தோனியின் ரசிகர் என்றால் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் : ரிஷப் பண்ட்-க்கு சேவாக் அறிவுரை
இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ரிஷப் பண்ட்-க்கு அறிவுரை கூறியுள்ளார்.
மும்பை,
15 ஆவது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதன் 34 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் டெல்லி அணி விளையாடியது.
இறுதி ஓவரில் 3 சிக்சர்களை வீசிய போதும் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேலும் இந்த போட்டியில் நடந்த நோ பால் சர்ச்சையால் கோபத்தின் உச்சிக்கு சென்ற ரிஷப், பேட்ஸ்மேன்களை வெளியே வருமாறு சைகை காட்டினார். இதனால், போட்டியில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
இதனால் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு ஐபிஎல் விதிமுறை மீறலுக்காக போட்டிக்கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரிஷப் பண்ட்-க்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சேவாக் அறிவுரை கூறியுள்ளார். அவர் கூறுகையில், "டெல்லி அணிக்கு ரிஷப் பந்த் முக்கிய வீரர். தொடக்க வீரர்கள் சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தாலும் போட்டியின் நடு ஓவர்களில் ரன் குவிப்பது முக்கியம்.
பந்த் கடைசி ஓவரில் 20-25 ரன்கள் எடுக்கும் திறன் கொண்டவர், ஆனால் அதற்கு அவர் கடைசி ஓவர் வரை கிரீஸில் இருக்க வேண்டும். அவர் எம்எஸ் தோனி ரசிகராக இருந்தால், அவரிடம் இருந்து அவர் கற்றுக்கொள்ள வேண்டும் " என அவர் தெரிவித்தார்.