல புராணம். எனவே, ஆண் வாரிசு இல்லாதவர்களும், இறுதிக்காலத்தில் ஆறுதல் தேடுபவர்களும் இறைவனை வேண்டி வழிபடுகிறார்கள்.

இங்கு பூத நாராயணப் பெருமாள் கோவில் இருக்கிறது. இந்தப் பெருமாள் சன்னிதிக்குள், சிவலிங்கம் இருப்பது சிறப்பு. இதனால் இங்கு விபூதி, குங்குமம் பிரசாதமாக தரப்படுகிறது. சடாரி ஆசீர்வாதமும் செய்கிறார்கள். உச்சிக்கால பூஜையின் போது துளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் பெருமாளுக்கு பரிவார மூர்த்தியாக நரசிம்மரும், சிவனுக்கு பரிவார மூர்த்தியாக தட்சிணாமூர்த்தியும் இருக்கிறார்கள். இவர், இடது கையில் சின்முத்திரையுடன் காட்சியளிக்கிறார்.

சுவாமிக்கு விசேஷ அபிஷேகங்கள், பால்குடம் எடுத்து முடிக்காணிக்கை செலுத்தி, சுரபி நதியில் நீராடி வணங்க பாவம் நீங்கும். மேலும் நல்வாழ்வு, வேண்டும் வரம் கிடைக்கும். தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. அன்னதானம் செய்வது பிரதானம். பிரார்த்தனை நிறைவேறியதும் அன்னதானம் செய்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர். தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

ராவணனை விரட்டிய விஷ்ணு

ராவணன் தனது தவத்தால் அண்ட சராசரங்கள் அனைத்தையும் ஆளும்படியான வரத்தைப் பெற்றான். அந்த வரத்தின் வலிமையால், தேவர்கள், முனிவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்தி கொடுமைகள் செய்தான். அவனுக்கு முடிவு கட்ட எண்ணிய தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் ஆகியோர் இங்குள்ள கயிலாயநாதர் குகையில், மகாவிஷ்ணு தலைமையில் ஆலோசனை செய்தனர். அவர்களை அழிக்க ராவணேஸ்வரன் தனது அரக்கர் படையுடன் இங்கு வந்தான். தேவர்களைக் காக்க மகாவிஷ்ணு பூத சொரூபத்துடன் பஞ்சபூதங்களாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். அவரது கோலத்தை கண்டு பயந்த ராவணேஸ்வரன், தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். இவ்வாறு தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் தவம் புரிந்த கயிலாய குகையின் மேல் பகுதியில்தான் சுருளிவேலப்பர் ஆலயம் அமைந்திருக்கிறது.

கயிலாய குகை

சிவபெருமானின் திருமணத்தின்போது, அனைவரும் இமயமலைக்குச் சென்றுவிட, வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகம் சமநிலையை இழந்தது. சிவபெருமான், அகத்தியரை அழைத்து தென்பொதிகை மலைக்கு சென்று உலகை சமநிலைப்படுத்துமாறு கூறினார். அகத்தியரும் அதன்படியே செய்தார். அப்போது சிவபெருமான், அகத்தியருக்கு பல தலங்களில் தனது திருமணக் காட்சியை காட்டி அருளினார். அதே போல் இங்குள்ள குகையிலும் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார். இதனால் தான் இக்குகை கயிலாய குகை என்று அழைக்கப்படுகிறது.

இந்த குகைக்குள் ஒவ்வொருவராக ஊர்ந்து சென்று வழிபட முடியும். குகையின் உள்பகுதியில் இருவர் மட்டும் அமர்ந்து பூஜை செய்யலாம். குகைக்குள் இருந்து தீர்த்தம் வந்து கொண்டிருக்கிறது. குகைக்குள் சென்றுவருவதே யோகாசன பயிற்சி செய்வது போலாகும். கோவில் வளாகத்தில் விபூதிப்பாறை உள்ளது. தீர்த்தம் பட்டு இந்த பாறையின் துகள்கள் வெண்ணிறத்தில் இருக்கிறது. இந்த துகளையே பிரசாதமாக தருகிறார்கள்.

இங்கு சர்ப்ப குகை, பாட்டையா குகை, கிருஷ்ணன் குகை, கன்னிமார் குகை என பல குகைகள், தனித்தனி தீர்த்தங்களுடன் உள்ளன. ஓம்கார வடிவில் உள்ள இந்த மலையில் கன்னிமார்கள் நடனமாடிய ரேகைகளுடனான பாறை உள்ளது. இதில் தவம் செய்தால் பாவங்கள் விலகி முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்